``மன்சூர் அலிகான் முதல் மொட்டை ராஜேந்திரன் வரை... வில்லன் டு காமெடியன்கள்!" | Villan to comedian actors in tamil cinema

வெளியிடப்பட்ட நேரம்: 15:51 (18/03/2019)

கடைசி தொடர்பு:15:51 (18/03/2019)

``மன்சூர் அலிகான் முதல் மொட்டை ராஜேந்திரன் வரை... வில்லன் டு காமெடியன்கள்!"

வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து பிறகு காமெடியனாகவும் கலக்கிய நடிகர்கள் தமிழ் சினிமாவில் பலர். அவர்களில் சிலரைப் பற்றிய லிஸ்ட் இது!

``மன்சூர் அலிகான் முதல் மொட்டை ராஜேந்திரன் வரை... வில்லன் டு காமெடியன்கள்!

ஹீரோக்களுக்கு நிகராக வில்லன்களையும் தூக்கி வைத்துக் கொண்டாடியிருக்கிறார்கள், தமிழ் சினிமா ரசிகர்கள். அப்படி ஒருகாலத்தில் வில்லனாகக் கொண்டாடப்பட்ட பலர், காலமாற்றத்தில் காமெடியனாகவும் வலம் வந்திருக்கிறார்கள்.

வில்லன் என்றாலே சட்டென நம் நினைவுக்கு வருபவர், காலம் சென்ற நம்பியார்தான். `எங்க வீட்டுப் பிள்ளை', `குடியிருந்த கோயில்', `நாடோடி மன்னன்', `ஆயிரத்தில் ஒருவன்', `உலகம் சுற்றும் வாலிபன்', `படகோட்டி', `நாளை நமதே' என எம்.ஜி.ஆருக்கு வில்லனாக நம்பியார் நடித்த அனைத்துப் படங்களுமே சூப்பர் ஹிட்! எம்.ஜி.ஆர் முதல் சரத்குமார் வரை பல தலைமுறை ஹீரோக்களுடன் வில்லனாகவும், அவ்வப்போது குணச்சித்திர கேரக்டர்களிலும் தொடர்ந்தவர், `சேதுபதி ஐ.பி.எஸ்', `பூவே உனக்காக', `வின்னர்' போன்ற படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்திலும் கலக்கினார். இப்படியாக, `வில்லன் டு காமெடி' பயணத்தில் நம்மை ரசிக்கவைத்த சிலரைப் பற்றிப் பார்ப்போம்! 

மொட்டை ராஜேந்திரன் :

மொட்டை ராஜேந்திரன் - வில்லன் டு காமெடி நடிகர்

ஸ்டன்ட் நடிகராக தனது சினிமா பயணத்தைத் தொடங்கிய ராஜேந்திரன், பல நடிகர்களுக்கு டூப் போட்டு கிட்டத்தட்ட 500 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். பின்னர் `பிதாமகன்' உள்ளிட்ட சில படங்களில் சிறு வேடங்களில் வந்துபோனவர், `நான் கடவுள்' படத்தின் மூலம் முரட்டு வில்லனாக மிரட்டினார். 

தொடர்ந்து, `உத்தம புத்திரன்’, `சிங்கம் 2’ போன்ற சில படங்களில் வில்லனாகவே வலம் வந்தவர், `பாஸ் என்கிற பாஸ்கரன்' படத்தின் மூலம் நகைச்சுவை நடிகராக மாறி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். வடிவேலு, சந்தானம் போன்ற காமெடி நடிகர்கள் ஹீரோவாகப் புரமோஷன் ஆன சூழலைக் கச்சிதமாகப் பயன்படுத்தியவர், நகைச்சுவையில் முன்னணி நடிகராக வலம் வந்தார். கால்ஷீட் தர முடியாத அளவுக்குத் தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் ராஜேந்திரனைக் காமெடி நடிகராக அப்படியே அள்ளிக்கொண்டார்கள், ரசிகர்கள்.  

மன்சூர் அலிகான் :

மன்சூர் அலிகான்

மும்பை திரைப்படக் கல்லூரியில் நடிப்புப் பயிற்சி பெற்று, சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து சினிமா பயணத்தைத் தொடங்கிய மன்சூர் அலிகான், விஜயகாந்த் நடிப்பில் வெளியான `கேப்டன் பிரபாகரன்' மற்றும் `நட்புக்காக' போன்ற படங்களின் மூலம் மிகச்சிறந்த வில்லன் நடிகராக தமிழ் சினிமாவுக்கு அடையாளமானார். பிறகு, பல படங்களில் வில்லன், கதாநாயகன், குணச்சித்திர நடிகர் என வலம் வந்தவர், `கந்தசாமி' படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் அசத்தினார். சமீபத்தில் `சிலுக்குவார்பட்டி சிங்கம்' திரைப்படத்தில் `நிலக்கோட்டை நாராயணனாக' அதகளம் செய்திருந்தார் மன்சூர் அலிகான். 

ஆனந்த் ராஜ் :

ஆனந்த் ராஜ்

80, 90-களில் வெளிவந்த தமிழ் சினிமாக்களில் தவிர்க்க முடியாத வில்லனாக வலம் வந்தவர், நடிகர் ஆனந்த் ராஜ். ரஜினி, கமல், விஜயகாந்த் எனப் பல முன்னணி நடிகர்களின் படங்களில் வில்லனாக நடித்தவர், வில்லனாக மட்டுமே கிட்டத்தட்ட 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். 

கொடூர வில்லனாக நடித்துக்கொண்டிருந்த காலத்திலேயே `அடங்கொப்பன் தாமிரபரணில தலை முழுக...' போன்ற வசனங்களால் நகைச்சுவை செய்துகொண்டிருந்தவர், `நானும் ரெளடிதான்' படத்திலிருந்து காமெடி நடிகராக மாறினார். தொடர்ந்து, `தில்லுக்கு துட்டு', `மரகத நாணயம்', `சிலுக்குவார்பட்டி சிங்கம்' போன்ற படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருபவர், தற்போது அட்லி இயக்கத்தில் `தளபதி 63' படத்தில் நடிக்கிறார். 

இவர்கள் மட்டுமல்ல, மறைந்த மணிவண்ணன், கலாபவண் மணி ஆகியோர் வில்லன் டு காமெடியனாகக் கலக்கியவர்களில் முக்கியமானவர்கள். தவிர, ராதாரவி, மணிவண்ணன், பொன்னம்பலம், ஆஷிஷ் வித்யார்த்தி, பசுபதி எனப் பலரும் ஒரு காலத்தில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து, பிறகு காமெடி கேரக்டர்களிலும் பட்டையைக் கிளப்பியிருக்கிறார்காள். `வில்லன் டு காமெடி' கதாபாத்திரத்திற்கு மாறிய நடிகர்களில் உங்களை வசீகரித்தவர்களைப் பற்றி கமென்ட் செய்யலாமே!


டிரெண்டிங் @ விகடன்