வெளியிடப்பட்ட நேரம்: 15:09 (30/10/2018)

கடைசி தொடர்பு:11:47 (31/10/2018)

``இது துரோகம்!’’, ``கதை கேட்டது குத்தமா?’’ - `96’ கதை திருட்டு சர்ச்சை

``இது துரோகம்!’’, ``கதை கேட்டது குத்தமா?’’ - `96’ கதை திருட்டு சர்ச்சை

`சர்கார்’ கதை விவகாரத்தில், வருண் ராஜேந்திரன் கதைதான் என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் ஒப்புக் கொண்டிருக்கிறார். பல நாள்களாகப் பேசப்பட்டு வந்த இந்தப் பிரச்னை தற்போது முடிவுக்கு வந்திருக்கிறது. `சர்கார்’ கதை விவகாரத்தைத் தொடர்ந்து 80’ஸ் கிட்ஸ் மற்றும் 90’ஸ் கிட்ஸை உருகி ஓட வைத்த `96’ படத்துக்கும் இந்தப் பிரச்னை வந்துள்ளது. இயக்குநர் பாரதிராஜாவின் உதவி இயக்குநர் சுரேஷ், 2012ல் தான் எழுதி வைத்த கதைதான் விஜய் சேதுபதி, த்ரிஷா நடித்திருக்கும் `96’ படத்தின் கதை எனக் கூறுகிறார். இது குறித்து அவரிடம் பேசினோம். 

``2012 ம் வருடம் அன்னக்கொடி படம் ஆரம்பித்ததிலிருந்து நான் பாரதிராஜா சார்கிட்ட உதவி இயக்குநரா வேலை பார்த்துட்டு இருக்கேன். பாரதிராஜா சார் எப்போதுமே அவரோட உதவி இயக்குநர்கள்கிட்ட கதை கேட்டுட்டே இருப்பார். நல்ல கதையா இருந்தா அவரே அதை இயக்குவார். அப்படி என்கிட்ட ஒரு நல்ல கதை இருக்குனு அவருக்குத் தெரிஞ்சதும் என்னை அழைச்சு கதை கேட்டார். என்கிட்ட இருந்த கதையை 10 நிமிஷம்தான் சொன்னேன். `ரொம்ப நல்லா இருக்குடா . ஒரு நாள் நிதானமா உட்கார்ந்து உன்கிட்ட கதை கேட்குறேன்’னு சொன்னார். அதே மாதிரி ஒரு நாள் அவரோட நட்பு வட்டாரத்தில் இருக்கிற 5 எழுத்தாளர்களோடு கொடைக்கானல் அடிவாரத்தில் இருக்கிற அவரோட தோட்டத்தில் வைத்து என்கிட்ட கதை கேட்டார். முதல் பாதியைச் சொல்லி முடித்ததும் அழுதுட்டே என்னைக் கட்டியணைச்சுக்கிட்டார். `இதுக்கு மேல கதை சொல்ல வேண்டாம். இந்தப் படத்தை நான் கட்டாயம் பண்றேன். இதுக்கு இளையராஜாதான் மியூசிக்’னு சொல்லிட்டு, அந்த இடத்திலேயே இளையராஜா சாருக்கு போன் பண்ணி, `ஒரு கதை நான் கேட்டிருக்கேன். அதை நான் இயக்கப் போறேன். நீங்கதான் இசையமைக்கணும்’னு சொல்லி அவர்கிட்ட ஓகேவும் வாங்கிட்டார். `பால்பாண்டி என்கிற பாரதி’னு படத்துக்கு டைட்டிலும் வெச்சுட்டார்.

சுரேஷ், 96 கதை

மதுரையில் நடந்த `அன்னக்கொடி’ படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்காக இளையராஜா வந்திருந்த போது அவரை சந்திச்சு படத்தோட அவுட் லைனை மட்டும் சொன்னேன். `ரொம்ப நல்லா இருக்கு. பண்ணலாம்’னு சொன்னார். பாரதிராஜா சாரும் இளையராஜா சாரும் ரொம்ப நாளுக்கு அப்பறம் மீண்டும் படம் பண்ணப் போறதுல ரெண்டு பேருமே ரொம்ப சந்தோஷமா இருந்தாங்க. அப்புறம் அவங்களுக்குள்ள சில கருத்து வேறுபாடுகள் காரணமா இந்தப் படம் ஆரம்பிக்க லேட்டாச்சு. அதனால நாங்க `ஓம்’ படத்தோட வேலைகளில் இறங்கிட்டோம். 

கொஞ்ச நாளுக்கு அப்புறம் பாரதிராஜா சார் என்கிட்ட, `நீயே அந்தப் படத்தை இயக்கு. அதுக்கான வேலைகளை ஆரம்பி’னு சொன்னார். நானும் `ஓம்’ பட வேலைகளுக்கு நடுவே என் படத்தோட வேலைகளையும் செய்துட்டு இருந்தேன். நான் இயக்கப் போறனால `நீ நான் மழை இளையராஜா’னு இந்தப் படத்துக்குப் பெயர் வெச்சேன். தஞ்சாவூரில் நான் படிச்ச ஸ்கூல், அங்க இருக்கிற சில இடங்கள்னு கதைக்குத் தேவையான இடங்களுக்குப் போய் போட்டோஸ் எடுத்துட்டு வந்தேன். 

இந்தச் சமயத்தில்தான் எனக்கு இயக்குநர் மருதுபாண்டியன் பழக்கமானார். அவரோட `சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது’ படம் சம்பந்தமான ஒரு பிரச்னை பாரதிராஜா சார்கிட்ட வந்தது. இந்தப் பிரச்னைக்கு அப்புறம் நானும் மருதுபாண்டியனும் நல்ல நண்பர்களாகப் பழக ஆரம்பிச்சோம். என்னுடைய கதையை அவர்கிட்ட சொல்லியிருக்கேன். சீன் பை சீன் எல்லாமே அவருக்குத் தெரியும். இந்தக் கதைக்காக நான் என்னென்ன வேலைகள் செய்துட்டு இருக்கேன் என அத்தனையும் அவருக்குத் தெரியும். ஒரு நண்பர் என்கிற முறையில் அவர்கிட்ட எல்லாத்தையும் ஷேர் பண்ணினேன். 

96

மருது பாண்டியனோட `சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது’ படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு விஜய் சேதுபதி வந்திருந்தார். `அவர்கிட்ட உன்னோட கதையைச் சொல்ல ஏற்பாடு செய்கிறேன்’னு மருது என்னிடம் சொன்னார். அப்புறம் ஒரு நாள் பிரேம்குமார் மூலம் விஜய் சேதுபதியிடம் பேசலாம்னு சொன்ன மருது, பிரேம்குமாரிடம் என்னைப் பேச வைத்தார். நானும் அவர்கிட்ட படத்தோட அவுட் லைனைச் சொன்னேன். `நல்லா இருக்கு. கண்டிப்பா விஜய் சேதுபதிகிட்ட கதை சொல்ல வைக்கிறேன்’னு சொன்னார். ஆனால், அது நடக்கவே இல்லை. அப்புறம் மருது பாண்டியனும் `அசுரவதம்’ பட வேலைகளில் பிஸியாகிட்டார். நானும் அவரை தொந்தரவு செய்யவில்லை. 

96 படம் ரிலீஸானதும் அதைப் பார்த்த எனது நண்பர்கள், `96 படம் நீ சொல்லிட்டு இருந்த கதை மாதிரியே இருக்கு’னு எனக்கும், பாரதிராஜா சாருக்கும் நிறை போன் கால் வந்துட்டே இருந்துச்சு. அப்போ பாரதிராஜா சார் ஊர்ல இல்லை. அவர் வந்ததும் இந்தப் பிரச்னையைப் பேசிக்கலாம்னு விட்டுட்டேன். அவர் வந்ததும் 96 பட தயாரிப்பாளரை அழைச்சுப் பேசுனார். நீங்க ஒரு முறை படத்தைப் பாருங்கனு அவர் சொன்னதால, நாங்க படம் பார்த்தோம். மூணாவது சீனிலேயே இது நம்ம படம்தான்னு பாரதிராஜா சார் சொல்லிட்டார். படம் முழுக்கப் பார்த்துட்டு தயாரிப்பாளர்கிட்ட இது சுரேஷ் கதைதான்னு சொல்லிட்டார். பள்ளிக்கால நினைவுகளை வைத்து படம் எடுப்பது இயல்புதான். ஆனால், என் கதையில் இருக்கும் கதாபாத்திரங்களுக்கும் ’96’ படத்தின் கதாபாத்திரங்களுக்கும் நிறைய ஒற்றுமை இருக்கிறது. குறிப்பாக, பாடகி ஜானகி அம்மாவின் பாடல்களைத்தான் கதாநாயகி பாடுவார்; க்ளைமேக்ஸில் ‘யமுனை ஆற்றிலே’ பாடலைத்தான் பாடுவார் என்பது போன்ற பல விஷயங்கள் என் கதையில் இருக்கிறது. அதுமட்டுமில்லாமல், க்ளைமேக்ஸில் ஒரே அறையில் ஹீரோவும் ஹீரோயினும் பேசிக் கொள்ளும் வசனங்கள் பலவும் நான் எழுதி வைத்தது போன்றே இருக்கிறது.

’96’ படத்தில் மருது பாண்டியன் ஒரு கேரக்டரில் நடிச்சிருந்தார். டைட்டில் கார்டில் மருதுபாண்டியனுக்கு நன்றினும் போட்டிருந்தாங்க. இதைப் பார்த்தப்போதுதான் இந்தக் கதை எப்படி பிரேம்கிட்ட போயிருக்கும்னு எங்களுக்குத் தெரிஞ்சது. நண்பர்னு நம்பி கதையைச் சொன்னேன். ஆனால், எனக்கு அவர் இவ்வளவு பெரிய துரோகத்தைச் செய்வார்னு நினைக்கவே இல்லை. 

96

அப்புறம் மருது பாண்டியனை அழைச்சு பாரதிராஜா சார் பேசினார். அப்போது அவர் பதில் பேச முடியாமல் மழுப்பினார். மருதுகிட்டச் சொல்லி பிரேமை அழைக்கச் சொன்னோம். பிரேம் வர மாட்டேன்னு சொல்லிட்டார். என் கதையை நான் எழுத்தாளர் சங்கத்தில் பதியவில்லை. ஆனால், 2013ல் இருந்து இந்தக் கதைக்காக நான் எழுதிய எல்லா வசனங்களும் என் மெயிலில் அந்தந்த தேதியில் பதிவு செய்து வைத்ததற்கான ஆதாரம் என்கிட்ட இருக்கு. அதை வைத்து நான் போராடுவேன்’’ என்றார் சுரேஷ்.

இது குறித்து மருது பாண்டியனிடம் பேசும் போது,``சுரேஷ்கிட்ட ஒரு ஸ்கூல் லைஃப் கதை இருக்குனு தெரியும். ஆனா, சீன் பை சீனா எனக்குத் தெரியாது. தினமும் ஒரு கதை கேட்கிறேன்; அதுனால சுரேஷ் சொன்ன கதை எனக்கு முழுசா நினைவில் இல்ல. பிரேமின் `96’ கதையும் ஸ்கூல் லைஃப்னு எனக்குத் தெரியும். ஒவ்வொருத்தரோட ஸ்கூல் லைஃபும் வேற வேற மாதிரிதான இருக்கும். அதனால நானும் இதை பெருசா எடுத்துக்கலை. ஆனால், சுரேஷ் என்கிட்ட முழுக் கதையையும் சொன்னதாகவும், அதை நான் பிரேம்கிட்ட சொல்லி அவர் அதை `96’ படமா எடுத்ததாகவும் சொல்றது உண்மையில்லை. பாரதிராஜா சார் என்னை அழைச்சுப் பேசினபோதும் இதைத்தான் சொன்னேன்’’ என்றார்.

96 படத்தின் இயக்குநர் பிரேம்குமாரிடம் இது தொடர்பாகப் பேசும் போது, ``நான் 96 கதையை எழுதி முடிச்சதுமே அதை 2016 ம் ஆண்டு எழுத்தாளர் சங்கத்தில் முறையாகப் பதிவு பண்ணிட்டேன். இப்போ இந்தக் கதை என்னுடையதுனு சுரேஷ் சொல்லும் போது, அவருடைய கதையை எப்போது பதிவு செய்தார் என்று பார்ப்பதுதான் வழக்கம். ஆனால், அவர் அந்தக் கதையைப் பதிவு செய்யவே இல்லை. அவர் பக்கம் சரியான ஆதாரங்கள் இருந்தால் அதைச் சட்டப்படி அணுகலாம். ஆனால், அவர் அப்படிச் செய்யாமல், என்னைப் பேச்சு வார்த்தைக்கு அழைக்கிறார்.

96 கதை

இந்தப் பிரச்னை முறையான வகையில் விசாரிக்கப்படும் போது என் பக்கம் இருக்கும் ஆதாரங்களையும் நான் காட்டுவேன். சுரேஷ் மருது பாண்டியனிடம் கதையைச் சொல்லி, மருது என்னிடம் சொல்லி இப்படி ஒரு ஃபீல் குட் படத்தை எடுக்க முடியுமா? இது என்னுடைய கதை. இந்தக் கதை டிஸ்கஷனில் இரண்டு நாள்கள் மட்டும்தான் மருது கலந்துகொண்டார்’’ என்று முடித்தார் பிரேம்குமார்.

இது குறித்து இயக்குநர் பாரதிராஜாவும் அவரின் உதவி இயக்குநர் சுரேஷும் அளித்த பேட்டியை வீடியோவில் காண்க...


டிரெண்டிங் @ விகடன்