வெளியிடப்பட்ட நேரம்: 14:38 (28/10/2018)

கடைசி தொடர்பு:14:38 (28/10/2018)

"#MeToo-ல வராத மாதிரி ரொமான்ஸ் பண்ணப் போறேன்!" - 'திமிரு பிடிச்ச' விஜய் ஆண்டனி

"நல்ல 'சர்கார்' அமையணும்னா அங்க ஒரு திமிரு புடிச்ச அதிகாரி இருக்கனும்" - திமிரு பிடிச்சவன் ப்ரஸ்மீட் கலகல!

விஜய் ஆண்டனி, நிவேதா பெத்துராஜ் நடிப்பில் உருவான 'திமிரு புடிச்சவன்' தீபாவளி வெளியீடாகத் திரைக்கு வர இருக்கிறது. அதனையொட்டி படம் குறித்த சுவாரஸ்யமான தகவல்களை பத்திரிகையாளர் சந்திப்பில் பகிர்ந்து கொண்டனர், படக்குழுவினர்கள்.

நிவேதா பெத்துராஜ்

நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நிவேதா பெத்துராஜ், "முதலில் இந்தக் கதையை கேட்கும்பொழுதே, 'நாற்பது நாள்கள் ஷூட்டிங் இருக்கும், நீங்க புல்லட்லாம் ஓட்டணும்'னு சொல்லி கணேஷ் சார் பயமுறுத்திட்டாங்க. பத்து நாட்களில்  புல்லட் ஓட்ட கத்துக்கிட்டேன். இந்த படத்துக்கு நானே டப்பிங்கும்  பண்ணிருக்கேன். ஷூட்டிங்கில் ஒவ்வொரு விஷயமும் ரொம்ப பிடிச்சு பண்ணேன். எல்லாரும் போலீஸ் டிரெஸ்ஸில்தான் இருப்போம். அந்த டிரெஸ்ஸில் இருக்கும்போதுதான் உண்மையான போலீஸ்லாம் வெயிலில்  நின்னு  கஷ்டப்படுகின்ற அந்த வலி எனக்கு நல்லா புரிஞ்சது. அதேமாதிரி, ஒருநாள் புல்லட் ஓட்டினேன், மறுநாள் மீன்பாடி வண்டி  ஓட்டினேன். இப்படி தினந்தினம் வித்தியாசமாக ஏதாவது ஒண்ணு கணேஷ் சார் கொடுத்துட்டு இருந்தாரு. இதுவரைக்கும் நான் நடிச்சதிலேயே மிகச்சிறந்த நடிப்பை இந்தப் படத்துக்குதான் கொடுத்திருக்கேன். டப்பிங்லயே விழுந்து விழுந்து சிரிச்சேன். சென்சார்ல கூட என் டப்பிங்கை பாராட்டுனாங்க" என்றார்.

திருநங்கை சிந்துஜா பேசும்பொழுது, "தமிழ்நாட்டின் முதல் திருநங்கை எஸ். ஐ ஆன ப்ரித்திகா யாசினி கதாபாத்திரத்தைதான் நான் பண்ணிருக்கேன். இந்த நேரத்தில் அவங்களுக்கு என்னுடைய நன்றிகளை தெரிவிச்சிக்கிறேன். விஜய் ஆண்டனி சார் எல்லாரிடமும் மிகவும் மரியாதையா நடந்துக்கொள்வார். பொதுவாக, இந்தச் சமூகத்தில் ஒரு திருநங்கையை மரியாதையில்லாமல்தான்  நடத்துவாங்க. ஆனால், இந்தப் படத்தில் என்னுடன் பணிபுரிந்த அனைவரும் என்னை ஒரு திருநங்கையாக பார்க்காமல் அவங்களில் ஒருவராக பார்த்தாங்க. இந்தப் படத்தின் மூலமாக திருநங்கைகளோட வாழ்க்கையில் ஒரு மாற்றம் வருமென்று நினைக்கிறேன்" என்றார். 

கணேஷா

'ஆதித்யா' கதிர் பேசும்பொழுது, "ஒரு தடவை டிவி நிகழ்ச்சி பண்ணிட்டு இருக்கும்போதுதான் விஜய் ஆண்டனி சார் என்னை பார்த்துட்டு, 'நல்லா நடிக்கிறே, சினிமாவில் நீ நடிக்குறியா'னு கேட்டாரு. கேட்டதோட நிற்காமல் இந்தப் பட வாய்ப்பையும் தந்து, சொன்ன வார்த்தையை காப்பாத்திருக்காரு. இந்தப் படத்தில் என்னதான் 'திமிரு புடிச்சவன்'னு தலைப்பு வச்சு நடிச்சாலும் விஜய் சார் ரொம்ப அமைதியான மனுசன். தன்னுடன் நடிக்கிற சக கலைஞர்களுக்கு பல நல்ல விஷயங்கள் சொல்லி உற்சாகப்படுத்துவாரு. ஒரு நல்ல சர்கார் அமையணும்னா அங்க ஒரு நேர்மையான திமிரு புடிச்ச அதிகாரி இருக்கணும். அப்படி இருந்தா கண்டிப்பா நல்ல சர்கார் தானா அமையும்" என்றார். கூத்துப்பட்டறை கலைஞர் ஆதிரா பாண்டிலட்சுமி பேசும்பொழுது, "நேர்மையானவங்க கிட்டதான் உண்மை இருக்கும். அந்த உண்மையில்தான் திமிர் இருக்கும்.  இரவு பகல் பார்க்காமல் 24 மணிநேரமும் கடுமையாக உழைக்கும் ஒரு உழைப்பாளியாகத்தான் நான் விஜய் ஆண்டனி சாரை பார்க்கிறேன்" என்றார். 

விஜய் ஆண்டனி

நடிகர் விஜய் ஆண்டனி பேசுகையில், "தமிழ் சினிமாவில் இதுவரைக்கும் வந்த அத்தனை படங்களிலும் டைரக்டர்கள்தான் உண்மையான ஹீரோ. அந்தக் கதையை யார் எழுதினாங்களோ, அதை யார் உணர்ந்தாங்களோ அவங்கதான் உண்மையான கதாநாயகன். அந்த வகையில் இந்தப் படத்தோட ஹீரோவான இயக்குநர் கணேஷுக்கு என்னுடைய வாழ்த்துகள். இந்தப் படம் என்னுடைய வாழ்க்கையில் முக்கியமான படமாக இருக்கும். என்னுடைய கடந்த இரண்டு படங்கள் பெரிதாக போகவில்லை . வியாபார ரீதியாகப் பெரிய பிரச்னைகளைச் சந்தித்தேன். அதுபோன்று பல  தடைகளைத் தாண்டி இந்தப் படத்தை ரிலீஸ் செய்ய போகிறேன். பத்து மாசத்துக்கு மேல ஒரு குழந்தை வயிற்றில் இருந்தா நல்லாருக்காது. எனக்கு அடுத்து 'கொலைகாரன்' பட ரிலீஸ் வேற இருக்கு. அதனால்தான் இப்போ இந்தப் படத்தை ரிலீஸ் பண்றேன். வேற எந்தப் பின்னோக்கமும் கிடையாது. படத்தை முடிச்சாச்சு, நிறையக் கடன் இருக்கு. படம் ரிலீசானா காசு வந்துடும். அதற்காகத்தான் ரிலீஸ் செய்கிறேன். இந்தப் படத்தில் தீபாவளியில் நடப்பதுபோன்று காட்சிகள் இருக்கின்றன. அதனால் தீபாவளிக்கு ரிலீசானா நல்லாருக்கும்னு என்னுடைய ஹீரோ கணேஷ் விரும்புனாரு. அவருக்காக இந்தப் படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் பண்றேன். நிறையப் பேர் எனக்கு ரொமான்ஸ் வரலைனு சொல்றாங்க. உங்க அறிவுரையை மனசுல வச்சிக்கிட்டு இந்தப் படத்தோட ரிலீஸுக்கு பிறகு ரொமான்ஸுக்கு டிரெயினிங் எடுத்துக்க போறேன். ஆனா, பதறாதீங்க அது மீ டூ ல வராத அளவுக்கு எளிமையான பயிற்சிதான். கண்டிப்பாக மக்கள் ஆசைப்படுகிற மாதிரி வருங்காலத்தில் ரொமான்ஸ் நல்லா பண்ணுவேன்" என்றார்.


டிரெண்டிங் @ விகடன்