வெளியிடப்பட்ட நேரம்: 19:28 (02/08/2018)

கடைசி தொடர்பு:19:28 (02/08/2018)

"'பிக் பாஸ்'ல என்னதான் இல்ல... ஆனா, நான் பார்க்கலை!" - வெற்றிமாறன்

விகடன் மாணவப் பத்திரிகையாளர் திட்டத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட இயக்குநர் வெற்றிமாறன் மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கு அளித்த பதில்கள் இது.

விகடன் மாணவப் பத்திரிக்கையாளர் திட்டம் சில தினங்களுக்கு முன்பு சென்னையில் நடந்தது. தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் இருந்து வந்த மாணவப் பத்திகையாளர்கள், நிகழ்ச்சிக்கு  சிறப்பு விருந்தினராக வந்திருந்த இயக்குநர் வெற்றிமாறனிடம் கேள்விகளைக் கேட்டனர். அதற்கு வெற்றிமாறன் கூறிய பதில்களின் தொகுப்பு இது. 

வெற்றிமாறன்

"குட் டச், பேட் டச் பற்றி சினிமாவில் தெளிவாகச் சொல்லித் தரமுடியுமா?"

"முதலில் இதைப்பற்றி வீட்டில், பள்ளியில் பேசணும். பிறகு, சினிமாவுக்கு வரணும். சினிமாவுல இதைத் தெளிவா சொன்னா, சென்சார் போர்டு, 'இதை பதினைஞ்சு வயசுக்குக் குறைவான பசங்க, பொண்ணுங்க பார்க்கக்கூடாது'னு சொல்லிடுவாங்க. யாருக்காக படம் எடுக்கிறோமோ, அவங்களே அதைப் பார்க்க முடியாம போயிடும். தவிர, பெண்கள் யாரும் குடும்பத்தோட வந்து படம் பார்க்கமாட்டாங்க. ஆனாலும், இதுமாதிரி விஷயங்களை சினிமாவில் நிச்சயம் பேசுவோம். அதுக்கான வாய்ப்பு வரட்டும்!"   

"இன்றைக்கு ஏராளமான இளைஞர்கள் சினிமாவை நம்பி வர்றாங்க. அவர்களுக்கு நீங்க சொல்ற விரும்புற விஷயம்?"

"பத்து வருடங்கள் கழிச்சு பார்த்தா, இயக்குநராக வாய்ப்பு தேடி சினிமாவுக்கு வருவது குறைஞ்சிருக்கும். ஏன்னா, சினிமாவுல பிசினஸ் என்கிற விஷயம் கடினமா மாறிக்கிட்டு இருக்கு. எதிர்காலத்துல ஸ்க்ரிப்ட் ரைட்டர் அதிகமாக வந்து, அவங்களோட கதைகளை இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்களுக்கு விற்கிற சூழல் வரும். கதையை வாங்குற இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள் மனசு வெச்சு அவர்களை இயக்குநர் ஆக்குனா, உண்டு. அப்படி ஒரு சூழலுக்குத்தான் சினிமா இப்போ நகர்ந்துக்கிட்டு இருக்கு. என் உதவி இயக்குநர்கள் எல்லோர்கிட்டேயும் நான் சொல்ற ஒரு விஷயம், 'சீக்கிரம் படம் பண்ணுங்க. ஏன்னா, நாலைஞ்சு வருடம் கழிச்சு படம் பண்றது கஷ்டமான விஷயமா மாறிடும்!'ங்கிறதுதான். ஏன்னா, இன்னைக்கு தியேட்டர்ல ரிலீஸ் பண்றதுக்காகப் படம் எடுக்கிறவங்க குறைஞ்சிடுவாங்க. டிஜிட்டல் தளங்களுக்குப் படம் எடுக்கிறவங்க அதிகமாயிடுவாங்க. எதிர்காலத்தில் சினிமாவுக்கு வர ஆசைப்படுற இளைஞர்கள் எச்சரிக்கையா இருங்க!" 

"'Casting couch' சினிமாவில் இருக்கிறதா குற்றம் சாட்டுறாங்க. ஒரு இயக்குநரா உங்க கருத்து என்ன?"

"உலகம் முழுக்க இருக்கிற எல்லாத் துறைகளிலும் இது இருக்கு. இன்றைக்கு இருக்கிற பெண்கள் இதை வெளியே கொண்டு வந்து பேசுறது நல்ல விஷயம். 'நீ எனக்கு இதைப் பண்ணா, நான் உனக்கு சான்ஸ் தருவேன்'னு சொல்றது, நிச்சயம் தப்பான விஷயம்."  

"சினிமாவுல கெட்ட வார்த்தைகள் பேசுனா, மீயூட் பண்றாங்க சரி... ஒரு கட்சியின் பெயரைச் சொன்னாலும் மியூட் பண்றாங்களே... ஏன்?" 

"கெட்ட வார்த்தைகள் பேசுனாகூட மியூட் பண்ணாதீங்கனுதான் நான் சொல்வேன். ஒரு முழு வாக்கியத்தைக் கெட்ட வார்த்தை இல்லாமல் என்னாலே பேசவே முடியாது. ஆனா, என் சினிமாவுல எந்த ஆர்ட்டிஸ்டும் கெட்ட வார்த்தை பேசுறதில்லை. அரசை சினிமாவிலிருந்து காப்பாத்துறதுதான், சென்சார் போர்டோட வேலையா இருக்கு. மக்களைக் காப்பத்துறதோ, சினிமாவைக் காப்பத்துறதோ இல்லை. அரசும், அரசு இயந்திரமும் சினிமாவால் பாதிக்கப்படக் கூடாதுங்கிறதுதான், சென்சார் போர்டின் நோக்கமா இருக்கு."

வெற்றிமாறன்

"பெரிய பட்ஜெட் படங்கள் மட்டும்தான் குடும்பத்தோட தியேட்டரில் பார்க்கக் கூடியதா இருக்கு. இந்தச் சூழ்நிலையில் சினிமா எப்படி அடுத்த கட்டத்துக்கு நகரும்?"

"சின்னத்திரைதான்  சினிமாவை ஆளுதுனு சொல்லலாம். 'பிக் பாஸ்' மாதிரியான லைவ் என்டர்டெயின்மென்ட் வந்துடுச்சு. நான் அதைப் பார்க்கிறதில்லை. பிக் பாஸ் நிகழ்ச்சியில செக்ஸ், வன்முறை, சிரிப்பு... எல்லாம் இருக்கு. முக்கியமா, அடுத்தவங்க அறையை எட்டிப் பார்க்க முடியுது. அப்புறம் எப்படி தியேட்டரில் படம் பார்க்க வருவாங்க?!"  

"'வடசென்னை' பகுதியில் இருக்கிறவங்க ரெளடிகள் அப்படீங்கிற கருத்து மக்களிடம் இருக்கு. இப்படிப்பட்ட நிலையில 'வடசென்னை'ங்கிற பெயரைப் படத்துக்கு வைத்து, ஒரு கேங்ஸ்டர் படம் எடுக்குறது தப்புதானே?"

"கண்டிப்பா தப்புதான்! 'வடசென்னை' பகுதியில் கேங்ஸ்டர் மட்டுமே கிடையாது. தவிர, இந்தப் படமும் கேங்ஸ்டர்ஸ் பற்றிய கதை கிடையாது. குறிப்பிட்ட மக்களின் வாழ்க்கை, பிரச்னைகளைப் பற்றிதான் படமா எடுத்திருக்கேன். ரெளடிகள் மட்டுமே 'வடசென்னை'யில் இல்லைங்கிற கருத்தையும் பதிவு செய்ய முயற்சி பண்ணியிருக்கேன்." 

"குறைந்த ஆடைகளோட சினிமாவில் நடிக்கிற நடிகைகளைப் பார்த்து வளரும் குழந்தைகளை, எப்படி நல்லபடியா வளரும்?" 

"உடை நமது வசதிக்கான விஷயம். உடை சார்ந்த நம்முடைய பார்வையே, நாம யாருங்கிறதை சொல்லிடும், எங்க இருந்து வர்றோம்ங்கிறதை சொல்லிடும். அவரவர் வசதிக்கு ஏற்ற மாதிரி ஆடைகள் அணியிறாங்க. அதை நாம தொந்தரவு செய்யக்கூடாது. அப்படியே வேற யாராவது செஞ்சாலும், நாம அதைத் தவிர்க்கணும். விமர்சனம் பண்ணக்கூடாது." 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்