Published:Updated:

``உண்மை எதுனு எனக்கும் ஜிப்ரானுக்கும்தான் தெரியும்!'' - பாடல் சர்ச்சை குறித்து சற்குணம்

பிர்தோஸ் . அ

`வாகை சூட வா' படத்தில் இடம்பெற்ற `சரசர சாரக் காத்து' பாடல் வரிகள் கார்த்திக் நேத்தா எழுதியது எனவும், அதை வைரமுத்து தன் பெயரில் வெளியிட்டிருக்கிறார் எனவும் தகவல் பரவி வந்தது. இதுகுறித்து, அப்படத்தின் இயக்குநர் சற்குணம் பேசியிருக்கிறார்.

``உண்மை எதுனு எனக்கும் ஜிப்ரானுக்கும்தான் தெரியும்!'' - பாடல் சர்ச்சை குறித்து சற்குணம்
``உண்மை எதுனு எனக்கும் ஜிப்ரானுக்கும்தான் தெரியும்!'' - பாடல் சர்ச்சை குறித்து சற்குணம்

`96' படத்தில் இடம்பெற்ற பாடல்கள் மூலம் அதிக கவனம் பெற்றவர் பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா. இப்படத்தில் இடம்பெற்ற பாடல் வரிகளுக்காக இவருக்கு விருதுகளும் கிடைத்தன. இப்படத்துக்குப் பிறகு, இவர் எழுதிய மற்ற பாடல்களையும் தேட ஆரம்பித்தார்கள் இசை ரசிகர்கள். `வாகை சூட வா' படத்தில் இடம்பெற்ற `போறானே... போறானே' பாடல் வரிகளை எழுதிய கார்த்திக் நேத்தா, அப்படத்தில் இடம்பெற்ற `சரசர சாரக்காத்து...’ பாடலையும் எழுதியதாகவும், அதற்குப் பிறகு அப்பாடலை வைரமுத்து எழுதி, அவர் பெயரில் வெளியானதாகவும் செய்திகள் வந்தன. இப்பாடல் வரிகள் பிரச்னை குறித்து `வாகை சூட வா' படத்தின் இயக்குநர் சற்குணம் அவர்களிடம் பேசினேன். 

``உண்மை எதுனு எனக்கும் ஜிப்ரானுக்கும்தான் தெரியும்!'' - பாடல் சர்ச்சை குறித்து சற்குணம்

``பொதுவா இரண்டு விதத்தில் பாடலுக்கான கம்போஸிங் நடக்கும். ஒரு வகையில சொல்லணும்னா, ஒரு பாடலுக்கான கம்போஸிங் அதில் வேலை பார்க்கிற பாடலாசிரியர், இசையமைப்பாளர், இயக்குநர்கள் பொறுத்து மாறுபடும். சில பாடலுக்கான கம்போஸிங் இயக்குநர் பாடலின் சூழலை இசையமைப்பாளார்கிட்ட சொல்லிடுவார். அவர் கம்போஸிங் பண்ணி இயக்குநருக்குப் பிடித்திருந்தால் பாடலாசிரியருக்கு டியூன் போகும். பிறகு, பாடலாசிரியர் வரிகளை எழுதி அனுப்புவார். இதற்குப் பிறகு இயக்குநரும் பாடலாசிரியரும் கேட்டுப் பாடலை ஓகே பண்ணி ரெக்கார்டு பண்ணுவாங்க. 

இன்னொரு வகையில, பாடல் கம்போஸிங் நடந்துக்கிட்டு இருக்கிறப்போவே டம்மி வரிகளைப் போடுவதும் உண்டு. பிறகு, யார் பாடல் எழுதுறாங்களோ அவங்களுக்கு டம்மி வரிகளை அனுப்புவோம். கவிஞர் டம்மி வரிகளை எடுத்துட்டு, அவருடைய கற்பனையில் வர்ற வரிகளைப் போட்டு எழுதி அனுப்புவாங்க. இப்படித்தான், `வாகை சூட வா' படத்தின் பாடல் கம்போஸிங் நடந்தது. `சரசர சாரக்காத்து' பாடலுக்கான டம்மி வரிகளை கார்த்திக் நேத்தா எழுதினார். 

அதேமாதிரி, `போறானே போறானே' பாடலுக்கான வரிகளை கார்த்திக் நேத்தா எழுதியிருந்தார். ஜிப்ரான் என்கிட்ட `போறானே' பாடலோட கம்போஸிங்கைப் போட்டுக் காட்டினார், எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. அப்போதே இந்தப் பாட்டு டம்மி வரிகளோட ரெடியா இருந்தது. டம்மி வரிகளை ஜிப்ரான், அவருடைய நண்பர் சாய் மற்றும் பாடலைப் பாடிய ரஞ்சித் மூணு பேரும் சேர்ந்துதான் எழுதினாங்க. கார்த்திக் நேத்தாகிட்ட டம்மி வரிகளோட சேர்த்தே பாடலைக் கொடுத்தேன். அற்புதமான வரிகளைப் போட்டு கார்த்திக் நேத்தா கொடுத்தார். நானே பல வரிகளைப் படிச்சுப் பாராட்டினேன். அதேசமயம், டம்மி வரிகள்ல இருந்தும் கொஞ்சம் பாட்டுல வெச்சேன். 

``உண்மை எதுனு எனக்கும் ஜிப்ரானுக்கும்தான் தெரியும்!'' - பாடல் சர்ச்சை குறித்து சற்குணம்

ஏன்னா, சில வரிகள் மெட்டு கட்டுறப்போ அதுல அழகாக உட்கார்ந்திருக்கும். இயக்குநருக்கும் டம்மியில் இடம்பெற்ற வரிகள் சில இருந்தா நல்லா இருக்கும்னு தோணுனா, இப்படிப் பயன்படுத்துவாங்க. அப்படிதான் நானும் எடுத்தேன். இது சகஜமான ஒன்று. `அடி, மஞ்சள் கிழங்கே உன்னை நினைச்சு நினைச்சு தினம் மனசுக்குள்ளே வைச்சுப் பூட்டிக்கிட்டேன். உன் பிஞ்சு விரல் பதிஞ்ச மண்ணை எடுத்துக் காயத்துக்குப் பூசிக்கிட்டேன்'னு சில வரிகள் அந்தப் பாட்டுல இருந்தது. அதை கார்த்திக் நேத்தா எழுதலை. தவிர, இந்தப் பாடலுக்கான டம்மி வரிகளின் பல்லவி, `போறாளே போறாளே'னுதான் இருந்தது. `ஈரக்கொலையைக் கொஞ்சம் இரவல் தாடி... பொண்ணு மனசைக் கொஞ்சம் புரிய வாடி' இந்த வரிகள் நான் எழுதினேன். அதுக்காக, இந்தப் பாட்டு என்னோடதுனு சொல்ல முடியுமா?’’ என்றவர் தொடர்ந்தார்.

``இந்த 5 வரிகள் மட்டுமே முழுப் பாடல் கிடையாது. 99% வரிகளைக் கார்த்திக் நேத்தாதான் எழுதினார். தவிர, நாங்க பயன்படுத்திய 5 வரிகளை கார்த்திக் நேத்தா எழுதத் தெரியாதவர் இல்லை. ஐம்பது வரிகள் கேட்டாலும் தருவார். ஆனா, எந்த வரிகள் எங்கே இருந்தா நல்லா இருக்கும் என்ற முடிவை இயக்குநர்கள்தான் எடுக்குறாங்க. அப்படி நான் எடுத்த முடிவுதான், `சரசர சாரக் காத்து' பாட்டுக்கு நடந்தது. இந்தப் பாடலுக்கான டம்மி வரிகளைக் கார்த்திக் எழுதினார். அந்த டம்மி வரிகள் வைரமுத்துவுக்குப் போனது. அவர் டம்மி வரிகள் எல்லாத்தையும் மாத்தி, புதுசா ஒரு பாடலை எழுதி அனுப்பினார். நான்தான், டம்மியில் இடம்பெற்ற சில வரிகளைப் பாடல்ல பயன்படுத்தினேன். இது அப்போ வைரமுத்து சாருக்கே தெரியாது. 

கார்த்திக் நேத்தா நல்ல கவிஞர். என்னை அண்ணன்னு அழைக்கிற நபர். அவரை நான் குறைச்சு மதிப்பிடலை. வாழ்வியல், இலக்கணம், அறிவியல் எல்லாமே தெரிஞ்ச கவிஞர். நிறைய தேடல் உள்ளவர். அதனால, `போறானே' பாட்டில் என்ன நடந்ததோ, அதுதான் `சரசர சாரக்காத்து' பாடலுக்கும் நடந்தது. பிறகெப்படி, `இது வைரமுத்துவின் வரிகள் இல்லை'னு அவர் சொல்ல முடியும்? 

``உண்மை எதுனு எனக்கும் ஜிப்ரானுக்கும்தான் தெரியும்!'' - பாடல் சர்ச்சை குறித்து சற்குணம்

இந்தப் பாட்டுக்கு சர்ச்சை வந்தப்போ, எனக்கு அதிர்ச்சியா இருந்தது. ஏன்னா, நடந்த உண்மை எனக்கும் ஜிப்ரானுக்கும்தான் தெரியும். இந்தச் சர்ச்சையில ரெண்டுபேர் மீதும் தப்பில்லை. உண்மை என்ன என்பதை விளக்க வேண்டிய இடத்துல நான்தான் இருக்கேன். அதனாலதான் சொல்றேன். என் அடுத்தடுத்த படங்களில் வைரமுத்து சார், கார்த்திக் நேத்தா இருவரும் இருப்பாங்க; தொடர்ந்து பயணிப்போம்’’ என்று முடிக்கிறார் இயக்குநர் சற்குணம். 

பிர்தோஸ் . அ

Make others happy by being happy ! “ Its my favorite quote. And I live towards it. I want to talk talk talk even if..