"வித்தியாச முயற்சிகள், ஏமாற்றிய படங்கள், ரூட்டை மாற்றிய இயக்குநர்கள்... கோலிவுட் 2018!" #Rewind2018 | 2018 Tamil movies... A complete analysis

வெளியிடப்பட்ட நேரம்: 16:06 (13/01/2019)

கடைசி தொடர்பு:16:10 (13/01/2019)

"வித்தியாச முயற்சிகள், ஏமாற்றிய படங்கள், ரூட்டை மாற்றிய இயக்குநர்கள்... கோலிவுட் 2018!" #Rewind2018

சென்ற வருடம் வந்த தமிழ் சினிமாக்கள் குறித்தும், அது சந்தித்த மாற்றங்கள் குறித்தும் பார்ப்போமா?!

சினிமா காஸ்ட்லி மீடியம்தான். ஆனால், அது எளியவர்களின் பொழுதுபோக்கு! மாறிவரும் காலச் சூழலில் ஸ்டார் ஹீரோக்கள், புகழ்பெற்ற இயக்குநர்களின் படங்களே தள்ளாடுகின்றன. ஆனால், வித்தியாசமான கதையம்சம், அலட்டல் இல்லாத நடிப்பு, புதிய ஸ்க்ரீன்ப்ளே ட்ரீட்மென்ட் என நம்பிக்கையுடன் வெளியாகும் படங்களில் பல க்ளாஸ் ஹிட்டடித்தன. அப்படி 2018-ம் வருடம் வந்த படங்கள் குறித்தும், தமிழ் சினிமா சந்தித்த மாற்றங்கள் குறித்தும் பார்ப்போமா?! 

அரசியல் பேசிய திரைப்படங்கள் 

கோலிவுட் 2018

வாரத்துக்கு இரண்டு அரசியல் கூட்டங்கள் நடப்பதுபோல, மாதத்திற்குக் இரண்டு அரசியல் பேசும் திரைப்படங்கள் இந்த ஆண்டு வெளிவந்தன. `காலா', `பரியேறும் பெருமாள்', `மேற்குத் தொடர்ச்சி மலை', `மனுசங்கடா', `வடசென்னை' போன்ற படங்கள் பேச வந்த அரசியலைத் தெளிவாகப் பேசின.

சர்கார்

தமிழகத்தின் நடப்பு அரசியல் கூத்துகளை த்ரில்லர் ஜானரில் சொல்ல முயன்றது, `நோட்டா'. ஆனால், ஒவ்வொரு காட்சிக்கும் ஒவ்வோர் அரசியல் சம்பவம் என்று திணித்ததால், `வெட்டாட்டம்' நாவல் செய்த மேஜிக்கை, `நோட்டா' செய்யவில்லை. `சர்கார்' படத்துக்கும் அப்படி ஒரு நிலைதான். ஓட்டு விழிப்புஉணர்வு பற்றிப் பேச நினைத்தவர்கள், `டெங்குவுக்குக் காரணம் பொதுப்பணித் துறை' என்ற சாதாரண வசனத்திலேயே கோட்டை விட்டுவிட்டார்கள். கீழ்வெண்மணிப் படுகொலையை நினைவுபடுத்தி, கிராமத்தில் புரையோடிப் போயிருக்கும் சாதியக் கொடுமையைச் சொல்ல முயன்றது, `காளி'. ஆனால், அலுப்பூட்டும் காட்சியமைப்புகளால் நிறைவில்லா அனுபவம் ஆனது. 

நோட்டா

`தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் `சொடக்கு மேல' பாடல் அரசியல்வாதிகளை விமர்சித்தது. இப்படி ஒரு பாடல் மூலமாகவோ அல்லது படம் நெடுகவோ அரசியல் பேசுவது சென்ற வருடத்தின் டிரெண்ட்டில் ஒன்று. எனவே, அதைப் பயன்படுத்தி சில இயக்குநர்கள் மக்களின் கவனத்தை ஈர்க்க, படத்துக்கும் அது பேசும் அரசியலுக்கும் சம்பந்தமே இல்லையென்றாலும் வேண்டுமென்றே இடையில் செருகியிருந்தார்கள்.

சீக்குவல் திரைப்படங்களின் வருகை 

சாமி ஸ்கொயர்

சென்ற வருடம் `சாமி ஸ்கொயர்', `சண்டக்கோழி 2', `விஸ்வரூபம் 2', `2.0', `மாரி 2' எனப் பல சீக்குவல் திரைப்படங்கள் வெளியாகின. `விஸ்வரூபம்' படத்தில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு விடை சொன்னது, `விஸ்வரூபம் 2'. `மாரி'யில் இருந்த சுவாரஸ்யங்கள் மிஸ் ஆகாமல் பார்த்துக்கொண்டது, `மாரி 2'. சிட்டியின் அட்ராசிட்டி அதிகம் இல்லையென்றாலும், வெகுவாகக் கவர்ந்தது, `2.0' குட்டி ரோபோ. 

விஸ்வரூபம் 2

தவிர, ஏற்கெனவே மக்களால் கொண்டாடப்பட்ட படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கும்போது, அதுவே அந்தப் படத்துக்குப் பெரிய விளம்பரமாக அமைகிறது. ஆனால், சீக்குவல் படங்களின் சக்ஸஸ் ஃபார்முலா சிலருக்குத்தானே அமைந்திருக்கிறது. தற்போது, டஜன் கணக்கில் சீக்குவல் படங்களின் ஷுட்டிங் நடந்துகொண்டிருக்கிறது. இந்த வருடம் இன்னும் பல சீக்குவல் படங்கள் வரும் என்பது உறுதி. 

நகைச்சுவைப் படங்களின் தோல்வி

சீமராஜா

`சந்திரமுகி' தொடங்கி வைத்த திகில் நகைச்சுவைப் பாதையிலும், `சிவா மனசுல சக்தி' தொடங்கி வைத்த முழுநீள நகைச்சுவைப் பாதையிலும்தான் தொடர்ந்து படங்கள் வந்துக்கொண்டிருந்தன. அதில், ஓரளவுக்குக் கணிசமான படங்கள் வெற்றியடைந்தன. சென்ற வருடம் இந்த டெம்ப்ளேட்டில் வந்த அனைத்துப் படங்களும் அத்தனைப் பெரிய வரவேற்பை பெறவில்லை. மாறி வரும் காலச் சூழலில், வழக்கமான ஃபார்முலா படங்களான `மன்னர் வகையறா', `ஒரு நல்ல நாள் பார்த்துச் சொல்றேன்', `பக்கா', `ஜூங்கா', `சீமராஜா', `கஜினிகாந்த்', `கலகலப்பு 2', `செம' ஆகியன நினைத்த வெற்றியைப் பெற முடியவில்லை. இந்தப் பட்டியலில் ப்ளாக் காமெடி வகையறாவில் எடுக்கப்பட்ட `குலேபகாவலி', `கோலமாவு கோகிலா' போன்ற படங்கள் தப்பிப் பிழைத்தன.

வழக்கமான பாணியிலிருந்து, மாறுபட்டு வெளிவரும் நகைச்சுவை படங்களைத்தான் இப்போது மக்கள் விரும்புகிறார்கள் என்பதற்கு மேலே சொன்ன இரண்டு பிளாக் காமெடி படங்கள்தான் மிகச்சிறந்த உதாரணம். 

ரீமேக் திரைப்படங்கள்

காற்றின் மொழி

பல காலமாக பிறமொழிப் படங்கள் தமிழில் ரீமேக் ஆகிக்கொண்டிருக்கிறது. தயாரிப்பாளர் பாலாஜி முதல் இயக்குநர் ஜெயம் ராஜா வரை ரீமேக்கிற்குப் பிரசித்தி பெற்ற பலர் கோலிவுட்டில் கோலோச்சியிருக்கிறார்கள். ஆனால், எந்த வருடமும் இல்லாத அளவுக்கு சென்ற வருடம் பெரும்பாலான ரீமேக் படங்கள் தோல்வியடைந்திருக்கின்றன. `தானா சேர்ந்த கூட்டம்', `ஜானி', `பாஸ்கர் ஒரு ராஸ்கல்' என அந்தப் பட்டியல் நீள்கிறது. 

நிமிர்

பழிவாங்கல் கதையின் வெர்ஷன் `3.0'வான `நிமிர்', ஜோதிகாவின் `காற்றின் மொழி', பெண் பத்திரிகையாளர் ஒருவரது திக் திக் அனுபவங்களைப் பேசிய `யூடர்ன்' எனக் கொஞ்சம் வித்தியாசமான படங்களே ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றன.

அடல்ட் சினிமாக்கள் 

இருட்டு அறையில் முரட்டு குத்து

தமிழ் சினிமாவில் `திரிஷா இல்லைனா நயன்தாரா' படம் தந்த அதிரிபுதிரி வெற்றியால், அடல்ட் காமெடி ஜானரில் பல படங்கள் வரத் தொடங்கின. ஹாலிவுட்டில் முழுக்க முழுக்க இளைஞர்களை மட்டுமே குறிவைத்து எடுக்கப்படும் இந்த ஜானருக்குப் பெரும் வரவேற்பு உண்டு. சொல்ல வரும் விஷயத்தைச் சரியாகப் பேசினால், நாமும் அடல்ட் காமெடி ஜானர்களை தாராளமாக வரவேற்கலாம்தான். ஆனால், இங்கு ஆபாச நகைச்சுவைகளையும், கவர்ச்சியையும் மட்டுமே நிரப்பி, அடல்ட் காமெடி ஜானரில் படம் எடுக்கிறார்கள்.

அடல்ட் காமெடிப் படம் என்றால் இரட்டை அர்த்த வசனம், காட்சியை வைத்து அதற்கு இன்னொரு அர்த்தம் கற்பிப்பது வழக்கம். சென்ற வருடம் இந்த ஜானரில் வெளிவந்த `இருட்டு அறையில் முரட்டு குத்து', `இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு' இரண்டு திரைப்படங்களும்  வெளிப்படையான பாலியல் வசனங்கள், காட்சிகளை வைத்தன.

இப்படங்களைப் பார்க்க 18 வயது நிரம்பியவர்களுக்கு மட்டுமே அனுமதி என்றாலும், இன்றைக்கு யூ-டியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அத்தனையையும் கிடைக்கிறது. அதனாலேயே தமிழ்ப் படங்களில் இலைமறை காயாக இருந்து வந்த இரட்டை அர்த்த வசனங்கள், படம் முழுக்கவே நிறைந்திருப்பதை எச்சரிக்கையாகவே அணுக வேண்டிய சூழ்நிலை உருவாகியிருக்கிறது. 

படங்களில் பாடல்களின் பங்கு 

96 

80-களின் தமிழ் சினிமாக்கள் பாடல்களுக்காகவே வெள்ளிவிழா, வைரவிழா கண்டன. `கும்மிப்பாட்டு', `செந்தமிழ்ப்பாட்டு', `வண்ணத்தமிழ் பாட்டு' எனப் பாடல்களைப் பிரதானமாக வைத்துக்கூட பல படங்கள் வந்திருக்கின்றன. சில காலமாகவே படங்களில் பாடல்களை சரியான இடங்களில் பயன்படுத்தாத குறையை அல்லது கச்சிதமாகப் பயன்படுத்திய படங்கள் என `பரியேறும் பெருமாள்', `96', `செக்கச் சிவந்த வானம்' ஆகிய படங்களைச் சொல்லலாம். 

பரியேறும் பெருமாள்

`பரியேறும் பெருமாள்' படத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில் வந்த `நான் யார்’, `எங்கும் புகழ் துவங்க’ பாடல்களாகட்டும், கோவிந்த் வசந்தா தனது வயலின்களைக் காதலில் நனைத்து இழையவிட்ட `96' ஆல்பமாகட்டும், ரஹ்மானின் `செக்கச் சிவந்த வானம்' பாடல்களாகட்டும்... அத்தனையும் படத்திற்கான ஆன்மாவாக இருந்தது. இவை தவிர்த்து, `சண்டாளி உன் அழகுல', `கண்ணம்மா', `என்னடி மாயாவி நீ' எனப் பல சூப்பர் டூப்பர் பாடல்களும் தமிழ் சினிமாவுக்குக் கிடைத்தன.

ரூட்டை மாத்து தல! 

நாச்சியார்

ஒவ்வோர் இயக்குநருக்கும் கிளிஷேவாக சில விஷயங்கள் இருக்கும். இது பெரும்பாலான நேரங்களில் வொர்க் அவுட் ஆகும். அதேசமயம், `திரும்பத் திரும்ப அதையேதான்பா சொல்றாரு அவரு!' மாதிரி இயக்குநருக்கே திரும்பவும் செய்யும். இயக்குநர் பாலாவுக்கும் அப்படி ஒரு இமேஜ் இருந்தது. `தாரை தப்பட்டை' படத்தின் தோல்விக்குப் பிறகு அதை உடைத்து, தன்னிடம் இருந்த கிளிஷேவை மாற்றிக்கொண்டு, `நாச்சியார்' படத்தைக் கொடுத்தவர், தனி ஃபார்மில் நின்றார். 

செக்க சிவந்த வானம்

`ஓ காதல் கண்மணி', `காற்று வெளியிடை' படங்களில் முப்பது ஆண்டுகாலமாகத் தான் திரைமொழியில் பேசிக்கொண்டிருந்த காதலை, கொஞ்சம் ஹைடெக்காக மாற்றிப் பேசிய மணிரத்னம், `செக்கச் சிவந்த வானம்' படத்தின் மூலம் வேற லெவல் ஆக்ஷனில் இறங்கினார். 'மணிரத்னம் படம்தானா இது!' என ஆச்சர்யப்பட வைத்தார் மனிதர். 

வித்தியாசமான முயற்சிகள் 

மெர்க்குரி

கமல்ஹாசனின் `பேசும் படம்' படத்துக்குப் பிறகு, வசனமில்லாத படம் தமிழ்சினிமாவில் வந்ததில்லை. அதை, அதற்கே உரிய கதை, திரைக்கதையோடு `மெர்க்குரி' மூலம் கச்சிதமாகக் கொடுத்திருந்தார், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ். தமிழ் சினிமாவின் முதல் ஜோம்பி படத்தைக் கொடுத்த இயக்குநர் சக்தி செளந்தர்ராஜன் - நடிகர் ஜெயம் ரவி கூட்டணி, சென்ற வருடம் இந்தியாவின் முதல் விண்வெளிப் படம் என்ற கேப்ஷனோடு, `டிக் டிக் டிக்' படத்தைக் கொடுத்தார்கள். பெரிய பட்ஜெட்டில் உருவாகி, வரவேற்பைப் பெற்ற `2.0' படத்தில் 4டி என்ற புதிய சவுண்டு தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டது. 

கதையை நம்புங்க தலைவா!

 கடைக்குட்டி சிங்கம்

கதை வறட்சி தமிழ் சினிமாவின் சாபக்கேடு. அதை சென்ற வருடத்தில் வெளியான சில படங்கள் மாற்றின. நல்ல கதைகளோடு பல சினிமாக்கள் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றன. உறவுகளின் உன்னதத்தைச் சொன்ன `கடைக்குட்டி சிங்கம்', பள்ளிப் பருவக் காதலை நினைவுபடுத்திய `96', பெண்கள் கிரிக்கெட்டைப் பதிவு செய்த `கனா' மற்றும் கதைக்குத் தேவையான அரசியல் பேசிய `பரியேறும் பெருமாள்', `வடசென்னை', `மேற்குத் தொடர்ச்சி மலை' படங்கள்... எனப் பல தரமான கதைகளும் வந்தன.

2019-ல் தமிழ் சினிமாவில் இன்னும் பல புதுமைகள், உன்னதப் படைப்புகள் வெளிவரட்டும்!


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close