Published:Updated:

``விடிவி 2, மாநாடு, சீமான் படம், இயக்கி நடிக்கும் படம்... சிம்புவின் 9 படங்கள்... என்ன அப்டேட்ஸ், எப்போ ரிலீஸ்?!" - #STR #VikatanExclusive

அலாவுதின் ஹுசைன்

கார்த்திக் நரேன் - சிம்பு கூட்டணியில் உருவாகவிருக்கும் படத்தின் கதை சிம்புவுக்குப் பிடித்திருந்தும், அப்படத்தின் வேலைகள் தொடங்காமல் இருப்பதற்கான காரணம், படத்தின் தயாரிப்பாளர்தான். சென்டிமென்ட்டான கமர்ஷியல் படங்களைத் தயாரிக்கும் அந்த நிறுவனம், ஏற்கெனவே தயாரித்த படங்களின் சாயலில் கதையை உருவாக்கக் கேட்டிருக்கிறார்கள்.

``விடிவி 2, மாநாடு, சீமான் படம், இயக்கி நடிக்கும் படம்... சிம்புவின் 9 படங்கள்... என்ன அப்டேட்ஸ், எப்போ ரிலீஸ்?!" - #STR #VikatanExclusive
``விடிவி 2, மாநாடு, சீமான் படம், இயக்கி நடிக்கும் படம்... சிம்புவின் 9 படங்கள்... என்ன அப்டேட்ஸ், எப்போ ரிலீஸ்?!" - #STR #VikatanExclusive

சொந்தமாக இயக்கி நடிக்கவிருக்கும் படம், கௌதம் மேனன் இயக்கத்தில் நடிக்கவிருக்கும் படம், கார்த்திக் நரேன் இயக்கத்தில் ஒரு படம், ஐக் இயக்கத்தில் ஒரு படம், வெங்கட் பிரபுவுடன் `மாநாடு', தாணு தயாரிப்பில் ஒரு படம், சீமான் இயக்கத்தில் ஒரு படம் என வரிசையாக STR 35, STR 36, STR 37, STR 38, STR 39, STR 40 என ரூட் பஸ் நம்பர் மாதிரி படங்களை அறிவித்துக்கொண்டே இருந்த சிம்பு ஆளையே காணோம் எனத் தேடவிட்டு, இப்போது லண்டனுக்குப் போய்விட்டார். 

வெங்கட் பிரபுவின் `மாநாடு' பட வேலைகளுக்காகவும், தான் இயக்கி நடிக்கவிருக்கும் படத்திற்கான வேலைகளுக்காகவும்தான் `எஸ்.டி’ (நண்பர்களால் அழைக்கப்படும் பெயர்) சிம்பு லண்டன் பறந்திருக்கிறார் என்கிறார்கள் சிலர். `மாநாடு’ கதையை அவ்வளவு சிறப்பாகச் செதுக்குவதற்காக இன்னும் படத்தைத் தொடங்காமல் இருக்கிறாரா வெங்கட் பிரபு என்று பார்த்தால், `ஆர்.கே.நகர்' படத்தை வெளியிடும் பஞ்சாயத்தில் இருக்கிறார். `ஆர்.கே.நகர்' படத்தின் பட்ஜெட்டை விஞ்சும் அளவுக்கான வியாபாரச் சிக்கலில் நொந்துபோய் உட்கார்ந்திருக்கிறார், வெங்கட் பிரபு.

`இல்லைங்க, சிம்புவுக்கான கதை ரெடியா இருக்கு. கூடவே சில பிரச்னைகளும் இருக்கு' என்கிறார், `மாநாடு' படத்தின் முக்கியமான நபர் ஒருவர். பிரச்னை என்னவெனில், படத்தின் பட்ஜெட்தான். படத்துக்கு மொத்தம் 38 கோடி ரூபாய் பட்ஜெட் எனத் தீர்மானித்திருக்கிறார்கள். இப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தலைகீழாகக் கணக்குப்போட்டாலும், படத்தை முன்கூட்டியே விற்று லாபம் பார்க்கும் வழி இல்லை என்றவுடன், படத்தின் தயாரிப்பு செலவுகளை குறைக்கக் கேட்டிருக்கிறார். (அவருக்கும் ‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’, ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படங்கள் தோல்வி கண்முன் வந்துபோகுமா, இல்லையா!). ஆனால், படம் கண்டிப்பாக தொடங்கப்படும். அந்த நம்பிக்கையில்தான், `மாநாடு' படத்தின் ஹீரோயினாக கல்யாணி ப்ரியதர்ஷன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். வெங்கட் பிரபு தற்போது ஒரு மெகா ஹிட் கொடுத்தால் மட்டுமே, அஜித்துடன் மீண்டும் ஒரு `மங்காத்தா' கூட்டணி அமையும். ஏனெனில், அதற்கான முயற்சிகளிலும் இருக்கிறார், வெங்கட் பிரபு.

சரி, கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருந்த படம் என்னாச்சு?! அந்தப் படத்திற்கும் இப்படியான ஒரு பிரச்னைதான். கெளதம் மேனனின் `எனை நோக்கிப் பாயும் தோட்டா’, `துருவ நட்சத்திரம்’ படங்கள் ரிலீஸுக்கு ரெடியான பிறகுதான் சிம்பு படத்தைத் தொடங்குவார். அதுவரை, ‘விண்ணைத்தாண்டி வருவாயா 2’ பட வேலைகள் எதுவும் நடக்காது என்ற தெளிவு கிடைத்ததும்தான், சம்பந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனம் தனது அடுத்த படத்தின் வேலைகளைத் தொடங்கியிருக்கிறது. தவிர, அந்த நிறுவனம் `விடிவி 2' படத்திற்காக சிம்புவுக்குக் கொடுத்த முன்பணத்தின் அடிப்படையில் வேறு ஓர் இயக்குநரை வைத்து புதிய படம் ஒன்றை எடுக்கும் முயற்சியிலும் தீவிரமாக இருக்கிறது. 

இதற்கிடையே, சிம்பு நடித்து இயக்கவிருக்கும் படத்தின் வேலைகள் முடிந்திருந்தாலும்கூட, இந்தப் படத்தை சிம்புவே தயாரித்தால், ஏற்கெனவே தனது நடிப்பில் வெளியாகி தோல்வியடைந்த `அன்பானவன் அடங்காதவன் அசராதவன்' படத்தின் தயாரிப்பாளர் நஷ்டஈடு கேட்டு நிற்பார் என்பதை அறிந்த சிம்பு, வேறோர் இயக்குநரின் படத்தில் நடித்து ஹிட் கொடுத்த பிறகே தனது படத்தைத் தொடங்கும் முடிவில் இருக்கிறார். தவிர, `நாம் தமிழர் கட்சி' தலைவரும், இயக்குநருமான சீமான் இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருந்த படம் என்ன ஆனது என்பது அனைவரும் அறிந்ததே! 

கார்த்திக் நரேன் - சிம்பு கூட்டணியில் உருவாகவிருக்கும் படத்தின் கதை சிம்புவுக்குப் பிடித்திருந்தும், அப்படத்தின் வேலைகள் தொடங்காமல் இருப்பதற்கான காரணம், படத்தின் தயாரிப்பாளர்தான். சென்டிமென்ட்டான கமர்ஷியல் படங்களைத் தயாரிக்கும் அந்த நிறுவனம், ஏற்கெனவே தயாரித்த படங்களின் சாயலில் கதையை உருவாக்கக் கேட்டிருக்கிறார்கள். அதேமாதிரிதான், ஐக் இயக்கத்தில் மறைந்த நடிகர் எம்.ஆர்.ராதாவின் வாழ்க்கை வரலாறாக உருவாகவிருக்கும் பயோபிக் பட வேலைகளும் ஏதுவான சூழல்கள் அமையாமல் கிடப்பில் இருக்கின்றன. `எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட்' மதனும் சிம்புவுக்கு அட்வான்ஸ் கொடுத்துக் காத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இறுதியாக, ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் `மஃப்டி' கன்னடப் படத்தின் தமிழ் ரீமேக்கில் சிம்பு வில்லனாக நடிக்கவிருப்பதாகச் சொல்கிறார்கள். இந்தப் படத்திற்கு '#STR45' எனக் குறிப்பிட்டிருப்பது எந்த அடிப்படையில் என்பது சிம்புவுக்கு மட்டும்தான் தெரியும். இதெல்லாம் தவிர, தற்போது கரு.பழனியப்பன் சொன்ன ஒரு கதையில் நடிக்க ஓகே சொல்லியிருக்கிறாராம், சிம்பு. இப்படத்துக்குத் தயாரிப்பாளரைத் தேடும் பணியில் இருக்கிறார்கள், சிம்புவின் நண்பர்கள். இந்தத் தகவல் சிம்புவை வைத்துப் படமெடுத்த தயாரிப்பாளர்கள் காதுக்குப் போயிருக்கிறது. இப்படிப் பல சிக்கலில் இருக்கும் சிம்பு, வாக்களிக்கச் சென்னைக்கு வரவில்லை. தம்பி குறளரசனின் திருமணத்திற்கு வருவார் என்று நம்பப்படுகிறது. 

சிம்புவின் வரவு செலவுகளை அவரது அம்மாதான் கவனித்துக்கொண்டிருக்கிறார். மகனை ஷூட்டிங்கிற்கு அனுப்புவதில் இருக்கும் சிரமத்தை அறிந்திருக்கும் அவர், சிம்புவுக்குத் திருமணம் செய்துவைத்தால், வாழ்க்கையை ஒரு நிதானத்தோடு அணுகுவார் என்ற நம்பிக்கையும் கொண்டிருக்கிறார். அதற்கான ஏற்பாடுகளும் ஒரு பக்கம் நடந்துகொண்டிருக்கின்றன.

எது எப்படியோ... சிம்பு தன்னைச் சுற்றி இத்தனைபேரின் கவனத்தையும் பெற்றிருப்பது பெரிய விஷயம். சினிமாவை அவர் நேசிக்கும் அளவுக்கு அவரது ரசிகர்கள் `ஐ ஆம் எ லிட்டில் ஸ்டார்’ காலத்திலிருந்தே நேசிக்கிறார்கள். சிம்பு படங்களின் ஓப்பனிங்கிற்கும், சிம்புவின் மார்க்கெட்டிற்கும் அதுதான் காரணம். லண்டனிலிருந்து திரும்பும்போது ரசிகர்களுக்காகத் தன்னை உற்சாக மனநிலையோடு வைத்துக்கொண்டு, அத்தனை படங்களையும் சிம்பு முடித்துக் கொடுத்தால் சரி.

சிம்புவுக்கு ரசிகர்களே வினா, ரசிகர்களே விடை!

அலாவுதின் ஹுசைன்