"என் கணவரை மீட்டுத் தாருங்கள்!" - கண்ணீர் விடும் 'ஆட்டோகிராஃப்' கோமகன் மனைவி

'ஆட்டோகிராஃப்' படத்தில் இடம்பெற்ற 'ஒவ்வொரு பூக்களுமே..' பாடல் காட்சியில் வரும் கோமகனின் மனைவி கணவரை மீட்டுத்தரக் கேட்கிறார்.

`ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே வாழ்வென்றால் போராடும் போர்க்களமே...' - `ஆட்டோகிராஃப்' படத்தில் சினேகா பாடுவதுபோல் அமைந்திருந்த இந்தப் பாடல் காட்சியில், `மனிதா உன் மனதைக் கீறி விதை போடு மரமாகும்...' என்ற வார்த்தைகளை உச்சரித்திருப்பார், பார்வையற்ற மாற்றுத்திறனாளி இளைஞர் ஒருவர். அவர் பெயர் செர்ரி கோமகன். பிறவியிலேயே பார்வையைப் பறிகொடுத்தவர். `ஆட்டோகிராஃப்' படத்தில் நடித்த பிறகு, ஒருசில படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். தற்போதும் இசையமைத்து வருகிறார். இவரைக் காதலித்து மணந்தவர், அனிதா. இந்தத் தம்பதிக்கு மோனஸ், மோவின் என இரு மகன்கள். `ராகப்ரியா' என்கிற பெயரில் மாற்றுத்திறனாளிகள் இசைக்குழுவையும் நடத்தி வந்த கோமகன் மீது தற்போது மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கக் கிளம்பியிருக்கிறார், அனிதா.

என்ன பிரச்னை? அனிதாவிடம் பேசினோம்.

கோமகன்

``எனக்குச் சொந்த ஊர், நாகர்கோவில். சென்னைக்கு வேலை தேடி வந்தேன். மாதவரத்துல இருக்கிற தேசியப் பார்வையற்றோர் நலச் சங்கத்துல `mobility instructor' வேலை கிடைச்சது. பார்வையற்றவர்களுக்கு உதவுகிற பணி. பார்வையற்றவர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கித் தர்ற அந்தச் சங்கம் மூலமா, வயர் சேர் பின்ற வேலை பார்த்துட்டு வந்தவர், கோமகன். அந்த வேலைக்கான ஊதியம் வாங்க சங்கத்துக்கு அடிக்கடி வருவார். அப்போ எனக்கு அவருடன் பழக்கம். கனிவாப் பேசின அவரோட பேச்சை நம்பி, அவரோட வாழலாம்கிற முடிவுக்கு வந்துட்டேன். `ரெண்டு கண்ணும் தெரியாதவனைக் கட்டிக்கிட்டு என்ன செய்யப்போற?'னு எங்க வீட்டுல பலத்த எதிர்ப்பு. அதைக் கண்டுக்காம, இவரை நான் கல்யாணம் பண்ணிக்கிட்டதால, என்னோட வீடும் எனக்குப் பகையாச்சு.

சில வருடங்கள் எங்க இல்வாழ்க்கையில எந்தப் பிரச்னையும் இல்லை. ரெண்டு குழந்தைகள் பிறந்தாங்க. பிறகு அவரோட நடவடிக்கைகள்ல மாற்றம் தெரிய ஆரம்பிச்சது. இதுக்கிடையில ஐ.சி.எஃப்-ல அவருக்கு வேலை கிடைச்சது. கச்சேரி, `ஆட்டோகிராஃப்' படத்துக்குப் பிறகு கிடைச்ச சினிமா வாய்ப்புகள், அரசு வேலை... எல்லாம் அவரை மாத்திட, சில பெண்களோட அவருக்குப் பழக்கம் உண்டாச்சு. ஒருமுறை ஒரு பொண்ணுகிட்ட இவர் தப்பா நடந்துக்க முயற்சி செய்து, விவகாரம் போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் போச்சு. குழந்தைகளுக்காகவும் குடும்ப கௌரவத்துக்காகவும் எல்லாத்தையும் பொறுத்துக்கிட்டு இருந்தேன். 

அடுத்து, பசங்களைக் கொண்டுபோய் விட அவங்க ஸ்கூலுக்குப் போயிட்டிருந்த பழக்கத்துல அங்க வேலை செய்த ஒரு டீச்சர்கூட பழக்கம். நான் பள்ளிக்கூடத்துல போய் இது குறித்து புகார் செய்ததும், பள்ளி நிர்வாகம் அந்த டீச்சரை வேலையை விட்டு நிறுத்தினாங்க. `உன்னாலதான் அவளுக்கு வேலை போச்சு'னு அன்னைக்கு அந்த டீச்சரோட தனிக்குடித்தனம் போனவர்தான். இப்போவரைக்கும் வீட்டுக்கு வரலை. நானும் பசங்களும் தனியா இருக்கோம்.

ஒருநாள் இல்லாட்டி ஒருநாள் திருந்தி வந்திடுவார் என்ற நம்பிக்கையில நானும் இதைப்பத்தி இதுவரை வெளியில பேசலை. இப்போ நிலைமை கையை மீறிப் போகுது. லோன் எடுத்து வீடு கட்டி வாடகைக்கு விட்டிருந்தோம். அந்த வாடகை போக, செலவுக்குக் கொஞ்சம் பணம் அனுப்பிக்கிட்டு இருந்தார். 

கோமகன்

இப்போ கொஞ்சநாளா அந்தப் பெண்ணை நானும் என் பசங்களும் குடியிருக்கிற வீட்டுக்குக் கூட்டிவரத் துடிக்கிறார். நான் அதுக்குச் சம்மதிக்கணுமாம். அதாவது, ரெண்டு பேரோடயும் சுமுகமா ஒரே வீட்டுல குடும்பம் நடத்த ஆசைப்படுறார். நான் இதுக்குச் சம்மதிக்கலை. அதனால, அந்தப் பொண்ணும் அவரும் சேர்ந்து, `எங்களோட அட்ஜஸ்ட் பண்ணிட்டு வாழு. இல்லைனா உன் வாழ்க்கைதான் வீணாப்போகும்'னு என்னை மிரட்டத் தொடங்கியிருக்காங்க. கூடவே என் பசங்களை எனக்கெதிரா திருப்புற வேலையும் நடக்குது. எந்த நேரத்திலேயும் என்னை நடுத்தெருவுல நிறுத்திடுவாங்களோனு பயம் வருது. வீட்டு எதிர்ப்பை மீறி, இவரைக் கல்யாணம் செய்துகிட்டதுக்கு... இதுவரை இவர் பண்ணது போதும். இதுக்குமேல இந்த விஷயத்தை என்னால பொறுக்கமுடியாது. அதனாலதான், ஒரு தீர்வு கிடைக்கட்டும்னு எல்லாத்தையும் பேசத் துணிஞ்சிட்டேன். எத்தனையோ பேச்சு வார்த்தைகள் நடந்து. எதுவுமே பலன் தரலை. அதனாலதான், இந்த முடிவு.

`ஆட்டோகிராஃப்' வெளியான பிறகு அந்தப் புகழ் மூலமா இவருக்கு நிறைய கச்சேரி வாய்ப்புகள் அமைஞ்சது. அதனால, இயக்குநர் சேரன், நடிகை சினேகா ரெண்டுபேர் மேலேயும் ரொம்ப மதிப்பு வெச்சிருந்தார். `அவங்க சொன்னா இவர் கேட்பார்'னு நினைச்சு, ரெண்டு தடவை அவங்க அட்ரஸ் வாங்கிக் கிளம்பியிருக்கேன். ஆனா, `இந்த அசிங்கத்தை அவங்ககிட்ட சொல்லணுமா?'னு பாதியிலேயே திரும்பி வந்துட்டேன்.

ஒண்ணு, காவல்துறையில புகார் கொடுத்து `என் கணவரை மீட்டுத்தாங்க!'னு கேட்கப்போறேன். இல்லை, `என்கூட வரமுடியாது'னு அவர் பிடிவாதமா இருந்தா, விவாகரத்துக்கான சட்டபூர்வ நடவடிக்கைகளை எடுக்குறதைத் தவிர, எனக்கு வேற வழி தெரியலை!" என்கிறார், அனிதா.

கோமகன்

கோமகனிடம் அனிதாவின் குற்றச்சாட்டுகள் குறித்து கேட்டோம்.

``பிரச்னைகளைப் பேசித் தீர்த்துக்கலாம்னு சொன்னேன். அவங்க அதுக்குச் சம்மதிக்கலை. சட்டபூர்வ தீர்வுக்கு முயற்சி செய்யுறாங்கனா, வேற வழி இல்ல, நானும் அதை எதிர்கொள்ளத் தயாராக வேண்டியதுதான்! ஆனா, இதை எல்லாத்தையும் தாண்டி என்னை அசிங்கப்படுத்தணும்கிறதுதான், அனிதாவின் நோக்கமா இருக்கு. என்ன நடக்குமோ நடக்கட்டும்!" என்கிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!