சத்யம் தியேட்டரை வாங்குகிறதா பிவிஆர்! | sathyam, சத்யம், சத்யம் சினிமாஸ், பி.வி.ஆர்.

வெளியிடப்பட்ட நேரம்: 19:53 (13/01/2015)

கடைசி தொடர்பு:19:53 (13/01/2015)

சத்யம் தியேட்டரை வாங்குகிறதா பிவிஆர்!

இந்தியாவின் மல்டி ப்ளக்ஸ் தியேட்டர் நிறுவனங்களில் ஒன்றான பிவிஆர் குழுமம் சென்னையின் எஸ்பிஐ சினிமாஸ் நிறுவனத்தை வாங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னையில் மட்டும் இயங்கி வரும் எஸ்பிஐ சினிமாஸ் நிறுவனத்தை பிவிஆர் குழுமம் 700-1000 கோடி ரூபாய்க்கு வாங்க இருப்பதாக கூறப்படுகிறது. 
 
சென்னையில் சத்யம், எஸ்கேப், லக்ஸ், திசினிமாஸ் மற்றும் எஸ்2 ஆகிய ஐந்து மல்டி ப்ளக்ஸில் 40க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் திரைப்படங்களை திரையிட்டு வருகிறது.இது தவிர சினிமா வர்த்தகம் மற்றும் சினிமா தயாரிப்பு தொழிலும் எஸ்பிஐ நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
 
எஸ்பிஐ சினிமாஸ் கடந்த வருடம் 189 கோடி ரூபாய் வருமாணத்தை பதிவு செய்துள்ளது. இது தவிர ஒரே நகரத்தில் நன்கு செயல்பட்டு வரும் மல்டி ப்ளக்ஸாக உள்ளது என்பதால் இந்தியா முழுவதும் 43 நகரங்களில் 102 இடங்களில் 454 திரையரங்குகளை நடத்தி வரும் பிவிஆர் குழுமத்துக்கு இந்த இணைப்பு நல்ல வாய்ப்பாக அமையும் என்று கூறப்படுகிறது.
 
 
ஆனால் பிவிஆர் குழுமம் இது குறித்த எந்த தகவலையும் இன்னும் அதிகாரப்பூர்வமாக அளிக்கவில்லை, இது குறித்து கருத்து தெரிவித்துள்ள எஸ்பிஐ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கிரண் ரெட்டி '' நாங்கள் முதலீட்டை அதிகரிக்கும் திட்டத்தில் இருக்கிறோம் ஆனால் அது குறித்து எந்த முடிவும் இன்னமும் உறுதி செய்யப்படவில்லை. நிறுவனத்தை விற்பது என்பது ஒரு எண்ணம் மட்டும் தான் ஆனால் அது குறித்த எந்த கருத்தும் தற்போதைய நிலையில் இல்லை என்று பதிலளித்துள்ளார்.
 
ஏற்கெனவே சென்ற வருட இறுதியில் கார்னிவல் சினிமா மற்றும் ரிலையன்ஸின் பிக் சினிமா இணைப்பு நடந்தது குறிப்பிடத்தக்கது. இந்த இணைப்பு நடக்கும் பட்சத்தில் பிவிஆர் குழுமத்தின் மிகப்பெரிய இணைப்பாக இது இருக்கும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்