``எங்க அப்பாவோட திறமையைப் புரிஞ்சுக்காம ஃபன் பண்றதைப் பார்க்கும்போது வருத்தமா இருக்கு.!’’- சிம்பு

குழந்தை நட்சத்திரமாக அவர் கேமரா முன் நின்ற தருணத்தில் தொடங்கி இப்போது `சிம்பு ஷூட்டிங்குக்குச் சரியாக வரமாட்டேங்குறார்' என்ற குற்றச்சாட்டு வரை விகடன் கேள்விகளுக்கு பதிலளித்திருக்கிறார் சிம்பு.

``எங்க அப்பாவோட திறமையைப் புரிஞ்சுக்காம ஃபன் பண்றதைப் பார்க்கும்போது வருத்தமா இருக்கு.!’’- சிம்பு

``குழந்தை நட்சத்திரமாக சிம்பு இருந்ததிலிருந்து அடுத்து கமிட்டாகியிருக்கும் படங்கள் வரையிலான சினிமா கேள்விகள், அவர்மீது இருக்கும் குற்றச்சாட்டுகள், அரசியல் தொடர்பான கேள்விகள் என விகடன் நிருபர்களுக்கு நடிகர் சிம்பு அளித்த பிரத்யேகப் பேட்டியின் தொகுப்பு இது. 


கமல் ரஜினியோட அரசியல் என்ட்ரி பற்றி உங்க கருத்து என்ன.. யாரோட அரசியல் கருத்துகள் உங்க ஐடியாலஜியோட பொருந்திப்போகுது?  - பரிசல் கிருஷ்ணா

``என்னோட ஐடியாலஜி யாரோடும் பொருந்திப்போகாது. அப்படித்தான் நான் நினைக்கிறேன். ஒவ்வொருத்தவங்க ஐடியாவும் வேற வேற மாதிரி இருக்கும். எனக்கு அரசியல் குறித்த கருத்துகள் இல்லை; சமூகத்தைக் குறித்துதான் சில கருத்துகள் இருக்கு. எனக்கு ரஜினி சார், கமல் சார் அண்டு இப்போ இருக்குற மற்ற அரசியல்வாதிகள் யாரோடும் என்னோட ஐடியாலஜி பொருந்திப்போகாது. ஏன்னா, நான் இந்த சிஸ்டம் சரியில்லைனு சொல்ற ஆள் இல்லை இந்த சிஸ்டமே தேவை இல்லைனு சொல்ற ஆள். ராஜா காலத்தில் என்ன இந்த சிஸ்டமா இருந்துச்சு. இந்த அரசியல் கட்சிகள், ஆளும் கட்சி, எதிர்க் கட்சினு சொல்லிக்கிற இந்த சிஸ்டம் இனி எடுபடாது.’’
 

சிம்பு

பெரியார் குத்துப் பாட்டு உருவானது பற்றிச் சொல்லுங்க.. அந்த ஐடியா எப்படி வந்தது? - தார்மிக் லீ

``என்னுடைய நண்பர் ரமேஷ்தான் அந்தப் பாட்டுக்கு மியூசிக் பண்ணியிருந்தார், தீபன் தயாரிச்சிருந்தார். `இந்த மாதிரி ஒரு பாட்டு பண்ணியிருக்கோம்; மதன் கார்க்கி எழுதியிருக்கார். உங்களுக்கு ஓகேனா பாடுங்க’னு சொன்னாங்க. எனக்கு அந்த ஐடியா ரொம்பப் பிடிச்சிருந்தது. அதுனால பாடுனேன். எனக்குப் பெரியாரோட பார்வை ரொம்பப் பிடிக்கும். மக்களுக்கு ஒரு நல்ல விஷயம் பண்ணணும்னு அந்தந்த காலகட்டத்தில் அவர் பண்ணின விஷயங்கள் எனக்கு ரொம்பப் பிடிக்கும்.’’


ஜெயலலிதா... மோடி பத்தி உங்க பார்வை என்ன..? - சனா

``ஜெயலலிதா அம்மாகூட எனக்கு பர்ஷனல் கனெக்ட் எதுவும் இல்லை. ஆனால், ஒரு பெண்ணா அவங்களோட சினிமா வாழ்க்கையிலும், அரசியல் வாழ்க்கையிலும் போல்டா இருந்ததைப் பார்க்கும் போது பிரம்மிப்பா இருக்கும். 
மோடிஜியைப் பற்றிச் சொல்லணும்னா, ஒரு நார்மலான இடத்திலிருந்து வந்து இப்போ ஒரு பெரிய நாட்டுக்குப் பிரதமராகியிருப்பது பெரிய விஷயம். பி.ஜே.பியோட இந்த நான்காண்டு ஆட்சியை, ஒரு ஓட்டுப் போட்ட குடிமகனாப் பார்க்கும் போது எனக்கு சில விஷயங்கள் பிடிக்கலை. அவங்க பண்ணுன சில விஷயங்களை வேற மாதிரி ஹேண்டில் பண்ணியிருக்கலாமோனு தோணுச்சு; சில விஷயங்கள் எனக்குப் பாதிப்பில்லாமலும் மக்களுக்குப் பாதிப்பாகவும் இருக்கு. அதுக்காக அவங்க பண்ணுன எல்லா விஷயத்தையும் தப்பு சொல்லிடவும் முடியாது.’’
 

இன்னைக்கு இருக்குற அரசியல் சூழலில் மோடியைப் பார்த்தால் என்ன கேள்வி கேட்பீங்க..? - சனா

``டீயே கொடுத்திட்டு இருந்திருக்கலாம்னு தோணுதா சார்னு கேட்பேன்.’’
 

சிம்பு

கருணாநிதி பற்றி நினைக்கும் போது என்ன சம்பவம் உங்களுக்கு ஞாபகம் வருகிறது..? - இரா.கலைச்செல்வன்

``நான் ஹீரோவானதுக்கு அப்பறம் என்னை எப்போது பார்த்தாலும் நிறைய விஷயங்கள் பேசுவார். கலைஞர் தாத்தாவுக்கு ஒரு பொன்விழா நடந்தது. அப்போ நான்தான் அதை ஒருங்கிணைச்சேன். அப்போ நடிகர்கள் எல்லாரும் அவரைப் பார்த்துட்டு வந்துட்டு இருக்கும் போது நான் போனேன். லேட்டா போனதால என்னை விட மாட்டேன்னு சொல்லிட்டாங்க. `நான் வந்துருக்கேன்னு அவர்கிட்ட சொல்லுங்க’னு சொன்னதும், என்னை மட்டும் தனியா அழைச்சுப் பேசினார். அவர் சேர்ல உட்கார்ந்து இருக்கார்னா நான் அவர் காலுக்குக் கீழ தரையில் உட்காந்துதான் பேசுவேன். என்னை எப்போது பார்த்தாலும் சினிமாவைப் பற்றி, புதுசா வந்த நடிகர்கள் பற்றி நிறைய விஷயங்கள் கேட்டு தெரிஞ்சுப்பார். அவர் சில விஷயங்கள் சொல்லி, `இதெல்லாம் உனக்குத் தெரியுமா’னு கேட்பார். அதையெல்லாம் பார்க்கும் போது பிரமிப்பா இருக்கும். அவரோட இடம் என்ன, அவருக்கு எவ்வளவு வேலைகள் இருக்கும்; அதுக்கிடையில் சினிமாவைப் பற்றியும் இவ்வளவு தெரிஞ்சு வெச்சிருக்கார்; சின்னப் பையனான என்கிட்டேயும் நிறைய விஷயங்களை கேட்டு தெரிஞ்சுக்கிறார்னா இதுதான் அவரோட வளர்ச்சிக்கான காரணம்னு நான் தெரிஞ்சுக்கிட்டேன். 

நான் நடிச்ச படங்களைப் பார்த்துப் பேசுவார். நான் இயக்குநரா படம் பண்ணிட்டு இருக்கும் போது, `உன் படம் ரெடியானதும் எனக்குப் போட்டுக்காட்டு’னு சொன்னார். ஆனால், அவருக்கு என்னால படத்தைப் போட்டுக்காட்ட முடியலை. கொஞ்ச நாளுக்கு அப்புறம் அவரோட ஃபேமிலி ஃபங்ஷனில் அவர்கிட்ட மாட்டிக்கிட்டேன். அவர் வெளியில போகும்போது நான் உள்ள நுழைஞ்சேன். அவரைப் பார்த்ததும் அவரைப் பிடிச்சு நான்தான் வெளியில கூப்பிட்டு வந்தேன். அப்போ செவுளயே வெச்சாரு ஒண்ணு. கொய்யினு சத்தம் மட்டும்தான் கேட்டுச்சு. `நான் உன்ன படத்தைப் போட்டுக்காட்டுனு சொன்னேன்ல’னு கேட்டார். `இன்னுமா அதை ஞாபகம் வெச்சிருக்கீங்க. அடுத்த டைம் கண்டிப்பாப் போட்டு காட்டுறேன்’னு சொன்னேன். `நீ அடுத்த டைமும் கூப்பிடாம இரு அந்த பக்கமும் ஒண்ணு வெப்பேன்’னு சொன்னார்.’’
 

``தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் பத்தி என்ன நினைக்கிறீங்க?" கே.ஜி மணிகண்டன்

``துப்பாக்கி சூடு, போராட்டம் அப்படினு பார்க்காம, உண்மையிலேயே அந்தச் சம்பவத்தோட பின்னணி என்னனு மக்களும், அரசாங்கமும் புரிஞ்சுக்கணும். நான் எப்பயுமே சொல்றது ஒண்ணுதான். எந்தவொரு பிரச்னைனாலும் அதைப் பெருசா எடுத்துக்காம அன்பு செலுத்துங்க. `யாராவது அடிச்சா திருப்பி அடிக்காம அன்பு செலுத்த முடியுமா'னு நீங்க கேட்கலாம். நீங்க திருப்பி அடிக்கிறதை தப்புனு சொல்லலை. ஆனா, அதனால பிரச்னை தீருமானு கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க."
 

``மறுபடியும் விஷாலோட நட்பாயிட்டீங்களா?" - தார்மிக் லீ

``அன்பை மட்டும்தான் வெளிப்படுத்தணும்னு நெனக்கிறேன்.''
 

சிம்பு

``அன்பு செலுத்தணும்னு சொல்றீங்க. இந்த ஞானம் உங்களுக்கு எப்போ இருந்து ஆரம்பிச்சுச்சு?" - இரா. கலைச்செல்வன்

``பொறக்கும் போதே புத்தர் ஞானியாகவா பொறந்தார். எல்லாமே அனுபவப் பாடத்திலிருந்து கத்துக்கிட்டதுதான். சில விஷயங்கள் மூலமா சில புரிதல்கள் ஏற்படும். எனக்கு அந்த மாதிரியான புரிதலை கடவுள் சீக்கிரமே கொடுத்துட்டார்னு நெனக்கிறேன். பிரச்னை எதுக்கு ஏற்படுதுனா கடவுள் நமக்கு ஏதாவது சொல்ல முயற்சி பண்றார்னு அர்த்தம். நம்மளை மீறிய சக்தி இந்த உலகத்துல இருக்கு. அதை நீங்க கடவுள்னு சொல்லலாம், பேரண்டம்னு சொல்லலாம்."
 

``நடிகர் சிம்பு இசையமைப்பாளர் சிம்புவை எப்படி மதிப்பிடுவார்?" - சுகுணா திவாகர்

``இப்போதான் ஒரு படத்துக்கு இசையமைத்திருக்கேன். எனக்கு இசை ரொம்பப் பிடிக்கும். அதற்கான அறிவாற்றல் அதிகம் இருக்கு. ஆனா, இசையமைப்பாளரா ஆகணும்னு ஆசைப்பட்டதில்லை. எனக்கு நிறைய இசையமைப்பாளர்கள் நண்பர்களா இருக்காங்க. அவங்க என் ஒவ்வொரு படங்களுக்கும் நல்ல இசையைக் கொடுத்துட்டு இருக்காங்க. என்னோட எல்லாப் படங்கள்லயுமே பாடல்கள் செம ஹிட். இப்போ நான் மியூசிக் பண்றதுக்குக் காரணம், அது என்னோட பாரங்களைக் குறைக்கிதுங்கிற காரணத்துனாலதான்."
 

``மியூசிக் எந்த வயசுல இருந்து கத்துக்க ஆரம்பிச்சீங்க?" -இரா. கலைச்செல்வன்

``ஸ்கூல் படிக்கும்போது கிளாசுக்குப் போகக் கூடாதுங்கிற காரணத்துக்காகத்தான் மியூசிக் கிளாசுக்குப் போனேன். கல்ச்சுரல்ஸ்ல மிஸ் பண்ணாம கலந்துக்குவேன்."
 

உங்க நீண்ட கால நண்பரான அனிருத் கூட எப்போ படம் பண்ணப்போறீங்க? - சனா

``அப்படிச் சரியான புராஜக்ட் இதுவரை செட்டாகலை. கூடிய சீக்கிரம் நடக்கும்னு நினைக்கிறேன் "
 

simbu

உங்க அப்பாவைப் பத்தின மீம்ஸ் ட்ரோல்ஸ் எல்லாம் பார்க்கும்போது வருத்தப்பட்டதுண்டா? - இரா.கலைச்செல்வன்

``வருத்தமா இருக்கும். காரணம், இயற்கையா அவர் பேச்சே ஜாலியா இருக்கும். அதை ஜாலியா எடுத்துக்கிறது தப்பு கிடையாது. அவர் திறமைகளைப் புரிஞ்சுக்காம எல்லாத்தையுமே ஃபன்னா எடுத்துக்கிறது வருத்தமா இருக்கு. அதை நான் அவர்கிட்ட மாத்திக்கச் சொல்றது தப்பாப் பட்டுச்சு. அதனால, அவர்கிட்ட இதுவரை எதுவும் சொன்னதில்லை "
 

சேலத்துல பியுஷ் மானுஷ் கூட சேர்ந்து மூர்க்கனேரியைப் பார்வையிட்டு, ஏரிகளைத் தூர் வாரப்போவதாச் சொன்னீங்க. இப்போ அந்தக் களப்பணி எந்தளவுல இருக்கு? - சரண்

``எனக்கு அவரோட விஷயங்கள் கேட்கும்போது எதிர் காலத்துல அதெல்லாம் நமக்குத் தேவைனு தோணுச்சு. அதை முதல்ல பார்க்கணும்னுதான் அங்கே போனேன். இதை நீங்க தொடர்ந்து பண்ணுங்க. அதுக்கு என்ன உதவி வேணும்னாலும் சொல்லுங்க. என்னால என்ன பண்ண முடியுமோ அதைப் பண்றேன்னு சொல்லிட்டு வந்திருக்கேன்"
 

நடிகர், பாடகர், இசையமைப்பாளர், பாடலாசிரியர்கள்னு உங்களை பிஸியா வெச்சிக்கிறது எப்போவாவது பிரச்னையா இருந்திருக்கா, உங்களுக்கான நேரத்தை எப்படி மேனேஜ் பண்றீங்க? - உ.சுதர்சன் காந்தி 

``கண்டிப்பா அப்படிப் பிரச்னையா இருந்ததில்லை. எனக்கு சினிமா பிடிக்கும். சினிமா சம்பந்தப்பட்ட எதோ ஒரு விஷயத்தைப் பண்ணிட்டே இருக்கணும்னு நினைப்பேன். இது எல்லாம் இல்லைன்னா, எங்கேயாவது ட்ரிப் போவேன், வீடியோ கேம் விளையாடுவேன் அவ்ளோதான் எனக்கான நேரம்"
 

`நான் பெற்ற மகனே சிம்பு, இதைச் சாப்பிட்டாதான் உனக்குத் தெம்பு' - இது மாதிரி உங்க அப்பா வீட்லயும் ரைமிங்காதான் பேசுவாரா ? - சரண்

``அவர் ஜாலியா இருந்தார்ன்னா, `சிம்பு எங்கப்பா இருக்க?'னு கேட்பார். கோபமா இருந்தார்னா, `எங்கேடா அவன் ?'னு சத்தமா கேட்பார் அவ்வளவுதான் வித்தியாசம். அவரும் அப்பாதானே?"
 

simbu

ஜல்லிக்கட்டுப் போராட்டுத்துல நீங்களும் பங்கெடுத்துக்கிட்டீங்க. அந்தப் போராட்டம் பத்தி உங்க கருத்து என்ன ? - ப.சூரியராஜ் 

``நம்ம எல்லோருக்கும் உணர்வு இருக்குங்கிறதை வெளிப்படுத்துறதுக்கான சூழல் அமைஞ்சுது. அந்த விஷயம் நடந்தது எனக்கு சந்தோஷமா இருந்தது. முடியும்போது கொஞ்சம் நல்லவிதமா முடிஞ்சிருக்கலாம்னு வருத்தமா இருந்தது."
 

ஆன்மிகத்துல உங்க நிலைபாடு என்ன ? - வெ.வித்யா காயத்ரி

 ``கடவுள்னா மேல யாரோ சேர் போட்டு உட்கார்ந்து இருக்கலை. நம்மளை மீறி ஒரு விஷயம் இருக்கு. அது நமக்குச் சில விஷயங்களை கொடுக்கும். அந்த சக்தியை நான் மதிக்கிறேன் அவ்வளவுதான். "
 

சில செலிபிரிட்டிகள் சிம்புவிடம் கேட்ட கேள்விக்கு அவர் சொன்ன பதில்கள் இதோ...

``கல்யாணம் எப்போ, குட்டி சிம்புவை நாங்க எப்போ பார்ப்போம்?" யுவன் ஷங்கர் ராஜா

``தெரியலை"
 

`உங்களோட குழந்தை பருவத்தை நீங்க மிஸ் பண்றீங்களா, ஏன்னா அப்போல்லாம் நீங்க ரொம்ப பிஸியா இருந்தீங்க..." - டிடி

``உண்மையிலேயே மிஸ் பண்றேன். அப்போ என் நண்பர்களோட ஜாலியா இருந்திருக்கலாம்தான். ஆனா, ஷூட்டிங், ரெக்கார்டிங்னு பிஸியா இருந்துட்டேன்."
 

``நீங்க நிறைய படம் பண்ணிருக்கீங்க. ஆனா, எனக்கு ஒரு சிம்புவைத் தெரியும். அந்த சிம்பு அவர் ஐடியாலஜி படி எப்போ படம் பண்ணுவார்?"  -மிர்ச்சி சிவா

``என்னோட சிந்தனைகள் எப்போதுமே தனித்துவம் வாய்ந்ததா இருக்கும். `மன்மதன்', `வல்லவன்' பண்ணும்போது எனக்கு ரொம்பச் சின்ன வயசு. ஆனா, அப்போ இருக்குற மெச்சூரிட்டிக்கும், இப்போ இருக்குற மெச்சூரிட்டிக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கு. இப்போ நான் படம் பண்ணணும்னா அதுக்கான நேரத்தை ஒதுக்கணும். கூடிய விரைவுல அதை நான் பண்ணுவேன்."
 

``உங்க திறமை மீது எனக்கு எந்தவித சந்தேகமும் இல்லை. ஆனா, தயாரிப்பாளர்களுக்கு எந்தவித இடையூறும் இல்லாமல் படம் பண்ணிகொடுத்துருக்கீங்கனு உங்களால உறுதியாச் சொல்ல முடியுமா?" - தயாரிப்பாளர் தேனப்பன்

``AAA படம் குறித்த பிரச்னைகள் வரும்போதுகூட, `என்மீது தவறு இருந்தால் அதுக்காக மன்னிப்பு கேட்டுக்கிறேன்'னுதான் சொன்னேன். என் மீது தவறு இருந்தால் அதை நான் ஏத்துக்குவேனே தவிர மற்றவர்கள் மீது அநியாயமா பழி சுமத்த மாட்டேன்."
 

simbu

``உங்க இயக்கத்துல நீங்க இன்னொரு ஹீரோவை வெச்சுப் படம் பண்ணுவீங்களா?" - தயாரிப்பாளர் தேனப்பன்

``பண்ணலாம். நல்ல ஐடியா. எனக்கே இப்போ படம் பண்றதுக்கு நேரம் இல்லை. இதுல இன்னொரு ஹீரோவை வெச்சுப் படம் பண்றது எந்த அளவுக்குச் சாத்தியமாகும்னு தெரியலை. அதுக்கான வாய்ப்பு வந்ததுனா கட்டாயம் பண்ணுவேன்."
 

நீங்க இந்தச் சமூகத்துல மாத்தணும்னு நினைக்கிற முதல் விஷயம் எது ? - ஹரிஷ் கல்யாண்

``ஆளுங்கட்சி பண்ண நினைக்கிற விஷயத்தை எதிர்க் கட்சி எதிர்ப்பாங்க. எதிர்க் கட்சி சொல்ற விஷயத்தை ஆளுங்கட்சி நிராகரிப்பாங்க. இவங்களுக்குள்ள சண்டை போட்டிட்டு இருக்காங்களே தவிர மக்களுக்கு என்ன தேவைனு யோசிக்கிறதில்லை. அவங்க இடத்துக்கு நம்ம போனாலும் நம்மளும் அதேதான் பண்ணுவோம். அதனாலதான், இந்த சிஸ்டமே தேவையில்லைனு சொல்றேன். அதை மாத்தணும்".
 

நம்ம சேர்ந்து வொர்க் பண்ணி ஒரு வருஷமாச்சு. எங்கிட்ட நல்ல பவுண்டட் ஸ்கிரிப்ட் இருக்கு. ஒரு படம் பண்ணலாமா ? - கெளதம் மேனன்

``அவர் இது வரைக்கும் ஸ்கிரிப்ட் சொன்னதே இல்லை. சொல்லாமலே ரெண்டு படம் பண்ணிட்டேன். ஸ்கிரிப்ட் சொன்னா நடிக்காமலா இருப்பேன், கண்டிப்பா நடிக்கிறேன்".
 

உன் மனசில என்னை நண்பரா பார்க்கிறீங்களா, இல்லை டான்ஸ் மாஸ்டரா பார்க்கிறீங்களா, அப்புறம் ஏன் என் பட நிகழ்ச்சிக்கு நான் கூப்பிட்டு வரலை? - ராபர்ட்

``முதல்ல நண்பனா பார்க்கிரீயா டான்ஸ் மாஸ்டரா பார்க்கிறியானு கேட்டதே எனக்கு கஷ்டமா இருக்கு. நான் அப்படிப் பார்த்திருந்தா இத்தனை படம் நம்ம ரெண்டு பேரும் பண்ணியிருக்கமாட்டோம். நான் ஆடியோ லான்ச்க்கு ஏன் வரலைன்னா, என்னைக் கூப்பிட வரும்போது என் பேரை போட்டு பத்திரிகை எடுத்துட்டு வந்துட்டாங்க. என்னால வர முடியுமா முடியாதானு தெரிஞ்சுக்காமலே போட்டது கஷ்டமா இருந்தது. `90 ml' படத்தோட ரீ ரெக்கார்டிங் இருந்தது அதான் வரமுடியலை. நான் நண்பனை விட்டுகொடுக்காத ஆளுனு தமிழ்நாட்டுக்கே தெரியும். நீ வருத்தப்பட்டிருந்தா என்னை மன்னிச்சுக்கோ ராபர்ட்"
 

simbu

ஏன் குண்டானீங்க, அப்புறம் எப்படி அதைக் குறைச்சீங்க ? - தொகுப்பாளர் பிரியங்கா

``நான் எப்போவும் ஒல்லியா இருக்கிற மாதிரிதான் தெரியும். அஷ்வின் தாத்தா கேரக்டருக்காக வெயிட் போட வேன்டியாதா இருந்தது. `சிலம்பாட்டம்' படத்துல `தமிழ்' கேரக்டருக்காக வெயிட் போட்டு உடனே அதைக் குறைச்சு `விண்ணைத்தாண்டி வருவாயா' படத்துல நடிச்சேன். அது மாதிரி படத்தைப் பொறுத்துதான்". 
 

உங்கள் மனைவியாக வரப்போறவங்ககிட்ட என்ன தகுதிகள் எதிர்பார்க்கிறீங்க ? - ஶ்ரீரெட்டி

``ஒரு பொண்ணா இருந்தாப் போதும். அதுல நிறைய அர்த்தம் இருக்கு. ஒரு பொண்ணுக்குனு சில விஷயங்கள் இருக்கும். அதை என்னால சில விஷயங்கள் பண்ண முடியாதுங்கிறபோது அந்த ஒரு புரிதல் இருக்கிற பொண்ணா இருந்தால் நல்லாயிருக்கும்னு சொல்றேன். மத்தபடி நான் ஒண்ணும் சொல்லலப்பா.."
 

உங்கக்கிட்ட நிறைய திறமைகள் இருக்கு. அதுல என்ன திறமை உங்களுக்குப் பிடிக்கும் ? - ஶ்ரீரெட்டி

``திறமையைக் காதலிச்சுத் திறமைக்கு மரியாதை கொடுக்கிறேன். அந்தத் திறமை எனக்கு என்கிட்ட பிடிக்கும்"

Do you like the story?

Please Appreciate the Author by clapping!