Published:Updated:

``அஜித் பட ஆடிஷன்ல என்ன ஆச்சுனா?!" - அபிராமி வெங்கடாசலம்

சனா

"இந்தப் படத்தோட அதிகாரபூர்வமான அறிவிப்பு வந்தப்போ, எங்க அம்மா சந்தோஷத்துல அழுதுட்டாங்க. ஏன்னா, அவங்களுக்குத்தான் தெரியும், நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன்னு!"

``அஜித் பட ஆடிஷன்ல என்ன ஆச்சுனா?!" - அபிராமி வெங்கடாசலம்
``அஜித் பட ஆடிஷன்ல என்ன ஆச்சுனா?!" - அபிராமி வெங்கடாசலம்

``நான் பிறந்தது திருச்சி. மத்தபடி, நான் பக்கா சென்னைப் பொண்ணு. சின்ன வயசுல இருந்து பாட்டு, டான்ஸ் ரொம்பப் பிடிக்கும். ஆனா, சினிமாவுக்கு வரணும், நடிக்கணும்ங்கிற ஆசையெல்லாம் இருந்ததில்லை!" உற்சாகமாகப் பேசுகிறார், அபிராமி வெங்கடாசலம். அஜித்தை வைத்து வினோத் இயக்கவிருக்கும் படத்தில் முக்கியமான ரோலில் நடிக்கிறார், அபிராமி. தவிர வெப் சீரிஸ், விளம்பரப் படங்களிலும் பிஸி!  

``எங்க வீட்டுல இருக்கிற யாரும் சினிமா துறையைச் சேர்ந்தவங்க கிடையாது. ஒரு மாடலா நான் நின்னப்போ, வீட்டுல முதல்ல தயங்குனாங்க. ஆனா, அம்மா எனக்கு ஃபுல் சப்போர்ட். பரதநாட்டியம் கத்துக்கிட்டேன். பிறகு, மாடலிங் பண்ணினேன். ஆரம்பத்துலேயே நேஷனல் லெவல் விளம்பரப் படங்கள்ல நடிக்கிற வாய்ப்பு வந்தது. தாரா அம்மா, ருக்குமணி மேடம், பிஜு இவங்கதான் நேஷனல் விளம்பரப் படங்களுக்காக சென்னையிலிருந்து ஒருங்கிணைப்பாங்க. இதுல, தாரா எனக்கு அம்மா மாதிரி!. மாடலிங் பீல்டில் ஒரு பொண்ணுக்கு நிறைய சிரமங்கள் இருக்கும். எந்த சிரமங்களும் இல்லாம, வெற்றிகரமா நான் மாடலிங் ஃபீல்ட்ல வலம்வர இவங்கதான் காரணம். பிறகு, புட் சட்னியோட `கன்ட்ரோல் ஆல்ட் டெலிட்' வெப் சீரிஸ் பண்ணினேன். இது, என்னைப் பெருசா அறிமுகப்படுத்தியது.  

சினிமாவில் நடிக்கலாம்னு நினைச்சு, பல ஆடிஷன்ல கலந்துக்கிட்டேன். பல இடங்கள்ல ரிஜெக்ட் ஆகியிருக்கேன். ஆனா, எங்கேயும் என் நம்பிக்கையை நான் இழக்கலை. தொடர்ந்து போராடிக்கிட்டு இருந்தேன். அப்போதான், ஒரு அதிசயமா அஜித் சார் படத்துல நடிக்கிற வாய்ப்பு கிடைச்சது. இந்தப் படத்தோட அதிகாரபூர்வமான அறிவிப்பு வந்தப்போ, எங்க அம்மா சந்தோஷத்துல அழுதுட்டாங்க. ஏன்னா, அவங்களுக்குத்தான் தெரியும், நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன்னு! இந்தியில் `பிங்க்' படத்தைப் பார்த்துட்டு அம்மாகிட்ட `இந்தப் படத்துல நல்ல மெசேஜ் இருக்கு. இதை தமிழில் ரீமேக் பண்ணா, அதுல நான் நடிக்கணும்'னு சொல்லியிருந்தேன். அது நடந்துடுச்சு." என்றவர், தொடர்ந்தார்.

``முதல்ல எனக்கு இந்தப் படம் `பிங்க்' படத்தின் ரீமேக்னு தெரியாது. ஆடிஷன்லதான் எனக்குத் தெரியும். காஸ்ட்யூம் டெஸ்ட் அது இதுனு எல்லாத்தையும் நல்லாப் பண்ணிக் கொடுத்தேன். ஆடிஷன் முடிச்சுட்டு வீட்டுக்கு வந்தப்போகூட, நாம செலக்ட் ஆவோம்னு நினைக்கவே இல்லை. அதனாலயே, அஜித் சார் படத்துக்கு ஆடிஷன் போன விஷயத்தை யார்கிட்டேயும் சொல்லலை.

அறிவிப்புல, நானும் படத்துல இருக்கேன்னு தெரிஞ்சதும் அவ்ளோ சந்தோஷம். ஏன்னா, இப்படி ஒரு படத்துல நடிக்கமாட்டோமானு பலபேர் வெயிட் பண்ணுவாங்க. அப்படி ஒரு கூட்டணியில உருவாகிற படத்துல நானும் இருக்கேன்னு நினைச்சாலே, எனக்கு சந்தோஷமா இருக்கு. ஶ்ரீதேவி மேடம் எனக்கு ரொம்பப் பிடிக்கும். சின்ன வயசுல இருந்தே அவங்க நடிச்ச படங்களைப் பார்க்கிறது, அவங்க ஸ்டில்ஸைப் பத்திரப்படுத்தி வெச்சுக்கிறதுனு, வெறித்தனமான ரசிகையா இருந்தேன். இன்னைக்கு, அவங்களோட கணவர் போனி கபூர் தயாரிப்புல நான் நடிக்கிறதை நினைச்சாலே சந்தோஷமா இருக்கு. அஜித் சார், வினோத் சார், போனி கபூர்... இப்படி ஒரு கூட்டணியில நானும் இருக்கிறது, ஶ்ரீதேவி மேடமே சொர்க்கத்துல இருந்து என்னை ஆசீர்வாதம் பண்ணதா உணர்றேன்" என நெகிழ்ச்சியாக முடிக்கிறார், அபிராமி வெங்கடாசலம். 

சனா

Make others happy by being happy ! “ Its my favorite quote. And I live towards it. I want to talk talk talk even if..