Published:Updated:

``ராம், வசனங்களை பேப்பர்ல வெச்சுக்கிட்டு ஷூட்டிங் ஸ்பாட்ல சுத்திக்கிட்டு இருக்கிற ஆள் கிடையாது..!’’ - `தேனி’ ஈஸ்வர்

சனா
``ராம், வசனங்களை பேப்பர்ல வெச்சுக்கிட்டு ஷூட்டிங் ஸ்பாட்ல சுத்திக்கிட்டு இருக்கிற ஆள் கிடையாது..!’’ - `தேனி’ ஈஸ்வர்
``ராம், வசனங்களை பேப்பர்ல வெச்சுக்கிட்டு ஷூட்டிங் ஸ்பாட்ல சுத்திக்கிட்டு இருக்கிற ஆள் கிடையாது..!’’ - `தேனி’ ஈஸ்வர்

``சினிமாவில் ஒளிப்பதிவாளராக ஆகணும்னு ஆசைப்பட்டு ஒளிப்பதிவாளர் கே.வி.ஆனந்த் சாரிடம் வாய்ப்பு கேட்டேன். அவர் வாய்ப்பு தருவதாகச் சொன்னார். ஆனா, என் அம்மா, அப்பாவுக்கு சினிமாத்துறைக்கு நான் போவது பிடிக்கவில்லை. அதனால், கே.வி.ஆனந்த் சாரிடம் உதவியாளராகச் சேர முடியாமல் போய்விட்டது'' என்று ஃப்ளாஷ்பேக் காட்சிகளுடன் நம்முடன் பேச ஆரம்பிக்கிறார் ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர். 

``இயக்குநர் ராம் என் நெருங்கிய நண்பன். அவருடைய முதல் இரண்டு படங்களில் நான் வொர்க் பண்ண வேண்டியதாக இருந்தது. ஆனா, சில காரணங்களால் தள்ளிப் போய்விட்டது. பிறகு, `தரமணி', `பேரன்பு' படங்களில் ராமுடன் வொர்க் பண்ணினேன். அவருடைய அடுத்த  படத்துக்கும் ஒளிப்பதிவு செய்ய இருக்கிறேன். ராமுடன் தொடர்கின்ற இந்தப் பயணம் எனக்கு சந்தோஷத்தைக் கொடுக்குது. `பேரன்பு' கதையை ஓர் இரவில் சொன்னார் ராம். ஓர் ஏரி... அங்கே ஒரு வீடுனு அவர் கதை சொல்ல ஆரம்பிக்கும்போதே, ஒளிப்பதிவு எப்படி இருக்கணும்னு கற்பனை பண்ணத் தொடங்கிட்டேன். அவர் கதையைச் சொல்லி முடிக்கும்போது, `இது ஓர் உலக சினிமா. இதை இன்னும் சிறப்பா செஞ்சு கொடுக்கணும்'னு மனசுல நினைச்சுக்கிட்டேன். `பேரன்பு' படத்துக்கு ஒளிப்பதிவு பண்ணும்போதும், எனக்கு முழு சுதந்திரம் கிடைச்சது. வசனங்களை பேப்பர்ல வெச்சுக்கிட்டு ஷூட்டிங் ஸ்பாட்ல சுத்திக்கிட்டு இருக்கிற ஆள் கிடையாது ராம். `இதுதான் காட்சி, இந்தக் காட்சி இப்படித்தான் அமையணும்'ங்கிற விஷயத்துல தெளிவா இருப்பார். அது எனக்குக் கூடுதல் பலம்.

`பேரன்பு' படத்துக்காகக் கொடைக்கானலில் ஒரு வீட்டை செட் போட்டிருந்தோம். கடுமையான குளிர் வாட்டக்கூடிய நவம்பர், டிசம்பர் மாதத்தில் படத்துக்கான ஷூட்டிங்யை ஆரம்பித்தோம். மின்சாரமே இல்லாத அந்த வீட்டுக்குள்ளே ஒளிப்பதிவு செய்வது எனக்குச் சவாலாக இருந்தது. ஆனா, ஒவ்வொரு வேலையையும் ரசித்து செய்தேன். தவிர, நாங்க தேர்ந்தெடுத்த லொகேஷன்ல வெயிலும் பனியும் மாறி மாறி வரும். வெயில் வரும்போது சில காட்சிகள், பனி விழும்போது சில காட்சிகள்னு மொத்தப் படத்தையும் இயற்கையோடு இணைந்தே முடிச்சிருக்கோம்.

படத்தோட ஹீரோ மம்மூட்டி சாரை என் கண் வழியே காட்சி படுத்தப்போறேன்னு நினைக்கும்போதே, அவ்ளோ எதிர்பார்ப்பும் சந்தோஷமுமா இருந்தது. என்னால அவருக்கு ரீ-டேக் ஆகிடக் கூடாதுங்கிறதுல ரொம்பக் கவனமா இருந்தேன். சமயத்துல, ஒளிப்பதிவு பண்ணும்போது, மம்மூட்டி சாரோட நடிப்பை கேமரா வழியே பார்த்து கண் கலங்கிடுவேன். உதாரணத்துக்கு, படத்துல அவரோட பொண்ணு வயசுக்கு வர்ற ஒரு காட்சி. ஆனா, அதை சந்தோஷமா கொண்டாடுற மனநிலையில அவர் இருக்கமாட்டார். மாற்றுத் திறனாளியான அவரோட பொண்ணை இந்த நிலையில எப்படிப் பார்த்துக்கிறதுனு நினைச்சு அவர் கலங்கி அழுவார். இந்தக் காட்சியை மம்மூட்டி சாரைத் தவிர வேற யாரும் சிறப்பா பண்ண முடியுமானு கற்பனை பண்ணிப் பார்க்க முடியலை. இது நடிப்புனு தெரியாத அளவுக்கு நடிக்கிறவங்கதான் மகத்தான நடிகர்கள். `பேரன்பு' படத்துல மம்மூட்டி சார் அதைப் பண்ணியிருக்கார். 

முக்கியமா, மம்மூட்டி சாரும் ஒரு தீவிரமான கேமரா காதலர். அந்தக் காலத்துல இருந்து இப்போ வரைக்குமான கேமரா கலெக்‌ஷன்ஸ் வெச்சிருக்கார். கேமராவைப் பற்றிய நிறைய விஷயங்கள் அவருக்குத் தெரிஞ்சிருக்கு. `இந்த கேமராவுல எடு, இன்னும் பெட்டரா இருக்கும்'னு சமயத்துல எனக்கு டிப்ஸ் கொடுத்திருக்கார். பிரமாதமான போட்டோகிராபர் அவர். 

தவிர, படத்துல நடிச்ச எல்லோருமே மேக்கப் இல்லாம நடிச்சிருக்காங்க. சாதனா, இவ்ளோ சின்ன வயசுல பொறுப்பு உணர்வோட நடிச்சிருக்காங்க. டீஸர்ல பார்த்த மாதிரி, ஒரு சின்னப் பொண்ணு அப்படி நடிக்கிறது அவ்வளவு சாதாரணம் கிடையாது. சாதனா ஒவ்வொரு காட்சியும் நடிச்சு முடிக்கும்போது, உடனடியா அந்தப் பொண்ணுக்குச் சில பயிற்சிகளும் உதவியும் செய்ய பிசியோதெரபி மருத்துவர் ஒருவர் கூடவே இருந்தார். `பேரன்பு' மறக்க முடியாத நினைவுகளை படக்குழுவில் இருந்த எல்லாருக்கும் கொடுத்திருக்கு. 

ஒரு கதை எனக்குப் பிடித்தால் மட்டுமே அந்தப் படத்துல வொர்க் பண்ணுவேன். தவிர, படத்தோட களமும் வித்தியாசமா இருக்கணும்னு நினைப்பேன். இப்படிப்பட்ட தனிப்பட்ட காரணங்களாலேயே அதிகமான படங்களில் என்னால் வொர்க் பண்ண முடியல. ராஜூமுருகனின் `ஜோக்கர்', `ஜிப்ஸி' படங்களில் வாய்ப்புகள் வந்தும் வொர்க் பண்ண முடியாமல் போய்விட்டது. அந்தச் சமயத்தில் ராம் படத்தோட வேலைகளில் பிஸியாக இருந்தேன். இனி தொடர்ந்து நிறைய படங்களில் வொர்க் பண்ணணும்னு நினைச்சிட்டு இருக்கேன்'' என்று நம்பிக்கையுடன் முடித்தார் ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர்.

சனா

Make others happy by being happy ! “ Its my favorite quote. And I live towards it. I want to talk talk talk even if..