வெளியிடப்பட்ட நேரம்: 11:57 (29/09/2018)

கடைசி தொடர்பு:12:41 (29/09/2018)

``இது எங்க அம்மாவோட சொத்து; வீட்டை விட்டுப் போகமாட்டேன்!" - வனிதா விஜயகுமார்

நடிகை வனிதா விஜயகுமார், அவரின் குடும்ப வாழ்க்கை மற்றும் தற்போது நடந்துவரும் பிரச்னைகள் குறித்துப் பேசியிருக்கிறார்.

``இது எங்க அம்மாவோட சொத்து; வீட்டை விட்டுப் போகமாட்டேன்!

``எங்க அப்பாவைப் பற்றிப் பல பேருக்குத் தெரியாது. அவர் நிறைய தப்பு பண்ணியிருக்கார். எங்க குடும்பப் பிரச்னை ரொம்பப் பெருசு. நடந்த விஷயங்களைப் பற்றி ஆரம்பத்திலிருந்து சொன்னாதான் புரியும்!'' என்கிறார், நடிகை வனிதா விஜயகுமார். சமீபத்தில் சொத்துப் பிரச்னை காரணமாக வனிதா மற்றும் அவரது தந்தை விஜயகுமாருக்கு இடையில் சண்டை ஏற்பட்டது. இது தொடர்பாக வனிதாவிடம் பேசினேன். 

``எங்க அப்பாவுக்கு ரெண்டு மனைவிகள். முதல் மனைவி முத்துக்கண்ணு. அவங்களுக்கு மொத்தம் மூன்று குழந்தைகள். அருண் விஜய் அதில் மூணாவது பையன். எங்க அப்பாவோட இரண்டாவது மனைவிதான், எங்க அம்மா மஞ்சுளா. அப்பாவும், அம்மாவும் காதல் திருமணம் பண்ணிக்கிட்டவங்க. முதல் மனைவி முத்துக்கண்ணு தலைமையில்தான் இந்தத் திருமணமே நடந்தது. முத்துக்கண்ணுக்கு எங்க அம்மாவோட நகை, பணம், புகழ் எல்லாம் தேவைப்பட்டது. அதனாலதான், கணவருக்கு ரெண்டாவது திருமணம் செஞ்சு வைக்க சம்மதிச்சாங்க.  

வனிதா விஜயகுமார்

எங்க அம்மா, அப்பாவுக்குத் திருமணம் முடிந்து 4 வருடம் கழிச்சு நான் பிறந்தேன். தவம் இருந்து பிறந்த குழந்தை நான்னு சொல்வாங்க. குழந்தை பிறக்கணும்னு கடவுள்கிட்ட வேண்டி, புத்துக் கோயில் கட்டியிருக்காங்க, அம்மா. நான் பிறந்தப்போ, அருண் விஜய்க்கு 7 வயசு. அதுவரை அருண் விஜய் மேல எல்லோரும் வெச்சிருந்த பாசம், நான் பிறந்தபிறகு என் பக்கம் திரும்பியிருக்கு. அப்படி என்னை செல்லமா வளர்த்தாங்க, எங்க அம்மா. எனக்குப் பிறகுதான் ஶ்ரீதேவி, ப்ரீத்தா எல்லோரும். 

அப்பாவுக்கு பட வாய்ப்புகள் குறைந்த சமயம். குடும்பத்துல கொஞ்சம் பணக் கஷ்டம் இருந்தது. அதனால, அம்மா அமெரிக்காவுக்குப் போய் பிசினஸ் பண்ணலாம்னு முடிவெடுத்தாங்க. முதலில் அம்மா அங்கே போனாங்க. பிறகு, முத்துக்கண்ணு குடும்பமும் நாங்களும் ஒண்ணா சேர்ந்து அமெரிக்காவுக்குப் போனோம். அம்மா, அவங்ககிட்ட இருந்த நகைகள் எல்லாத்தையும் அடகு வெச்சு ரெஸ்டாரன்ட் ஒண்ணு ஆரம்பிச்சாங்க. அந்த பிசினஸ் நல்லமுறையில நடந்தது, பணப் பிரச்னையும் தீர்ந்தது. 

பிறகு, முத்துக்கண்ணுவின் முதல் பொண்ணுக்கு, நடிகை விஜயகுமாரியின் பையன் ரவிக்குமாரைக் கல்யாணம் செஞ்சு கொடுக்க முடிவு பண்ணாங்க. விஜயகுமாரியும் அவங்க பையனுடன் வந்து எங்க வீட்டில் தங்கினாங்க. அந்த சமயத்துல எங்க அம்மாவுக்கும், முத்துக்கண்ணுக்கும் இடையில் சண்டை மூட்டிவிட்டு பிரிச்சு விட்டுட்டாங்க. அப்பாவும், முத்துக்கண்ணுக்கு சப்போர்ட் பண்ணி இந்தியாவுக்குக் கூட்டிக்கிட்டு போயிட்டார். எங்க அம்மா, அப்பாகிட்ட பேசுறதுக்கு ரொம்பவே முயற்சி பண்ணினாங்க. ஆனா, அப்பாவை அம்மாகிட்ட பேசுறதுக்கு முத்துக்கண்ணு வீட்டுல இருந்த யாரும் விடல. இந்தச் சூழ்நிலையில் எனக்கு உடல்நிலை சரியில்லாமப் போச்சு. ஒரு வருடத்துக்குப் பிறகு அப்பா அமெரிக்காவுக்கு வந்தார். பிறகு, நாங்க எல்லோரும் அப்பாகூட இந்தியாவுக்கு வந்துட்டோம். அந்தச் சூழல்ல அம்மா ரொம்ப உடைஞ்சு போயிருந்தாங்க'' சொல்லும்போது, தத்தளிக்கிறது, வனிதாவின் குரல். 

முத்துகண்ணு விஜயகுமார் மற்றும் மஞ்சுளா

``இந்தப் பிரச்னைகளுக்குப் பிறகுதான், அப்பாவுக்கு `அக்னி நட்சத்திரம்' பட வாய்ப்புக் கிடைச்சது. பிறகு, அப்பா சொந்த வீடு வாங்கினார். எங்க அப்பாவுக்கு எப்போவுமே முதல் மனைவி முத்துக்கண்ணு குடும்பம்தான் பெருசா தெரிந்தது. அப்பா ஏதாவது சொத்துகள் வாங்குனா, முதலில் அம்மா பெயரில் வாங்குவார். பிறகு, வரி பிரச்னைனு சொல்லி அவருடைய பெயருக்கு சொத்துகளை மாற்றி, அதை அப்படியே முதல் மனைவி முத்துக்கண்ணு குடும்பத்துக்கு எழுதிக் கொடுத்திடுவார். அருண் விஜய் பெயரில் நிறைய சொத்துகளை இப்படி எழுதிக் கொடுத்திருக்கார். அவனுடைய படங்கள் ஒடாமப் போக, கடைசியில் சொத்துகளையெல்லாம் அடகு வைக்கிற அல்லது விற்கிற நிலைமைக்குக் கொண்டு வந்திடுவான். முதல்ல மாமானர் சொத்தை விற்றான். இப்போ எங்க அப்பா சொத்தை விற்கிறான். 

நான் சினிமாவில் இருந்த காலத்தில், பெரிய இசைக் குடும்பத்தைச் சேர்ந்த பையன் என்னைக் காதலித்தான். ஆனா, இந்தத் திருமணத்துக்கு எங்க வீட்டில் ஒப்புக்கவே இல்லை. அதேமாதிரி நான் பெரிய நடிகர் ஒருவரைக் காதலித்தேன். அதை வீட்டில் சொன்னபோதும், சம்மதம் சொல்லல. பிறகுதான், சீரியல் நடிகர் ஆகாஷ் என்னை விரும்புவதாகச் சொல்லி வீட்டில் பெண் கேட்டு, என்னைத் திருமணம் செய்துகொண்டார். பிறகு, சில ஆண்டுகளில் எங்களுக்குள் கருத்து வேறுபாடாகி, விவாகரத்து நடந்தது.  

இயக்குநர் ஹரி உதவி இயக்குநராக இருக்கும்போதே, என் தங்கச்சி ப்ரீத்தியைக் கல்யாணம் பண்ணிக்கிட்டார். பெற்றோர்களும் இதற்குச் சம்மதம் தெரிவித்தனர்.  ஶ்ரீதேவி ஆந்திரா பக்கம் இருக்கிற மிடில் கிளாஸ் ஃபேமிலி பையனைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு போயிட்டா. ப்ரீத்தியும், ஶ்ரீதேவியும் திருமண வாழ்க்கையில் செட்டில் ஆயிட்டதுனால, சொத்துப் பிரச்னை காரணமா கோர்ட், கேஸ்னு அலையமாட்டாங்க. 

கணவர் துணையில்லாம இருக்கிற ஒரே பொண்ணு நான் மட்டும்தான். அதனால, சொத்து பற்றி வாய் திறக்கக் கூடாதுனு என்னை அடக்கி வைக்கப் பார்க்கிறாங்க. என் மகனை வளர்க்கும் பிரச்னையில், எங்க அப்பா தலையிட்டு ஆகாஷ் கூடவே என்னோட பையனைத் தங்க வைத்தார். பேரன்மேல இருக்கிற பாசத்துலதான் இப்படிப் பண்றார்னு நினைச்சேன். ஆனா, சொத்துல பங்கு கேட்பாங்கனுதான் அதையும் செஞ்சிருக்கார்னு இப்போதான் புரியுது. 

இயக்குநர் ஹரி

தைரியமான பொண்ணு நான். அம்மாவை, அப்பா ரொம்பவே கொடுமைப்படுத்தியிருக்கார். சில சமயம் பிரச்னை நடக்குறப்போ, அம்மா ரஜினி அங்கிள் வீட்டுல போய் தங்கிக்குவாங்க. லதா ரஜினிகாந்த் எங்க அம்மாவுக்கு ஆறுதல் சொல்வாங்க. இயக்குநர் பி.வாசுவுக்கும் எங்க வீட்டுல நடக்கிற பிரச்னைகள் தெரியும். எங்க அப்பா, அம்மாவைக் கொடுமைப்படுத்துறதை நேர்ல பார்த்திருக்கார். எங்க அம்மா இன்னும் இருபது வருடம் உயிரோடு இருந்திருக்க வேண்டியவங்க... அப்பா செஞ்ச கொடுமையாலதான் உடல்நிலை சரியில்லாம இறந்துட்டாங்க. 

அம்மாவுக்குக் குடிப் பழக்கத்தை அறிமுகப்படுத்தி வைத்ததே அப்பாதான். எங்க அம்மா வாழ்ந்த வீட்டில், இப்போ என் பொண்ணுகூட நான் வசிக்கிறேன். இது எங்க அம்மா சொத்து. இந்த வீட்டை விட்டு நான் வெளியே போகமாட்டேன். இயக்குநர் ஹரியும், அருண் விஜய்யும் என்கிட்ட நேரடியா மோதாம, பின்னால சில வேலைகள் பார்த்துக்கிட்டு இருக்காங்க. எல்லோரையும் சட்டப்படி நான் கோர்ட்டில் சந்திப்பேன்.'' என்கிறார், வனிதா விஜயகுமார். 

அருண்விஜய்

இதுகுறித்து நடிகர் விஜயகுமாரிடம் கேட்டதற்கு, ``இந்தப் பிரச்னை குறித்து சொல்ல எதுவுமில்லை. சட்டப்படி பார்க்கலாம்!" என்றார். நடிகர் அருண்விஜய், ``அவங்களைப் பத்திப் பேச விரும்பல. அவங்க என்னவேணா சொல்வாங்க; எப்படிவேணா பேசுவாங்க. அவங்க கேள்விகளுக்கெல்லாம் நான் பதில் சொல்ல விரும்பல!" என்று கூறினார்.  

நீங்க எப்படி பீல் பண்றீங்க