``புதுப்படங்கள் கிடைப்பதில்லை!" - சிங்கிள் ஸ்கிரீன் திரையரங்குகள் இனி என்னாகும்?

சிங்கிள் ஸ்கிரீன் திரையரங்க உரிமையாளர்கள் சிலர் தங்கள் கருத்துகளையும் அவர்களின் நிலையையும் நம்மிடம் பகிர்ந்துகொண்டார்கள். அவர்களின் குற்றச்சாட்டுகளுக்குத் திரையரங்கு உரிமையாளர் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியன் பதிலளித்திருக்கிறார்.

``புதுப்படங்கள் கிடைப்பதில்லை!

மிழகத்தில் மல்டிபிளெக்ஸ் கலாசாரம் தொடங்கிய பிறகு, சிங்கிள் ஸ்கிரீன் திரையரங்குகள் நலிவடைந்து, அதன் உரிமையாளர்களின் நிலை மிகவும் பாதிப்படைந்தது. அதில் பலர் தங்கள் தியேட்டர்களை கல்யாண மண்டபமாகவோ, ஷாப்பிங் மாலாகவோ மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். சினிமா நம்மைக் காப்பாற்றும் என்ற நம்பிக்கையில் சிலர் தியேட்டர்களைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். சிங்கிள் ஸ்கிரீன் உரிமையாளர்கள் சிலர் தங்கள் கருத்துகளையும் அவர்களின் நிலையையும் நம்மிடம் பகிர்ந்துகொண்டனர். 

திரையரங்குகள்

``நாங்க எங்க அப்பா காலத்துல இருந்து தியேட்டர் நடத்திக்கிட்டு இருக்கோம். இப்போ டெக்னாலஜி நிறைய மாற்றிடுச்சு. மல்டிபிளெக்ஸ்னு ஒரு தியேட்டர்ல நிறைய ஸ்கிரீன் இருக்கிற சூழல் வந்திடுச்சு. அங்கே 160 ரூபாய்னு டிக்கெட்டுக்கு விலை வெச்சிருக்காங்க. அதுமட்டுமல்லாமல், ஆன்லைன்ல புக் பண்ணா அதுக்குத் தனி விலை. வெளியே இருந்து ஸ்நாக்ஸ் எடுத்துட்டுப் போகக் கூடாது. உள்ளேதான் வாங்கணும்... அங்கே இப்படிப் பல நிர்பந்தங்கள் இருக்கு. ஆனா, இதெல்லாம் எங்க ஊர்ல இருக்கிற தியேட்டர்ல நடைமுறைப் படுத்தினால், வர்ற கொஞ்சபேரும் வராமப் போயிடுவாங்க. இன்னும் எங்க தியேட்டர்ல டிக்கெட் விலை 60 ரூபாய்தான். எங்களை மாதிரி சிங்கிள் ஸ்கிரீன் வெச்சிருக்கிற பல தியேட்டர்களுக்குப் புது படங்களை ரிலீஸ் பண்ண விடமாட்டேங்கிறாங்க. புதுப்படங்களை எந்தெந்தத் திரையரங்குகளுக்குக் கொடுக்கணும்னு விநியோகஸ்தர்கள் முடிவு பண்ணி, குறிப்பிட்ட சில தியேட்டர்களுக்குத்தான் கொடுக்குறாங்க.

அப்போ, நாங்கெல்லாம் என்ன பண்றதுனு கேட்டா, `புதுப்படம் வர்ற வரைக்கும் பழைய படங்களை ஓட்டுங்க'னு சொல்றாங்க. இப்போவும் எங்க தியேட்டர்ல `டிக் டிக் டிக்' படம்தான் ஓடிக்கிட்டு இருக்கு. அதுக்குப் பிறகு பல புதுப்படங்கள் வந்திடுச்சு. ஆனா, எங்களுக்குக் கிடைக்கிறதில்லை. சிங்கிள் ஸ்கீரின் தியேட்டர்கள்லேயே ஏ/சி வெச்ச தியேட்டர்கள் நிறைய இருக்கு. அதுக்குக்கூட புதுப்படங்களைக் கொடுக்கமாட்டேங்கிறாங்க. தமிழ்நாடு முழுக்க 70 சதவிகிதம் சிங்கிள் ஸ்கிரீன் தியேட்டர்களின் நிலை இதுதான். எங்க வாழ்வாதாராம் என்ன ஆகுறது? நாங்க எப்படிச் சம்பாதிக்கிறது?" எனத் தங்களின் நிலைமையை எடுத்துக் கூறுகிறார்கள், சிங்கிள் ஸ்கிரீன் உரிமையாளர்கள் சிலர். 

சிங்கிள் ஸ்கீரின் தியேட்டர்

இது குறித்து விநியோகஸ்தரும், திரையரங்கு உரிமையாளர் சங்கத் தலைவருமான திருப்பூர் சுப்ரமணியன் பேசியபோது, ``தமிழ்நாட்டுல ஆயிரம் தியேட்டர்கள் இருக்குனா, அதுல 80 சதவிகிதம் தியேட்டர்கள் சிங்கிள் ஸ்கீரின்தான்! இருபது சதவிகிதம்தான் மல்டிபிளெக்ஸ் தியேட்டர்கள். ஒரு ஸ்கிரீன்ல 500 ஆடியன்ஸ் வந்து படம் பார்த்த காலமெல்லாம் போயிடுச்சு. இப்போ, 100 பேர் வந்தாலே ஆச்சர்யம். இப்படியான சூழல்ல, 100 ஆடியன்ஸுக்காக தியேட்டர் நடத்தி அதைப் பராமரிக்கிறது பெரிய கஷ்டமா இருக்கு. அதுதான் சிங்கிள் ஸ்கீரின் தியேட்டர்கள் குறைய முக்கியக் காரணம். சின்ன ஊர்கள்ல இருக்கிற சிங்கிள் ஸ்கிரீன் தியேட்டர்கள் என்னதான் புதுப்பிச்சாலும் அதுக்கு மக்கள் வர்றதில்லை. அதனால், அந்த ஊர்கள்ல இருக்கிற சிங்கிள் ஸ்கிரீன் தியேட்டர்கள் அழிஞ்சுக்கிட்டுதான் இருக்கு. காரணம், பெரிய நடிகர்கள் வருடத்துக்கு ஒரு படம்தான் நடிக்கிறாங்க. அவங்க படங்களைத் தவிர்த்து மற்ற நடிகர்களோட படங்களுக்கு மக்கள் அதிகம் வரமாட்டேங்கிறாங்க.

மும்பையில சிங்கிள் ஸ்கிரீன் தியேட்டர்களே கிடையாது. அந்த நிலைமை தமிழ்நாட்டுக்குச் சீக்கிரம் வரும். சிறு தயாரிப்பாளர்களுக்கு ஆதரவு கொடுக்கணும்னு தயாரிப்பாளர் சங்கத்துல சொல்றாங்க. ஆனா, சின்ன தியேட்டர் உரிமையாளர்களைப் பத்தி யோசிக்கவே மாட்டேங்கிறாங்க. தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்களும் மல்டி பிளெக்ஸ் தியேட்டர்கள் வருமானத்துல 50 சதவிகிதம் வாங்கிக்கிறாங்க. சின்ன தியேட்டர்கள்கிட்ட இருந்து 70 சதவிகிதம் வாங்குறாங்க. நடிகர்கள் சம்பளம் அதிகமா இருக்கு. எங்களுக்கு புரொடக்‌ஷன் செலவு அதிகம்னு சொல்லி இவ்வளவு வசூலிக்கிறாங்க. இதனால, சின்ன தியேட்டர்கள் உரிமையாளர்கள் ரொம்ப பாதிக்கப்படுறாங்க. 4,000 தியேட்டர்கள் இருந்த தமிழ்நாட்டுல இப்போ 1,000 தியேட்டர்கள்தான் இருக்கு. பாரம்பர்யமா தியேட்டர் நடத்திக்கிட்டு இருக்கிறவங்க தியேட்டரை மூடினா தன்மானப் பிரச்னை, அசிங்கமாகிடும்னு வேற வழியில்லாமல் நடத்திக்கிட்டு இருக்காங்க. 

திருப்பூர் சுப்ரமணியன்

ஒரு பழைய தியேட்டரைப் புதுப்பிக்கிறதுக்கு குறைஞ்சது ஆறு லட்சம் ரூபாய் செலவாகும். அந்த முதலீட்டைத் திரும்ப எடுக்கிறதுக்கு எப்படியும் உரிமையாளருக்குச் சில வருடங்கள் ஆகும். அதனால, பண்ணாம விட்டுடுறாங்க. தியேட்டரை அப்கிரேட் பண்ணியிருந்தால், முதல் ஐந்து வருடங்களுக்கு அரசாங்கத்துக்கு வரி கட்டத் தேவையில்லைனு மகாராஷ்டிரா, ஆந்திராவுல அரசாணை பிறப்பிச்சிருக்காங்க. அதுமாதிரி, ஒரு முடிவை இங்கேயும் எடுக்கணும். மல்டிபிளெக்ஸ் தியேட்டர்கள்கிட்ட வாங்குற ஷேரிங் பணத்தைத்தான் மத்த தியேட்டர்கள்கிட்டேயும் வாங்கணும். அப்படியிருந்தா, சிங்கிள் ஸ்கிரீன் தியேட்டர்கள் மூடாம இருப்பாங்க. அதேபோல, வருமானம் எந்த இடத்துல அதிகமா வருதோ, அந்த தியேட்டர்கள்லதான் படத்தை ரிலீஸ் பண்ண முன்னுரிமை கொடுப்பாங்க. அப்போதான் எங்களுக்கும் லாபம் வரும். ஏன், சின்ன தியேட்டர்களுக்கு ரிலீஸ் பண்றது இல்லைனா, பெரிய நடிகர்களோட படத்தை சின்ன தியேட்டர்கள்ல ரிலீஸ் பண்ணாதீங்கனு தயாரிப்பாளர்கள்தாம் எங்களை வற்புறுத்துறாங்க. அவங்க சொல்றதைக் கேட்டாக வேண்டிய சூழல்ல இருக்கோம்.

தவிர, சிங்கிள் ஸ்கிரீன்ல ஒரு படத்தை ரிலீஸ் பண்றாங்கனா, அடுத்த முறை ஒரு புதுப்படம் ரிலீஸ் ஆகும்போது பக்கத்துல இருக்கிற வேற சிங்கிள் ஸ்கிரீன்ல ரிலீஸ் பண்ணலாம்னு நினைச்சாலும், `ஏன் புதுசா ஒரு தியேட்டர்ல ரிலீஸ் பண்றீங்க? இதுவரை பண்ணமாதிரியே பண்ணுங்க'னு சொல்லிடுறாங்க. சின்ன தியேட்டர்கள் நலிவடைய இதுவும் ஒரு முக்கியமான காரணம். தியேட்டர்கள் நிலையைப் பத்தி எந்த நடிகர்களும் கவலைப்படுறது இல்லை. நடிகர்களும் தயாரிப்பாளர்களும் மனசு வெச்சா, இந்த நிலை நிச்சயம் மாறும். 

சிம்பிளா சொல்லணும்னா, பத்து பெரிய நடிகர்கள் வருடத்துக்கு நாலு படங்களாவது நடிக்கணும். அப்போதான் வருடம் முழுக்க மக்கள் தியேட்டருக்கு வருவாங்க. லாபமும் நல்லா வரும். இன்னொரு விஷயம், தியேட்டரைப் புதுப்பிக்கிற மாதிரி இருந்தால், அதுக்கு ஒப்புதல் வாங்க நிறைய ஃபார்மாலிடீஸ் இருக்கு. அதையும் அரசாங்கம் குறைச்சிட்டா, சிங்கிள் ஸ்கிரீன் எல்லாம் மல்டிபிளெக்ஸ் தியேட்டர்களா மாறும். யாருக்கும் எந்தப் பிரச்னையும் இருக்காது. சினிமாவும் நல்லாயிருக்கும்" என்கிறார், திருப்பூர் சுப்பிரமணியன்.

 சிங்கிள் ஸ்கிரீன் தியேட்டர்களின் எதிர்காலம் என்ன ஆகும்? பொறுத்திருந்து பார்ப்போம்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!