Published:Updated:

``மோகன்லாலை அறைஞ்சேன்; அவர் என்னை மிதிச்சார்..!" - `லூசிஃபர்' சர்ச்சை குறித்து ஜான் விஜய்

பிர்தோஸ் . அ
``மோகன்லாலை அறைஞ்சேன்; அவர் என்னை மிதிச்சார்..!" - `லூசிஃபர்' சர்ச்சை குறித்து ஜான் விஜய்
``மோகன்லாலை அறைஞ்சேன்; அவர் என்னை மிதிச்சார்..!" - `லூசிஃபர்' சர்ச்சை குறித்து ஜான் விஜய்

காமெடி, வில்லன் கதாபாத்திரங்களில் கவனம் பெற்றவர், நடிகர் ஜான் விஜய். தமிழில் பல படங்களில் நடித்தவர், மலையாளத்தில் துல்கர் சல்மான், பஹத் பாசில், ஜெயராம், மோகன்லால் ஆகியோருடனும் நடித்திருக்கிறார். சமீபத்தில் ப்ரித்விராஜ் இயக்கத்தில் `லூசிஃபர்' படத்தில் நடித்திருந்தார். அவரிடம் பேசினேன்.  

``என் சொந்த ஊர் சென்னைதான். விஸ்காம் படிச்சுட்டு மீடியாவுல வேலை பார்த்தேன். புஷ்கர் - காயத்ரி காலேஜ்ல என் ஜூனியர்ஸ். `நாங்க படம் பண்றப்போ, நீதான் ஹீரோ'னு என்கிட்ட சொல்வாங்க. ஆனா, ரெண்டுபேரும் படம் எடுத்தப்போ, நான் வில்லன் மாதிரியான லுக்ல இருந்ததுனால, ஆர்யாவை ஹீரோ ஆக்கிட்டு, என்னை வில்லனா நடிக்க வெச்சுட்டாங்க. `ஓரம் போ' படத்துல அப்படி நான் பேசுன வசனங்கள் செம ரீச். காரணம், வசனம் தியாகராஜன் குமாரராஜா. அவரும் என் ஜூனியர்தான்.'' - குட்டி ரீவைண்டு கொடுத்துப் பேசுகிறார், ஜான் விஜய். 

``பிறகு, தொடர்ந்து பல வாய்ப்புகள் வந்தது, நடிச்சேன். `ராவணன்' மணிரத்னம் சார் படம். பல பெரிய ஆள்கள் இருந்த இந்தப் படத்துல, நான் சின்ன ஆர்ட்டிஸ்ட். ஆனா, தயக்கமில்லாம நடிச்சேன். இந்தப் படத்துல ப்ரித்விராஜ்கூட போலீஸ் கேரக்டர்ல நடிச்சிருப்பேன். அந்தப் பழக்கம்தான், `லூசிஃபர்' படம் வரைக்கும் கொண்டுவந்திருக்கு. மோகன்லால் எனக்குப் பிடித்த நடிகர். இந்தப் படத்துல நெகட்டிவ் கேரக்டர்ல நடிச்சிருக்கேன். மோகன்லாலை நான் அறையிற மாதிரி ஒரு காட்சி. அதுல, நான் எந்தத் தயக்கமும் இல்லாம ஒரிஜினலா கன்னத்துல அறைஞ்சேன். ஏன்னா, நான் அவரை `ஸ்டீபன்'ங்கிற கேரக்டரா மட்டும்தான் பார்த்தேன். அவரும் என்னை `மயில் வாகனம்' கேரக்டராதான் பார்த்தார். படத்துல மோகன்லால் காலைத் தூக்கி என் கழுத்துல வைக்கிற காட்சிக்கு தியேட்டர்ல செம ரெஸ்பான்ஸ்! இந்தக் காட்சிக்கு அங்கே சில சர்ச்சைகளும் வந்திருக்கு. இதைப் படமா பார்க்கிறப்போ, எந்தப் பிரச்னையும் இருக்காது. மோகன்லால் நிஜ போலீஸ்காரர் மேலே காலைத் தூக்கி வைக்கலையே! தவிர, கெட்ட போலீஸை இப்படி அடிக்கிறதுல எந்தத் தப்பும் இல்லை. நடிக்கிறதுக்கு நிறைய ஸ்கோப் இருக்கிற படங்கள் நிறைய வரும். அது எனக்குப் பிடிக்கும்." என்றவர், தொடர்ந்தார். 

``போலீஸ் கேரக்டர்னாலே என்னைத்தான் நடிக்கக் கூப்பிடுறாங்க. தமிழில் `மெளனகுரு' படத்துல நடிச்சிருப்பேன். இந்தப் படத்துக்குப் பிறகுதான், முதல் மலையாளப் பட வாய்ப்பு எனக்கு வந்தது. மலையாளத்துல கலாபவன் மணி சார்கூட நடிச்ச அனுபவத்தை மறக்க முடியாது. அவர்கூட நான் கடைசியா நடிச்ச படம், `Madirasi'. எனக்கு கல்யாணம் ஆன புதுசுல, மனைவியைக் கூட்டிக்கிட்டு ஷூட்டிங் ஸ்பாட் போயிருந்தேன். அப்போ, கேரளாவுல இருக்கிற சாலக்குடி ஏரியாவுல என்னையும், என் மனைவியும் உட்கார வெச்சு ஆட்டோவுல ரவுண்ட் அடிச்சார், கலாபவன் மணி. அங்கே இருக்கிற எல்லா ஆட்டோ டிரைவர்கள்கூடவும் கலாபவன் மணி நல்லா பழகுவார். அவருடைய இறப்பு எனக்குப் பெரிய துக்கமா இருந்தது. 

தீவிரமான வில்லன் கேரக்டர் பண்றதுதான் எனக்குப் பிடிக்கும். ஏன்னா, நிஜத்தில் நல்லவனா வாழ்ந்துட்டு படத்துல வில்லனா நடிக்கணும்னு நினைப்பேன். சினிமாவுல முதலில் இயக்குநர் ஆகணும்னுதான் ஆசைப்பட்டேன். ரஜினி சாரைப் பார்த்து `கதிர்வேலன்'ங்கிற கதையைச் சொன்னேன். அவருக்கும் பிடிச்சிருந்தது. சில காரணங்களால அந்தப் படத்தைப் பண்ண முடியல. `பாபா' படத்தின்போது, ரஜினி சாரை மீட் பண்ணப் போயிருந்தேன். அப்போ, நான் தலையில் தலப்பா கட்டிக்கிட்டு ஜிப்பா போட்டிருந்தேன். என் டிரெஸ்ஸிங் ஸ்டைல் ரஜினி சாருக்குப் பிடிச்சிருச்சு. உடனே, என் ஜிப்பாவைக் கழட்டச் சொல்லி அதை வாங்கிக்கிட்டார். அதேமாதிரி, தலப்பாவும் வாங்கி வெச்சுக்கிட்டார். அதுதான், ரஜினி சாரோட `பாபா' லுக். நான் வெறும் உடம்போடு சட்டை இல்லாம நின்னுக்கிட்டு இருந்தேன். அவர் சட்டையை என்கிட்ட கொடுத்தார். அந்தச் சட்டையை நான் இன்னும் பத்திரமா வெச்சிருக்கேன். இந்தச் சம்பவத்துக்குப் பிறகு ரஜினியை `கபாலி' படத்தோட ஷூட்டிங் ஸ்பாட்டுலதான் பார்த்தேன். எல்லாத்தையும் ஞாபகம் வெச்சிருந்தார், ரஜினி. இப்போ நிறைய படங்கள்ல நடிக்கிறேன், சீக்கிரமே டைரக்‌ஷனும் பண்ணுவேன்.'' என்கிறார், நம்பிக்கையுடன்!

பிர்தோஸ் . அ

Make others happy by being happy ! “ Its my favorite quote. And I live towards it. I want to talk talk talk even if..