வெளியிடப்பட்ட நேரம்: 21:16 (01/11/2018)

கடைசி தொடர்பு:16:44 (02/11/2018)

``பாக்யராஜ் சார்... `96' ராம்-ஜானுவ மீட் பண்றீங்களா..?’’

``பாக்யராஜ் சார்... `96' ராம்-ஜானுவ மீட் பண்றீங்களா..?’’

`சர்கார்’ கதை விவகாரம் முடிவுக்கு வந்த பின்னர், சத்தமே இல்லாமல் புகைந்துகொண்டிருந்த `96' கதை விவகாரம் தற்போது சூடு பிடிக்க ஆரம்பித்திருக்கிறது. பாரதிராஜாவின் உதவி இயக்குநர் சுரேஷின் கதைதான் `96' படம்; இந்தக் கதை இயக்குநர் மருதுபாண்டியன் மூலமாகத்தான் கசிந்திருக்கிறது என சுரேஷ் தரப்பினர் கூறியபோது, `எனக்கு சுரேஷ் சொன்ன கதை ஞாபகமே இல்லை’ என மருதுபாண்டியனும், `என் கதையை நான் 2016-ம் ஆண்டே முறைப்படி எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்துவிட்டேன். இந்தப் பிரச்னை முறையாக விசாரிக்கப்படும் போது என் ஆதாரங்களைக் காட்டுவேன்’ என பிரேம்குமாரும் கூறினார்கள். இந்த விவகாரம் சூடு பிடிப்பதை உணர்ந்த பிரேம்குமார், இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.

இந்தப் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பிரேம்குமாருடன், `96’ படத்தின் கதை விவாதத்தில் கலந்துகொண்ட இயக்குநர்கள் பாலாஜி தரணிதரன், தியாகராஜன் குமாரராஜா, மருது பாண்டியன் மற்றும் மருது பாண்டியனின் உதவி இயக்குநர் மணி எனச் சிலரும் கலந்துகொண்டனர். தன்னிடம் இருந்த ஆதாரங்கள் அனைத்தையும் தனக்கு முன் இருந்த மேஜையில் வைத்துவிட்டுப் பேச ஆரம்பித்தார், பிரேம்குமார். ``இந்த `96’ கதையை முதன்முதலாக 4 நோட்டுகளில் நான் எழுதினேன். பிறகு ஒரு பெரிய நோட்டில் மொத்தமாக ஸ்கிரிப்டை எழுதி, அதை வைத்துதான் விஜய் சேதுபதி, த்ரிஷா, தயாரிப்பாளர் நந்தகோபாலுக்கு கதை சொன்னேன். கதை ஓகே ஆனதுக்குப் பிறகுதான் பாலாஜி தரணிதரன், தியாகராஜன் குமாரராஜா, மருது பாண்டியன், பக்ஸ்னு என் நண்பர்களை அழைத்து, `இதில் ஏதாவது கரெக்‌ஷன் இருந்தா சொல்லுங்க பண்ணிக்கலாம்’னு ஒரு டிஸ்கஷன் வெச்சேன். அப்போதுதான் மருது பாண்டியனுக்கு இந்தக் கதை தெரியும். ஆனால், மருது பாண்டியன் சொல்லிதான் இந்தக் கதையையே நான் எழுதினேன்னு சொல்வதெல்லாம் அபத்தம். இந்த டிஸ்கஷன் முடிஞ்சதுக்கு அப்புறம் என்னுடைய கதையை நான் எழுத்தாளர் சங்கத்தில் பதிவு பண்ணிட்டேன். எனக்கான ஆதாரங்கள் எல்லாமுமே என்கிட்ட இருக்கு. சுரேஷ்கிட்ட இருக்கிற ஸ்கிரிப்ட்டை மட்டும் என்கிட்ட காட்டச்சொல்லுங்க. இல்லைன்னா, அதை எழுத்தாளர் சங்கத்துக்குக் கொண்டு வரச்சொல்லுங்க. வெச்சு ஒப்பிட்டுப் பார்ப்போம். எந்த ஆதாரமுமே இல்லாம, `இது என் கதை, இது என் கதை’னு சொல்றதுல நியாயமே இல்லை. இதற்கு பாரதிராஜா சாரும் துணை நிற்கிறார்; அதுதான் ரொம்ப வேதனையா இருக்கு.

96

சுரேஷ் கொடுத்த பேட்டியில் சில விஷயங்கள் எனக்குப் புரியாமல் இருந்துச்சு. அவரது கதையை எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்ய அவர்கிட்ட காசு இல்லைனு சொன்னார். பத்து வருஷமா பாரதிராஜா சார்கிட்ட உதவி இயக்குநராக இருக்கிற ஒருத்தருக்குக் கதையைப் பதிவு செய்யவே காசு இல்லைனு சொல்றது நம்புற மாதிரியே இல்லை. இப்போ சுரேஷிற்கு துணையாக நிற்கிற பாரதிராஜா சார் கூட அந்தக் கதையைப் பதிவு பண்றதுக்குக் காசு கொடுக்கலையா? ’பாரதி என்கிற பால்பாண்டி’னு படத்துக்குப் பெயர் வெச்சோம்னு சொன்னார். ஆனால், போஸ்ட்ரை அவர் காட்டும் போது `பால்பாண்டி என்கிற பாரதி’னு இருக்கு. அவருக்குள்ளேயே பல குழப்பங்கள்; பல முரண்பாடுகள் இருக்கு. இது அவருடைய கதையாக இருந்தால், நான் காட்டுற மாதிரியான ஆதாரங்களை அவரையும் காட்டச்சொல்லுங்க’’ என்றார்.

இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா, ``சுரேஷ், `நான் ’92’னு டைட்டில் வெச்சு எழுதிய கதையை `96’னு படமாக எடுத்துட்டாங்க; கதாநாயகி ஜானகியின் பாடல்களைத்தான் பாடுவாங்கனு என் கதையில் எழுதி இருக்கிறேன். அதைத்தான் இந்தப் படத்திலும் வெச்சிருக்காங்க’னு சொல்றார். உங்க கதையைக் காப்பி அடிக்கப்போறோம்னு பிரேம் முடிவு பண்ணிட்டா, இந்தச் சின்னச் சின்ன விஷயத்தைக்கூடவா மாத்தாம அப்படியே வெப்பார். அதுமட்டுமல்லாம விஜய் சேதுபதியை வெச்சு படம் எடுக்கணும்னு பிரேம் குமாரை பல நாள்களாக ஃபாலோ பண்ணியதாகவும் பிரேம்கிட்ட கதை சொன்னதாகவும் சுரேஷ் சொல்கிறார். பாரதிராஜா ஒரு வார்த்தை விஜய் சேதுபதிகிட்ட சொல்லியிருந்தா, சேதுபதி போய் பாரதிராஜாவைப் பார்த்திருப்பார். அதைவிட்டுட்டு பிரேமை ஏன் அவர் பல நாள்களாக ஃபாலோ பண்ணணும்?’’ எனப் பல கேள்விகளை எழுப்பினார். 

96

இயக்குநர் பாலாஜி தரணிதரன் பேசும் போது, ``பிரேமும் நானும் காலேஜ்ல இருந்து ஒண்ணா இருக்கோம். அவர் ஸ்கூலில் நடந்த விஷயங்களை காலேஜ் படிக்கும் போதே என்கிட்ட சொல்லியிருக்கார். இது அவர் வாழ்க்கையில் நடந்த கதை. அவர் ஸ்கூலில் நடந்த ரீ யூனியனுக்குப் பிறகு இந்தக் கதையை பிரேம் எழுதினார். பாரதிராஜா சார் மேல எங்களுக்கு ரொம்ப மரியாதை இருக்கு. தனது உதவியாளராகவே இருந்தாலும், ஆதாரம் இல்லாத ஒரு விஷயத்தின் பக்கம் அவர் நிற்பது வருத்தமாக இருக்கிறது’’ என்றார். 

இயக்குநர் மருது பாண்டியன் பேசும் போது, ``சுரேஷ் என்கிட்ட கதை சொன்னது உண்மைதான். ஆனால், அது எனக்குச் சுத்தமாக மறந்து போயிடுச்சு. தினமும் ஒரு கதை கேட்கிறேன்; ரொம்பப் பிடிச்ச கதைகள் இன்னைக்கு வரைக்கும் நினைவில் இருக்கு. அந்தக் கதை எனக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை. அதனால் அது என் மனசில் பதியவே இல்லை. இப்படி இருக்கும் போது நான் எப்படி பிரேமுக்கு அந்தக் கதையைச் சொல்லுவேன். என் மீது பழி போடுவது நியாயமே இல்லை’’ என்றார்.

96

மருது பாண்டியனிடம் சுரேஷ் கதை சொல்லும் போது அவருடன் இருந்த மருது பாண்டியனின் உதவி இயக்குநர் மணி பேசும் போது, ` ``சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது’ படத்தின் ரிலீஸ் பிரச்னையினால் மருது பாண்டியன் சார் பயங்கர டென்ஷனிலும் மன உளைச்சலிலும் இருந்த சமயத்தில்தான் சுரேஷ் எங்களிடம் கதை சொன்னார். அதனால் மருது பாண்டியன் சார் அந்தக் கதையை மறந்ததில் நியாயம் இருக்கிறது. எனக்கு சுரேஷ் சொன்ன கதை மறக்கவில்லை. அவர் சொன்ன கதைக்கும் `96’ படத்துக்கும் இருக்கிற ஒற்றுமை ஸ்கூல் போர்ஷன்தான். `அழகி’, `ஆட்டோகிராஃப்’னு பல படங்களிலும் இந்த மாதிரி சில காட்சிகள் இருக்கும். அதற்காக இந்தப் படம் முழுக்கவே சுரேஷின் கதை என்று சொல்வது தவறு. சுரேஷிடமும், `உங்க கதைக்கும் அவர் கதைக்கும் சின்ன ஒற்றுமைதான் இருக்கு; அதுவும் பல படங்களில் வந்த காட்சிகளைப் போலத்தான் இருக்கு. உங்க கதை இது இல்லை. அந்தக் கதையை நீங்களும் படமாக எடுக்கலாம். இதைப் பெரிய விஷயமா பேசுவது வீண்தான்’னு சொன்னேன். ஆனால், அதை புரிஞ்சுக்காம சுரேஷ் பண்ணிட்டு இருக்கார்’’ என்றார்.

இப்படி இரு அணிகளும் தனித்தனியாக பேட்டிகள், ப்ரஸ் மீட்கள் எனப் பேசிக்கொண்டிருக்காமல், இருவரையும் அழைத்து எழுத்தாளர் சங்கம் பேச்சுவார்த்தை நடத்தினால் ஒரு தீர்வு கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. இயக்குநர் பாக்யராஜ் அவர்களே, சர்கார் கதை பிரச்னையை முடித்து வைத்தது போல், இந்தப் பிரச்னையையும் கவனத்தில் எடுத்துக்கோங்களேன். 


டிரெண்டிங் @ விகடன்