வெளியிடப்பட்ட நேரம்: 10:31 (19/10/2018)

கடைசி தொடர்பு:10:31 (19/10/2018)

``ஸ்டன்ட் யூனியனிலிருந்து அன்பறிவ் நீக்கம் ஏன்?!" - முழுப் பின்னணி

ஸ்டன்ட் யூனியனிலிருந்து ஸ்டன்ட் மாஸ்டர்கள் அன்பறிவ் நீக்கம் செய்யப்பட்ட காரணத்தைப் பகிர்ந்துகொள்கிறார், ஸ்டன்ட் யூனியன் தலைவர் சுப்ரீம் சுந்தர்.

``ஸ்டன்ட் யூனியனிலிருந்து அன்பறிவ் நீக்கம் ஏன்?!

மிழ் சினிமாவின் இரட்டை ஸ்டன்ட் மாஸ்டர்கள் அன்பறிவ் (அன்புமணி, அறிவுமணி). `மெட்ராஸ்', `கபாலி', `இருமுகன்' உள்ளிட்ட படங்களுக்குச் சண்டைப் பயிற்சியாளராகப் பணியாற்றி உள்ளனர். இவர்கள் ஸ்டன்ட் யூனியனிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

சுப்ரீம் சுந்தர்

இது குறித்து, ஸ்டன்ட் யூனியன் தலைவர் சுப்ரீம் சுந்தரை தொடர்புகொண்டு பேசியபோது, ``அவங்க ஆரம்பத்திலிருந்தே சின்னச் சின்ன தவறுகள் பண்ணிக்கிட்டு இருந்தாங்க. யூனியன் சட்டத்தை மதிக்கிறதில்லை. அன்பு, அறிவு ரெண்டுபெரும் சேர்ந்து ஒரு படத்துல வொர்க் பண்றதே யூனியன் சட்டப்படி தவறு. ஒருத்தர்தான் மாஸ்டர் ஆக முடியும். ரெண்டுபேரும் ஒரே படத்துல வொர்க் பண்றதுனால, இவர் சொல்றதை செஞ்சா அவர் திட்டுறார்; அவர் சொல்றதை செஞ்சா இவர் திட்டுறார்னு ஃபைட்டர்கள் யூனியன்ல புகார் கொடுக்குறாங்க. அவருடைய சொந்த இடத்துல ரெடி பண்ணி ஃபைட்டர்களை மிரட்டிக் கூட்டிக்கிட்டு, ரோப் ஷாட் வெச்சு ரிகர்சல் கொடுக்கிறார். அது யூனியனுக்குத் தெரியாது. கேட்டா, பயிற்சினு சொல்றார். ஆனா, அது பயிற்சி இல்லை; ஒத்திகை. ரிகர்சல் பண்ணும்போது அடிபட்டா, அந்த புரொடக்‌ஷன் கம்பனியோ, யூனியனோதான் பொறுப்பு ஏத்துக்கணும். ஆனா, இவர் பயிற்சி கொடுக்கும்போது அடிபட்டா, ஃபைட்டர்கள் குடும்பத்துக்கு யார் பதில் சொல்றது?!

தவிர, ரிகர்சல் நடத்துனா யூனியன்ல ரிஜிஸ்டர் பண்ணணும். ஃபைட்டர்களுக்குச் சம்பளம் கொடுக்கணும். அதுக்காகத்தான், யூனியனுக்குத் தெரியாமல் இப்படிப் பண்ணிக்கிட்டு இருக்காங்க. ரெண்டு மாசத்துக்கு முன்னாடி அங்கிருந்த ஒரு ஃபைட்டர் எங்களை மிரட்டிக் கூப்பிடுறாங்கன்னு யூனியன்ல சொல்லிட்டார். சரினு அவங்ககிட்ட கேட்டா, இது பயிற்சி. யூனியன் வளர்ச்சிக்காக, ஃபைட்டர்கள் வளர்ச்சிக்காகனு சொல்றாங்க. சங்கத்துல கூட்டத்தைக் கூட்டிப் பிரச்னையைப் பேசினோம். அப்போ ரெண்டுபேரும், `இனிமே இப்படிப் பண்ணமாட்டோம்'னு மன்னிப்பு கேட்டாங்க. அப்புறம், இவங்களுக்கு எதிரா பேசுனவங்களை ஆள் வெச்சு மிரட்டினாங்க. பாதிக்கப்பட்டவங்க யூனியன்ல புகார் கொடுத்தாங்க. நாங்க விசாரிச்சப்போ, எனக்கு யூனியன்ல நியாயம் கிடைக்கலை. எனக்கு எதிரா எல்லோரும் பேச ஆரம்பிச்சுட்டாங்க. உயிர் பயத்துனால நாங்கதான் அப்படி மிரட்டினோம்னு சொன்னாங்க. அதனாலதான், சங்கத்துல இருந்து நீக்கிட்டோம். அதுக்கு அவங்க யூனியன்மேல வழக்கு போட்டியிருக்காங்க. `அது உங்கள் சங்கப் பிரச்னை. நீதிமன்றம் அதில் தலையிடாது.'னு கோர்ட் சொல்லியிருக்கு. வர்ற 31- ம் தேதி அதுக்கான வாய்தா வருது. அதுல தெரிஞ்சிடும்!" என்றார்.    

அன்பறிவ்

இது தொடர்பாக அன்பறிவிடம் பேசினோம். ``ஃபாரின்ல எல்லாம் ஒரு படத்துக்கு ஷூட்டிங் போகுறதுக்கு முன்னாடி ஸ்டன்ட் மாஸ்டர்கள் அவங்க ஃபைட்டர்களை வெச்சுப் பயிற்சி எடுத்துக்கிட்டுப் போவாங்க. நம்ம ஊர்ல அப்படிக் கிடையாது. நேரடியா ஷூட்டிங் ஸ்பாட்டுக்குப் போய் ஃபைட் பண்ணும்போது, அடி படுது; நேரமும் வீணாகுது. அதனால, நாங்க மாஸ்டர் ஆனதிலிருந்து வொர்க் ஷாப் வெச்சு ஆர்வமா இருக்கிற ஃபைட்டர்களுக்கு கடந்த 5 வருடமா பயிற்சி கொடுத்து தயார் பண்ணிக்கிட்டு வர்றோம். காரணம், ஃபைட்டர்களால ஒரு காட்சி ரீடேக் போகக் கூடாது. இப்போ இருக்கிற ஹீரோக்கள் ஸ்டன்ட்டை ரொம்பத் தெளிவாப் பண்றாங்க. அவங்களுக்கு முன்னாடி பயிற்சி இல்லாத ஃபைட்டர்களை நிற்க வெச்சு சொதப்புனா, முகம் சுளிக்கிறாங்க. அதனாலதான், ஃபைட்டர்களுக்கு இங்கே இலவசமாப் பயிற்சி கொடுக்கிறோம். அதைத்தான் அவங்க தப்புனு சொல்றாங்க. இது ரிகர்சல்னு சொல்றாங்க. ரிகர்சல்னா ஹீரோ, கேமரா எல்லாம் இருக்கணும். நாங்க பண்றது பயிற்சி. சரி, நீங்க மீட்டிங்கிற்கு ஏற்பாடு பண்ணுங்க, நாங்க அங்கே வந்து பேசுறோம்னு சொன்னேன். ஏற்பாடு பண்றோம். ஆனா, நீங்க பண்றது தப்புதான்னு எங்களை நீக்கிட்டாங்க. மீட்டிங்ல எங்களுக்குப் பேச வாய்ப்பே கொடுக்கலை. அப்படிப் பேசுனா, எதிர்த்துப் பேசுறீங்களானு கேட்குறாங்க.

நாங்க ரெண்டுபேரும் பிறந்ததிலிருந்து ஒண்ணாதான் இருக்கோம். எங்க ரெண்டுபேரையும் ஒண்ணா வொர்க் பண்ணக் கூடாதுனு சொல்றாங்க. ஏன்னு கேட்டா, நீங்க ட்வின்ஸ். எல்லோரும் உங்களைப் பார்த்து இம்ப்ரஸ் ஆகுறாங்க. அதனால, உங்களுக்கு அதிக பட வாய்ப்பு வருதுனு சொல்றாங்க. சட்டத்துல ரெண்டு பேர் சேர்ந்து வொர்க் பண்ணக் கூடாதுனு இருக்குன்னா... 5 வருடமா ஏன் சொல்லலை?! இது எந்த விதத்துல நியாயம்னு தெரியலை. நாங்க இப்படி ஸ்மார்டா வொர்க் பண்ணா எங்களுக்கு நல்ல பேர் வந்திடும்னு இப்படிப் பண்றாங்க. ஒருசிலரைத் தவிர, மத்தவங்க எல்லோரும் 40 வயசுக்குமேல உள்ளவங்கதான். அதனால, அவங்க அவ்ளோ ரிஸ்க் எடுத்துப் பண்ணமாட்டாங்க. 5 வருடமா பயிற்சி கொடுத்துக்கிட்டு இருக்கோம்னு யூனியனுக்கும் அது தெரியும். வர்ற டிசம்பர்ல நடக்கப்போற ஸ்டன்ட் யூனியன் எலெக்‌ஷன்ல நான் (அன்புமணி) தலைவர் போட்டிக்கு நிற்கிறேன். அது அவங்களுக்குத் தெரியும். அதனால, அவங்க எங்கமேல இருக்கிற காழ்ப்பு உணர்ச்சியிலதான் யூனியனிலிருந்து நீக்கிட்டாங்க. நான் யாரையும் வெச்சு மிரட்டலை. அவங்கதான் எங்களுக்கு ஆதரவா இருக்கிறவங்களை அடிச்சு மிரட்டியிருக்காங்க. நடிகர்கள் எல்லோருக்கும் நாங்க எப்படினு தெரியும். ஒண்ணா வேலை பார்க்கக் கூடாது, சங்கத்துல இருந்து நீக்கம், 3 வருடம் சங்கத் தேர்தல்ல நிற்கக் கூடாது... இப்படி எங்களைப் பல வழிகளில் தாக்குறதுக்கான காரணம் என்ன?!" என்று கேள்வி எழுப்பியிருக்கின்றனர், ஸ்டன்ட் மாஸ்டர்கள் அன்பறிவ்.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்