வெளியிடப்பட்ட நேரம்: 13:48 (30/08/2018)

கடைசி தொடர்பு:19:03 (30/08/2018)

``சிவா பொண்ணாச்சே... மைக்கைப் பார்த்து பயமில்லாமப் பாடுனா, ஆராதனா!" - `கனா' திபு நிணன் தாமஸ்

`கனா' படத்தின் இசையமைப்பாளர் திபு நிணன் தாமஸ் பேட்டி.

``சிவா பொண்ணாச்சே... மைக்கைப் பார்த்து பயமில்லாமப் பாடுனா, ஆராதனா!

``சிவாவும், அருண்ராஜாவும் என் காலேஜ் ஃப்ரெண்ட்ஸ். திருச்சியில ஒண்ணாதான் இன்ஜினீயரிங் படிச்சோம். அப்போவே மூணு பேருக்கு சினிமாவுல என்ட்ரி ஆகணும்னு ஆசை. அந்தக் கனவுதான், எங்களைக் `கனா' வரைக்கும் கொண்டுவந்திருக்கு!" - `கனா' படத்தில் இடம்பெற்றிருக்கும் `வாயாடி பெத்த புள்ள' பாட்டுக்கு மாஸ் ரெஸ்பான்ஸ் கிடைத்திருக்கும் சந்தோஷத்துடன் பேசுகிறார், 'கனா'வின் இசையமைப்பாளார் திபு நிணன் தாமஸ். 

திபு நிணன் தாமஸ்

``ஸ்கூல் படிச்ச காலத்துல இருந்தே எனக்கு இசை மீது ஆர்வம். காலேஜ் படிக்கும்போது அது இன்னும் அதிகமாச்சு. காரணம், எங்க மூணுபேரோட நட்பு. காலேஜ் படிச்ச காலத்துல நான் மியூசிக் பண்ண, சிவா பாட, அருண்ராஜா பாட்டு எழுத... இப்படிக் கலகலப்பா போகும். முக்கியமா காலேஜ்ல நடக்கிற எல்லா கல்சுரல் புரோகிராம்லேயும் கலந்துக்குவேன். 

காலேஜ் முடிச்சதும், சிவாவும், அருண்ராஜாவும் சென்னைக்கு வந்துட்டாங்க. நான், சவுண்ட் இன்ஜினீயரிங் படிக்க நியூசிலாந்து போயிட்டேன். சென்னைக்குத் திரும்ப வந்தப்போ, சிவா ஹீரோவா நடிச்ச முதல்படம் ரிலீஸ் ஆகியிருந்தது. அதைப் பார்க்கும்போது அவ்வளவு சந்தோஷம். ஏன்னா, காலேஜ் படிக்கும்போதே சிவா ஹீரோ, அருண்ராஜா டைரக்‌ஷன், மியூசிக் நான்... இப்படினு போஸ்டர்லாம் டிசைன் பண்ணிப் பார்த்திருக்கோம்.  

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் எங்க காலேஜ் சீனியர். அவர்கூட கொஞ்சநாள் வொர்க் பண்ணினேன். அந்த சமயத்துல அருண்ராஜா ஒரு தயாரிப்பு நிறுனவத்துல கிரியேட்டிவ் ஹெட்டா வேலை பார்த்துக்கிட்டு இருந்தார். அவர் அறிமுகப்படுத்தி வெச்சு, எனக்குக் கிடைச்ச வாய்ப்புதான், `மரகதநாணயம்'. என் முதல் படம் இது.  

கனா

பிறகு, `கனா' படத்துக்காக சிவாதான் என்னைக் கூப்பிட்டார். நண்பர்கள் எல்லோரும் சேர்ந்து வொர்க் பண்ணலாம்னு சொன்னார். படத்துல ஹீரோயின் இன்ட்ரோவுக்கு ஒரு பாட்டு இருக்கு. அதுதான், `வாயாடி பெத்த புள்ள...' பாட்டு. சின்ன வயசுல இருந்து பெரிய பொண்ணா வளர்ற வரைக்கும் காட்டுற சீனுக்கு இந்தப் பாட்டு வரும். அதனால, படத்துல வர்ற சின்னக் குழந்தை போர்ஷனுக்குப் பாட்டு பாட குழந்தை தேவைப்பட்டது. இயக்குநர் அருண்ராஜாதான், `நம்ம சிவாவோட பொண்ணு ஆராதனா நல்லா பாடுவாளே... அவளைப் பாட வைப்போம்'னு சொன்னார். ஏன்னா, சிவா வீட்டுக்குப் போகும்போதெல்லாம் ஆராதனா, அவங்க அப்பா நடிச்ச படப் பாடல்களைப் பாடிக்கிட்டு இருப்பா. அதனால, சிவாகிட்ட கேட்டோம். அவரும் ஆர்வமா ஓகே சொல்லிட்டார். ஆனா, நாலு வயசுப் பொண்ணு எப்படிப் பாடுவா... உச்சரிப்பு எல்லாம் சரியா வருமானு யோசிச்சோம்.  

 

 

பாடல் வரிகளை ஒரு வாரத்துக்கு முன்னாடியே பாப்பாகிட்ட கொடுத்தோம். நல்லா மனப்பாடம் பண்ணிட்டு வந்தாங்க. இருபது நிமிடத்துல பாடலைப் பாடி முடிச்சிட்டாங்க. சிவாவோட பொண்ணாச்சே... மைக்கைப் பார்த்து ஆராதனாவுக்குக் கொஞ்சம்கூட பயமில்ல. ரிதம், தாளத்தைக் கொஞ்சம்கூட மிஸ் பண்ணமா அழகாகப் பாடி முடிச்சா, ஆராதனா. சிவாவும் ஒரு வாத்தியார் மாதிரி கூடவே இருந்து அழகாகச் சொல்லிக்கொடுத்தார். 

 

இது அப்பா - மகள் பாட்டு. அதனால அப்பாவுடைய போர்ஷனை சிவா பாடுனா நல்லாயிருக்கும்னு தோணவே, சிவாவையும் பாட வெச்சோம். பாட்டுக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைச்சிருக்கு. இதுதவிர, படத்துல நம்பிக்கையூட்டுற மாதிரி ரெண்டு பாட்டு இருக்கு. அது, இந்தப் பாடலைவிட வேற வெலவில் இருக்கும்னு நம்புறேன். இதுதவிர அருண்ராஜாவும், நானும் சேர்ந்து ஒரு பாடலைப் பாடியிருக்கோம். `கனா' படத்தோட பாடல்கள் ரிலீஸுக்குப் பிறகு நிறைய ரெஸ்பான்ஸ் மெசேஜ் வருது. இப்போ இன்னும் ரெண்டு படங்கள்ல கமிட் ஆகியிருக்கேன். கூடிய சீக்கிரமே நல்ல செய்தி வரும்!'' என்று முடிக்கிறார், திபு நிணன் தாமஸ். 


 

நீங்க எப்படி பீல் பண்றீங்க