வெளியிடப்பட்ட நேரம்: 11:44 (19/09/2018)

கடைசி தொடர்பு:11:44 (19/09/2018)

``விஜயகாந்த் முதல் பரத் வரை... ஒரே நாளில் `டபுள் ரிலீஸ்' கொடுத்த ஹீரோக்கள்!"

ஒரே நாளில் தனது நடிப்பில் வெளியான இரு படங்களின் ரிலீஸைக் கண்ட ஹீரோக்கள் இவர்கள்.

``விஜயகாந்த் முதல் பரத் வரை... ஒரே நாளில் `டபுள் ரிலீஸ்' கொடுத்த ஹீரோக்கள்!

ஆரம்பகால சினிமா தொடங்கி இன்றைய சினிமா வரை, தமிழ் சினிமா பல விஷயங்களில் வளர்ச்சியடைந்திருக்கிறது. வளர்ச்சிக்கேற்ப நடிகர்களும் தங்களை அப்டேட் செய்து வருகிறார்கள். இப்போதெல்லாம் பல நடிகர்கள் ஒரு படத்தை முடித்துவிட்டுதான், அடுத்த படத்தின் ஷூட்டிங்கிற்குச் செல்கிறார்கள். ஆனால், முன்பெல்லாம் ஒரு ஹீரோ ஒரே நேரத்தில் பல படங்களில் நடிப்பார்; வருடத்துக்குப் பல படங்களை ரிலீஸ் செய்வார். சில சமயங்களில் ஒரு ஹீரோவுக்கு ஒரே நாளில் இரண்டு படங்களும் ரிலீஸாகியிருக்கின்றன. அப்படி விஜயகாந்த் முதல் பரத் வரை எந்தெந்த ஹீரோக்களுக்கு ஒரே நாளில் இரண்டு படங்கள் ரிலீஸாகியிருக்கின்றன என்பதைப் பார்ப்போம்.

விஜயகாந்த் :

1980-களின் தொடக்கத்திலிருந்தே விஜயகாந்தின் சினிமா கரியர் உச்சம் பெற ஆரம்பித்துவிட்டது. முதல் வருடம் மூன்று, அடுத்த வருடம் ஆறு எனப் பல படங்களை ரிலீஸ் செய்தவர், வருடத்துக்கு 15 படங்களுக்கு மேல் ரிலீஸ் செய்திருக்கிறார். 

விஜயகாந்த்

ஆர்.சுந்தர்ராஜன் இயக்கத்தில் விஜயகாந்த், அம்பிகா நடித்த `தழுவாத கைகள்’ படமும், எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் விஜயகாந்த், ராதிகா நடித்த `தர்ம தேவதை’ படமும் 1986, நவம்பர் 1- ம் தேதி ரிலீஸாகின. அதற்கு அடுத்த வருடம், எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் விஜயகாந்த், ராதா, ரவிச்சந்திரன் நடித்த `சட்டம் ஒரு விளையாட்டு’ படமும், ஆர்.அரவிந்த்ராஜ் இயக்கத்தில் விஜயகாந்த், ராதிகா, ராதா, ராதாரவி நடித்த `உழவன் மகன்’ படமும் ஒரே நாளில் (1987, அக்டோபர் 21) ரிலீஸாகியிருக்கின்றன. 

அர்ஜூன் :

1981- ம் ஆண்டு கன்னடத்தில் நடிகராக அறிமுகமான அர்ஜூன், 1984- ம் ஆண்டு `நன்றி’ படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். கோலிவுட்டுக்கு அறிமுகமான பிறகு, தெலுங்கு, கன்னடம் என மாறி, மாறி நடித்துவந்தாலும் தமிழ்ப் படங்களில் அதிகமாகக் கவனம் செலுத்தினார், அர்ஜூன்.

அர்ஜூன்

இளையராஜா இசையில் அர்ஜூன், பல்லவி நடித்த `துருவ நட்சத்திரம்’ படமும், ஆர்.கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் அர்ஜூன், ராதிகா, எஸ்.எஸ்.சந்திரன், வினு சக்கரவர்த்தி, `வெண்ணிற ஆடை’ மூர்த்தி, ஒய்.ஜி.மகேந்திரன், சார்லி எனப் பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்த `கற்பகம் வந்தாச்சு’ படமும் 1993- ம் ஆண்டு, அக்டோபர் 15- ம் தேதி ரிலீஸாகியிருக்கின்றன.

பிரபு :

சிவாஜி கணேசனின் மகனும், ரசிகர்களால் இளைய திலகம் எனச் செல்லமாக அழைக்கப்பட்டவருமான பிரபு, `சங்கிலி’ படத்தில் தனது அப்பாவோடு இணைந்து நடித்து, சினிமாவுக்குள் வந்தார். இவர் நடித்த நூற்றுக்கணக்கான படங்களில், சில படங்கள் மட்டுமே வேற்று மொழிப் படங்கள். பெரும்பாலும் தமிழ்ப்படங்களில் கவனம் செலுத்திய பிரபுவுக்கு, 1990- ம் ஆண்டு பொங்கல் தினத்தன்று இரண்டு படங்கள் ரிலீஸாகின. 

பிரபு

கலைஞரின் திரைக்கதை, வசனத்தில் சந்தான பாரதி இயக்கத்தில் வெளியான படம், `காவலுக்குக் கெட்டிக்காரன்’. இதில், பிரபு, நிரோஷா, ராஜேஷ், நாசர், வீ.கே.ராமசாமி, மனோரமா, எஸ்.எஸ்.சந்திரன், `வெண்ணிற ஆடை’ மூர்த்தி, மேஜர் சுந்தர்ராஜன் எனப் பல சீனியர் நடிகர்கள் நடித்திருந்தார்கள். அதேநாளில்தான், பிரபு - டி.பி.கஜேந்திரன் காம்போவில் உருவான `நல்ல காலம் பொறந்தாச்சு’ படமும் ரிலீஸாகியிருக்கிறது. `பட்ஜெட் பத்மநாபன்’, `மிடில் கிளாஸ் மாதவன்’, `பந்தா பரமசிவம்’ என பிரபு - டி.பி.கஜேந்திரன் காம்போவில் வந்த எவர் க்ரீன் காமெடி படங்களுக்கு அடிதளம் போட்டதே, `நல்ல காலம் பொறந்தாச்சு’ படம்தான். இதில், பிரபுவுடன், ராஜேஷ், ரம்யா கிருஷ்ணன், சுஜாதா நடித்திருந்தார்கள்.

பரத் :

ஷங்கரின் `பாய்ஸ்’ படத்தின் மூலம் 2003-ல் தமிழுக்கு அறிமுகமானவர், பரத். தனது கரியரின் தொடக்கம் முதலே `செல்லமே’, `காதல்’, `பட்டியல்’, `எம் மகன்’ என வித்தியாசமான படங்களாகத் தேர்ந்தெடுத்து நடித்துவந்த பரத்துக்கு, 2006-ல் `சென்னைக் காதல்’, `வெயில்’ என இரண்டு படங்களுமே டிசம்பர் 8- ம் தேதி ரிலீஸாகின.

பரத்

கலைப்புலி தாணு தயாரிப்பில் விக்ரமன் இயக்கத்தில் பரத், ஜெனிலியா நடிக்க, `சென்னைக்காதல்’ படத்துக்கு ஜோஸ்வா ஸ்ரீதர் இசையமைத்திருப்பார். வசந்தபாலன் இயக்கத்தில் பரத், பசுபதி, பாவனா எனப் பலர் நடிக்க, 'வெயில்’ படத்தை ஷங்கர் தயாரித்திருந்தார்.

 

 


டிரெண்டிங் @ விகடன்