மீடூ பற்றிப் பேசிய அஜித்; `விஜய் 63’யின் வில்லன்..!? #Inbox | Ajith about MeToo issue, Vijay 63 villain... Inbox show highlights

வெளியிடப்பட்ட நேரம்: 15:46 (29/11/2018)

கடைசி தொடர்பு:15:48 (29/11/2018)

மீடூ பற்றிப் பேசிய அஜித்; `விஜய் 63’யின் வில்லன்..!? #Inbox

மீடூ பற்றிப் பேசிய அஜித்; `விஜய் 63’யின் வில்லன்..!? #Inbox

`சர்கார்’ படத்துக்குப் பிறகு விஜய் நடிக்கும் புதிய படத்தை அட்லி இயக்க இருக்கிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இந்தத் தகவல்கள் எல்லாம் அதிகாரபூர்வமாக வெளியான நிலையில், தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த அப்டேட் வில்லன் கதாபாத்திரத்தைப் பற்றியதுதானாம். இந்தப் படத்தில் வில்லனாக, ஏற்கெனவே விஜய்யுடன் `பைரவா’ படத்தில் நடித்த டேனியல் பாலாஜி நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் 63

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கியிருக்கும் படம் `கனா’. ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ் நடித்திருக்கும் இந்தப் படத்தின் ட்ரெய்லர், சமீபத்தில் வெளியாகி பலரது பாராட்டையும் பெற்றது. குறிப்பாக ஐஸ்வர்யா ராஜேஷ் அவரது வீட்டிலிருந்து வெளியே வரும் ஒரு ஷாட்டில், அவருக்குப் பின்னால் பெரியாரின் புகைப்படம் ஒன்று சுவரில் மாட்டியிருக்கும். அந்த ஒரு ஷாட்டை ஸ்கீரின் ஷாட் எடுத்துப் பலரும் பாராட்டி வருகின்றனர். 

கனா

இந்த ஷாட்டைப் பற்றி இயக்குநர் அருண்ராஜாவிடம் கேட்டபோது, ``நமக்கெல்லாம் சத்யராஜ் என்றதும் பெரியார்தான் நினைவுக்கு வருவார். அதுமட்டுமல்லாமல், கதைப்படி கிராமத்தில் வசிக்கும் ஒருவர், தனது பெண் பிள்ளையை கிரிக்கெட் விளையாட அனுப்பி வைக்கிறார். இந்த மாதிரி சிந்தனையில் இருக்கும் ஒருத்தர், கண்டிப்பாக பெரியாரிஸ்ட்டாகத்தான் இருப்பார். அதனால்தான் அந்த இடத்தில் பெரியாரின் புகைப்படத்தை வைத்தேன். இந்த ஒரு இடத்தில் மட்டுமல்ல, படத்தின் பல இடங்களில் பெரியாரின் புகைப்படத்தை வைத்திருக்கிறேன். பெரியாரின் புகைப்படமும் ஒரு கேரக்டரைப் போல், படம் முழுக்க வரும்’’ என்றார்.

பிரபுதேவா

`த்ரிஷா இல்லனா நயன்தாரா’, `அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’ படத்தை இயக்கிய ஆதிக் ரவிசந்திரன், மூன்றாவதாக ஜி.வி.பிரகாஷை வைத்து 3டி தொழில்நுட்பத்தில் ஒரு படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் வேலைகள் போய் கொண்டிருக்கும் போதே, இன்னொரு படத்தின் ஷூட்டிங்கையும் ஆரம்பித்திருக்கிறார். இதில் பிரபுதேவா ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக `அனேகன்’ படத்தில் நடித்த அமைரா தஸ்துர் நடிக்கிறார். இந்தப் படத்தைப் பற்றிய எந்தத் தகவலையும் வெளியிடாமல், செம சைலன்ட்டாக எடுத்து வருகிறார்கள்.

பிரியங்கா சோப்ரா

நடிகை பிரியங்கா சோப்ராவும் முகேஷ் அம்பானியின் மகள் ஈஷா அம்பானியும் நெருங்கிய தோழிகள். இதில் சிறப்பு என்னவென்றால் இருவருக்கும் டிசம்பர் மாதம் திருமணம் நடக்கவிருக்கிறது. வட இந்தியாவில் திருமணத்துக்கு முன் சங்கீத் என்ற சம்பிரதாயம் உண்டு. அப்படித் தன் தோழி ஈஷா அம்பானியின் சங்கீத் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நடனமாட இருக்கிறாராம், பிரியங்கா சோப்ரா. இந்நிலையில், முகேஷ் அம்பானி தன் மகள் ஈஷாவின் திருமணப் பத்திரிகையுடன் வந்து ராமேஸ்வரம் கோயிலில் சிறப்பு வழிபாடு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இமைக்கா நொடிகள்

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அதர்வா, ராஷி கண்ணா நடித்து வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற திரைப்படம், `இமைக்கா நொடிகள்'. இதில் சிபிஐ அதிகாரியாக வரும் நயன்தாராவின் கேரக்டர் அனைவராலும் பேசப்பட்டது. இந்தப் படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமையை ஒருவர் வைத்திருந்தாலும் இதனை முதலில் தெலுங்கில் டப் செய்து வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். அப்படத்துக்கு நயன்தாராவின் கேரக்டர் பெயரான `அஞ்சலி விக்ரமாதித்யா' என்பதையே பெயராக வைக்க உள்ளனர்.

அஜித் - சிவா கூட்டணி, நான்காவது முறையாக இணைந்திருக்கும் படம் `விஸ்வாசம்'. இந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா மற்றும் முக்கியமான கதாபாத்திரங்களில் தம்பி ராமையா, ரோபோ சங்கர், `ஓகே ஓகே' மதுமிதா, கலைராணி எனப் பலர் நடித்துள்ளனர். 

அஜித்

ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சுவாரஸ்யங்களைப் பற்றித் தெரிந்துகொள்ள நடிகை மதுமிதாவிடம் பேசினோம். `` `விஸ்வாசம்’ ஷூட்டிங்கில் நான் அஜித் சார்கிட்ட சமையல் பற்றி அதிகமாப் பேசுவேன். அவரும் எங்ககிட்ட ரொம்ப ஜாலியாப் பேசுவார். சமீபமா 'மீடூ' விஷயம் பெரிய அளவில் பேசப்பட்டுச்சுல, அதைப் பற்றிச் சில மாதங்களுக்கு முன்னாடியே அஜித் சார் எங்ககிட்டச் சொன்னார். `ஹாலிவுட்டில் மீடூனு ஒரு விஷயம் இருக்கு. அது தமிழ் சினிமாவிலும் நடந்தால், நிறைய பாலியல் பிரச்னைகள் குறையும்’னு சொன்னார். அவர் சொன்ன மாதிரி இப்போ நடந்திருக்கு’’ என்றார் மதுமிதா.

Metoo பற்றி பேசிய நடிகர் அஜித்! | The Inbox Show 29/11/2018


டிரெண்டிங் @ விகடன்