'16 வயதினிலே' முதல் '60 வயது மாநிறம் வரை'... வயதை டைட்டிலாக்கிய தமிழ் படங்கள்..!

வயதைக் குறிபிட்டு அந்த வயதுடைய கதாபாத்திரங்கள் அதன் இயல்புகள் குறித்து வெளிவந்த தமிழ்ப் படங்கள் !

'16 வயதினிலே' முதல் '60 வயது மாநிறம் வரை'... வயதை டைட்டிலாக்கிய தமிழ் படங்கள்..!

`ஆள் பாதி ஆடை பாதி' என்பது போல ஒரு படத்தின் பாதி உயிர் அதன் தலைப்பில் இருக்கிறது. ஆடியன்ஸ் ஒரு படத்தை திரும்பிப் பார்ப்பது எவ்வளவு முக்கியமோ, அது போல அந்தத் தலைப்பை ஞாபகம் வைப்பது அதைவிட முக்கியம். ஒரு திரைப்படத்தின் தலைப்பு அதன் கதைக்குச்  சம்பந்தப்பட்ட வகையில் இருப்பதே பாரம்பர்யமான வழக்கம். தலைப்பு  என்பது முடிந்தவரை கதைக்கு நேரடி தொடர்புள்ளதாகவோ, இல்லை மறைமுகமாக கதையின் அர்த்தத்தை கூறக்கூடியதாகவோ இருக்கவேண்டும். உதாரணத்துக்கு `பாட்டி சொல்லை தட்டாதே' திரைப்படம், ஒரு ஆல் இன் ஆல் பாட்டி தன் பேரனின் பிரச்னைகளை எப்படித் தீர்க்க உதவுகிறார் என்பது கதை. `ஜென்டில்மேன்' திரைப்படம் கொள்ளயடிக்கும் பணத்தை கல்விக்காகச் செலவிடும் ஒரு ராபின்ஹுட் கதை. இது மட்டுமன்றி பெரும்பாலான படங்கள் கதாபாத்திரங்களின் பெயரையும் தலைப்பாகக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் வயதை குறிப்பிட்டு  அந்த வயதுடைய கதாபாத்திரங்கள் அதன் இயல்புகள் குறித்து கூறிய கையளவு படங்களும் தமிழ் சினிமாவில் உள்ளன.
 

16 வயதினிலே :

 வயது படங்கள்

வயதைப் பற்றி 1977ல் வெளிவந்த படம், அன்றைய கால ஸ்டூடியோ கலாசாரத்தை உடைத்து கிராமத்துச் சூழலில் எடுத்த படங்களில் ஒன்று `16 வயதினிலே’. பாரதிராஜா இயக்கத்தில் பத்தாம் வகுப்பு முடித்த மயில் (ஶ்ரீதேவி) அவளின் கனவுகளையும், ஏக்கத்தையும் சுமந்த சப்பாணி (கமல்ஹாசன்), பரட்டை (ரஜினிகாந்த்), குருவம்மா (காந்திமதி) எனப் பிரதான கதாபாத்திரங்களோடு இளையாராஜா இசையும் பார்ப்போரை ஆட்கொள்ளும் ஒரு கிளாஸிக்.
 

ஆறிலிருந்து அறுபது வரை :

ஆறிலிருந்து அறுபது வரை

எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் ரஜினிகாந்த், சோ, சங்கீதா ஆகியோர்  நடித்து வெளியான படம் `ஆறிலிருந்து அறுபது வரை'. தன் தம்பி தங்கைகளுக்காக ஆறு வயதில் உழைக்க ஆரம்பித்த சந்தானம் (ரஜினி), வாழ்க்கையின் இறுதி வரை உழைக்கிறார். தன் வாழ்க்கையை தம்பி தங்கைகளுக்காக அர்பணித்த சந்தானத்தை அவர்கள் நல்ல நிலைமைக்குப் போன பிறகு உதாசினப்படுத்துவர். அதையும் தாண்டி வாழ்க்கையில் அவர் எப்படி முன்னேறுகிறார். இறுதியில் அவர் வாழ்க்கை எப்படி முடிகிறது என்பதே படம். ரஜினி - எஸ்.பி.எம் காம்போக்களில் சிறந்த படைப்பு இந்த `ஆறிலிருந்து அறுபது வரை'. 

எனக்கு 20 உனக்கு 18 :
 

எனக்கு 20 உனக்கு 18

தருண் குமார், த்ரிஷா, ஸ்ரேயா சரண் ஆகியோர் நடிப்பில் ஏ.எம் ஜோதி கிருஷ்ணா பிரமாண்ட பொருள்செலவில் இயக்கிய படம். கால்பந்து வீரர் ஶ்ரீதர், முதலாம் ஆண்டு மாணவி ப்ரீத்தி ஆகியோருக்கு இடையில் நடக்கும் இலகுவான காதலும் அதைத் தொடர்ந்து நடக்கும் பிரச்னைகள்  என இருக்கும் கதையை ஒரு மியூசிக்கலாகக் கொடுத்திருப்பார் ஏ.ஆர். ரஹ்மான். ஸ்ரேயா தமிழில் அறிமுகமான படம் இது. 

36 வயதினிலே :
 

36 வயதினிலே

2015 ல் ஜோதிகா ரீஎன்ட்ரீ கொடுத்த திரைப்படம். மலையாளத்தில் மஞ்சு வாரியர் நடித்து வெளிவந்த `ஹவ் ஓல்டு ஆர் யூ' படத்தின் ரீமேக் இது என்பது குறிப்பிடத்தக்கது. திருமணத்துக்குப் பிறகு குடும்பம், குழந்தை என்றாகி தன்னையே தொலைத்துவிடும் ஒரு பெண் ஒருகட்டத்தில் அதனை உணர்ந்து எப்படி மீண்டு வருகிறார் என்பதே கதை.  இந்தப் படத்துக்கு பெண்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்தது. 
 

தாதா 87 :
 

தாதா 87

அறிமுக இயக்குநர் விஜய்ஶ்ரீ இயக்கத்தில் சாருஹாசன் நடித்திருக்கும் படம் `தாதா 87'. 87 வயதுடைய கேங்ஸ்டரின் கதை. இதில் சாருஹாசனுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷின் பாட்டி சரோஜா நடித்திருக்கிறார். ஆக்‌ஷன், எமோஷன், ரொமான்ஸ் என எல்லாம் கலந்த கலவையாக இருக்கும் என இயக்குநர் தெரிவித்துள்ளார். `ஐ ஆம் நாட் சத்யா' இதுதான் படத்தோட ஒன்லைன். `பெண்கள் மீது கைவைத்தால் கொளுத்துவேன்' என்ற சாருஹாசன் வசனம் அனைவராலும் பேசப்பட்டது. பாலியல் வன்கொடுமை பற்றியும் பேசவிருக்கிறது. 
 

60 வயது மாநிறம் :
 

60 வயது மாநிறம்

ராதாமோகன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, பிரகாஷ்ராஜ், சமுத்திரக்கனி நடித்திருக்கும் படம் இது. இளையராஜா இசையமைக்கும் இப்படம் `கோதி பன்ன சாதாரண மைக்கட்டு' எனும் கன்னட படத்தின் ரீமேக். அல்சீமர் நோயால் பாதிக்கப்பட்டு தொலைந்துபோன அப்பாவுக்கும் அவரை தேடும் மகனுக்கும் இடையேயான கதை. கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும் இப்படத்தில் இந்துஜா கதாநாயகியாக நடித்திருக்கிறார்.  

இதுதவிர, உங்கள் நினைவில் இருக்கும் வயது சார்ந்த திரைப்பட டைட்டில்கள் கமென்ட்டில் பதிவு செய்யுங்களேன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!