1000 நாடகங்கள், 500 திரைப்படங்கள்.. யார் இந்த வெள்ளை சுப்பையா? - விவரிக்கிறார் ஆர்.சுந்தர்ராஜன்

மறைந்த நடிகர் `வெள்ளை' சுப்பையா பற்றிய நினைவுகளைப் பகிர்ந்துகொள்கிறார், ஆர்.சுந்தர்ராஜன்

1000 நாடகங்கள், 500 திரைப்படங்கள்.. யார் இந்த வெள்ளை சுப்பையா? - விவரிக்கிறார் ஆர்.சுந்தர்ராஜன்

கைச்சுவை நடிகர் `வெள்ளை' சுப்பையா தனது 74-வது வயதில் மறைந்துவிட்டார். அவருக்கு ஒரேயொரு மகள் இருக்கிறார். சுப்பையா நடித்த படங்களிலேயே `வைதேகி காத்திருந்தாள்' திரைப்படம் மிகவும் பிரபலமானது. அந்தப் படத்தில் கல்யாணப் பெண்ணான ரேவதி தன் கணவருடன் பரிசலில் அக்கரையைக் கடக்கும் காட்சியில் இளையராஜாவின் இசையில் இடம்பெற்ற ஒரு பாடல் வரும். `மேகங் கருக்கையிலே...' எனத் தொடங்கும் அப்பாடலில் `வெள்ளை' சுப்பையா நடித்திருப்பார். `வைதேகி காத்திருந்தாள்' திரைப்படத்தின் இயக்குநர் ஆர்.சுந்தர்ராஜன் அவர்களிடம் வெள்ளை சுப்பையாவின் நினைவுகள் குறித்துக் கேட்டோம்.

``40 வருடங்களுக்கு முன் சென்னை தேனாம்பேட்டையில் நான், பாக்யராஜ், `சங்கிலி' முருகன், வெள்ளை சுப்பையா, கருப்பு சுப்பையா, பெரிய கருப்புத்தேவர்... எல்லோரும் ஒரே காம்பவுண்டில் வசித்தோம். நானும், பாக்யராஜும் 10-ம் நம்பர் வீட்டில் இருந்தோம். அப்போது நாங்கள் இயக்குநர்கள் ஆகவில்லை. எங்களை அடிக்கடி பார்க்கவரும் கவுண்டமணி, செந்தில், ஜனகராஜ் ஆகியோரும் நடிகர்கள் ஆகவில்லை. `16 வயதினிலே' படத்தில் பாக்யராஜ் உதவி இயக்குநராக வேலை பார்த்தபோது, `கிழக்கே போகும் ரயில்' படத்தில் கவுண்டமணியை நடிக்க வைத்தார். இயக்குநர் ஆனபிறகு `சங்கிலி' முருகனை `ஒரு கை ஒசை' படத்தில் நடிகராக்கினார்.

வெள்ளை சுப்பையா

நான் இயக்குநரான பிறகு, என் படத்தில் கோயம்புத்தூர் ஸ்லாங் பேசும் ஒரு நடிகர் தேவைப்பட்டார். `கிழக்கே போகும் ரயில்' படத்தில் `பாஞ்சாலி கொஞ்சம் தூக்கிவிடவா..' என்று சாதாரண மொழி நடையில் வசனம் பேசிய கவுண்டமணியை என் படத்தில் `காட்டை வித்தே கள்ளை குடிச்சாலும் கவுண்டன் கவுண்டன்தான்டா' என்று கோவை ஸ்லாங்கில் பேசவைத்தேன். பிறகு கிராமப் படங்கள் நிறைய வர ஆரம்பித்ததால் வெள்ளை சுப்பையா, கருப்பு சுப்பையா, குள்ளமணி `பசி' நாராயணன் எல்லோருக்கும் பல வாய்ப்புகள் கிடைத்தன. வெள்ளை சுப்பையா 1000-க்கும் அதிகமான நாடகங்களில் நடித்திருக்கிறார். 500-க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்திருக்கிறார். என் படங்களில் விதவிதமான கேரக்டர்களில் நடிக்கும்போது, அவருடைய நாடக அனுபவம் பலமுறை கைகொடுத்திருப்பதை கண்கூடாகப் பார்த்து வியந்திருக்கிறேன். நாங்களும் அவருடைய நாடக அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டோம். சுப்பையாவின் சொந்த ஊர் மேட்டுப்பாளையம். அங்கேயே தனது ஒரே மகளைத் திருமணம் செய்து கொடுத்தார்.

வெள்ளை சுப்பையா

கடந்த ஏழு வருடங்களுக்கு முன்பு வரை அவ்வப்போது சினிமாவில் தலை காட்டினார். சினிமாவில் பெரிதாக வாய்ப்பும் இல்லை, அவருக்கும் வயதாகிவிட்டது. இப்போதுள்ள இளம் இயக்குநர்கள் பலருக்கு அவருடைய திறமை தெரியாது என்பதால், அவரைப் புதிய படங்களில் நடிக்க அழைக்கவில்லை. அதனால், சொந்த ஊரான மேட்டுப்பாளையத்துக்கே போய் உறவினர்கள், குடும்பத்தினரோடு செட்டிலாகி வாழ்ந்தார். தனியாக வர வேண்டும் என்பதால், அவர் சென்னைக்கு வருவதையே தவிர்த்துக் கொண்டார். எப்போதாவது நடிகர் சங்கத் தேர்தல் வரும்போது மட்டும் சென்னைக்கு வந்து தவறாமல் வாக்களித்துவிட்டுச் செல்வார். அப்போது என்னை வந்து பார்த்துவிட்டு நீண்டநேரம் மனம் விட்டுப் பேசுவார். முதுமை வந்துவிட்டதால், அதற்குரிய அவஸ்தைகளை அனுபவித்து வந்தார். நாங்கள் இருவரும் இரண்டு நாளைக்கு ஒரு முறை போனில் தவறாமல் பேசிக்கொள்வோம். இனிமே என் போனில் சுப்பையாவின் குரல் கேட்காது என்று நினைக்கும்போது, மனம் கனத்து வலிக்கிறது!" என்று கலங்குகிறார், ஆர்.சுந்தர்ராஜன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!