Published:Updated:

``மீனாட்சி அருளுடன் ஓய்வு பெறுகிறேன்!'' - `பட்டிமன்றம்' ராஜா

வே.கிருஷ்ணவேணி

7,000-க்கும் மேற்பட்ட மேடைகளில் பேசியிருக்கும் சிறப்புக்கு உரியவர் 'பட்டிமன்றம்' ராஜா என்பது குறிப்பிடத்தக்கது. வங்கிப் பணியை நிறைவு செய்திருக்கும் ராஜாவை நாமும் வாழ்த்துவோம்.  

``மீனாட்சி அருளுடன் ஓய்வு பெறுகிறேன்!'' - `பட்டிமன்றம்' ராஜா
``மீனாட்சி அருளுடன் ஓய்வு பெறுகிறேன்!'' - `பட்டிமன்றம்' ராஜா

2007-ம் ஆண்டு வெளியான 'சிவாஜி' படம் தொடங்கி 'கோ', 'மாப்பிள்ளை', 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா', 'தொடரி', 'காஷ்மோரா' என  20-க்கும் மேற்பட்ட தமிழ்ப் படங்களில் நடித்திருப்பவர் 'பட்டிமன்றம்' ராஜா. வங்கியில் சீனியர் கம்ப்யூட்டர் ஆபரேட்டர் பொறுப்பிலிருந்து இன்றோடு ஓய்வு பெறுகிறார். நீண்டகால வங்கிப் பணியை நிம்மதியாக நிறைவு செய்ததற்காக மதுரை மீனாட்சியம்மனை தரிசிப்பதற்குச் சென்று கொண்டிருந்தவரிடம் பேசினேன். 

''ரொம்ப ரொம்ப திருப்தியா இருக்கு. 1984-ம் ஆண்டு படிப்பு முடித்த கையோடு ஏதாவது நல்ல வேலை கிடைக்காதானுதான் பேங்க் வேலைக்கு வந்தேன். இடையில் எத்தனையோ துறைகளில் எனக்கு வாய்ப்பு இருந்தும், என்னுடைய வங்கிப் பணியை நான் விடவில்லை. கிட்டத்தட்ட 35 ஆண்டுகள் வங்கிப் பணியில் இருந்துவிட்டேன். இப்போது எனக்கு, 59 வயது ஆகிறது. மக்களுடன் மக்களாக வங்கியிலும் பட்டிமன்றப் பேச்சாளராக இத்தனை வருடம் நான் பயணித்ததற்கும் மீனாட்சி அம்மனுக்குத்தான் நான் நன்றி சொல்ல வேண்டும். எந்த ஒரு நல்ல காரியமாக இருந்தாலும் மீனாட்சி அம்மனை வணங்கிவிட்டுத்தான் தொடங்குவேன். இதோ, இத்தனை வருடகாலம் என் உடல் நலத்தைப் பேணிக்காத்த அம்மனை வணங்கத்தான் செல்கிறேன்'' என்று உணர்ச்சிவசப்பட்டவர், 

''உழைக்க ஒரு காலம், ஓய்வு எடுக்க ஒரு காலம் என ஒரு மனிதன் தன் வாழ்க்கையில் ஒவ்வொரு காலத்தையும் தாண்டி வருவான். அப்படி எனக்கு உழைப்பதற்கான வயதையும் ஓய்வுக்கான வயதையும் சரியான நேரத்தில் செலவிடுகிறேன். வங்கிப் பணியைத் தவிர வேறு எந்தப் பணியில் இருந்திருந்தாலும் இவ்வளவு நிம்மதியாகப் பயணப்பட்டிருப்பேனா என்று தெரியவில்லை. இடையில், நடிப்பு, பேச்சு என எனக்காகச் சலுகைகள் தந்த வங்கிக்கு எப்போதும் நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். சிலருக்கு, ஓய்வு பெறுவதற்குள் உடல் நலம், குடும்பப் பிரச்னை என எத்தனையோ மன உளைச்சல்களைப் பெற்றுவிடுவார்கள். ஓய்வுக்கு முன்பாகவே சில பேர் வி.ஆர்.எஸ் வாங்குவார்கள். இப்படி எந்தப் பிரச்னைகளும் இல்லாமல் பணிபுரிந்த இடமும் சரி, குடும்பமும் சரி எனக்கு ஆதரவாக இருந்திருக்கிறார்கள். அனைவருக்கும் என் நன்றிகள்'' என்றவரிடம், "இனி எந்த ஒரு தடையும் இல்லாமல் நடிக்கலாமே. நடிப்பையும் பேச்சையும் தொடர்வீர்களா..?'' எனக் கேட்டதற்கு, 

''நிச்சயமாக... பேச்சுதான் எனக்கு உயிர் மூச்சு. அதை விட முடியாது. கண்டிப்பாக என்னைப் பட்டிமன்ற மேடைகளில் தொடர்ந்து பார்க்கலாம். இன்று இரவு மீட்டிங் விஷயமாக மும்பைக்குப் புறப்படுறேன். இரண்டு நாள்கள் பயணம் முடித்த பிறகுதான், அடுத்தகட்ட விஷயங்கள் பற்றிப் பேசி முடிவெடுக்க வேண்டும்'' என்கிறார்.

சாலமன் பாப்பையாவுடன் இணைந்து சன் டிவிக்காகப் பட்டிமன்றங்களில் பேசிவரும் இவர், 'வாங்க பேசலாம்' நிகழ்ச்சியில் பாரதி பாஸ்கருடன் இணைந்து அந்தந்த நாள்களுக்கான சிந்தனைகள் பற்றிப் பேசியவர். தன் நகைச்சுவையான பேச்சின் இடையே சமூக சிந்தனைக் கருத்துகளைப் பேசுவது ராஜாவின் பலம். பாரதி பாஸ்கரும் ராஜாவும் எப்போதும் எதிரெதிர் அணியில் இருப்பவர்கள். ஒவ்வொருவரும் போட்டிபோட்டுக் கொண்டு பேசும்போதுதான் கைத்தட்டலால் அரங்கே அதிரும். 7,000-க்கும் மேற்பட்ட மேடைகளில் பேசியிருக்கும் சிறப்புக்கு உரியவர் 'பட்டிமன்றம்' ராஜா என்பது குறிப்பிடத்தக்கது. 

வங்கிப் பணியை நிறைவு செய்திருக்கும் ராஜாவை நாமும் வாழ்த்துவோம்.  

வே.கிருஷ்ணவேணி

வெள்ளித்திரை, சின்னத்திரை, பெண்கள் முன்னேற்றம், தன்னம்பிக்கை கட்டுரைகளில் ஆர்வம். விகடன் பிரசுரத்தின் 'கைக்கொடுக்கும் கிராஃப்ட்' புத்தக ஆசிரியர். கம்பன் கழக 'இலக்கு' அமைப்பின் 'அறிவு நிதி விருது', 'WOMEN ENTREPRENEURS WELFARE ASSOCIATION' 2016 'BEST MEDIA PERSON AWARD' பெற்றிருக்கிறார்.