வெளியிடப்பட்ட நேரம்: 13:05 (02/06/2015)

கடைசி தொடர்பு:10:06 (02/06/2016)

ஆயிரம் படங்களை கடந்த அபூர்வ ஞானி! இளையராஜா பிறந்தநாள் சிறப்பு கட்டுரை!

மிழ் சினிமாவின் இசை என்னும் நாடிக்கு உயிர் கொடுத்தவர்களில் முக்கியமானவர் இசைஞானி இளையராஜாவும் ஒருவர்.

ஜூன் 2ம் தேதி 1943ம் ஆண்டு தேனி மாவட்டத்தில் உள்ள பண்ணைப்புரத்தில் பிறந்தார். இவருடைய இயற்பெயர் ராசய்யா. அப்பா ராமசாமி, தாயார் சின்னத்தாயம்மாள். மனைவி ஜீவா. மூன்று பிள்ளைகள் கார்த்திகேயன், யுவன் ஷங்கர், மற்றும் பவதாரிணி. சின்ன வயதிலேயே ஆர்மோனியம், கிடார் வாசிப்பதில் கைதேர்ந்தவர். 1961ம் வருடம் முதல், 1968ம் ஆண்டு வரை சகோதர்களான பாவலர் வரதராஜன், பாஸ்கரன் மற்றும் கங்கை அமரன் ஆகியோருடன் ஊர் ஊராக சென்று நாடகம் நடத்தி வந்தார்கள்.

ஐந்தாயிரம் பாடல்களுக்கு மேல் இசையமைத்தவர், ஆயிரம் படங்களைக் கடந்து இசையமைத்த மேதை. அவர் ஒரு நல்ல இசையமைப்பாளர் யாவரும் அறிந்ததே. ஆனால் அவர் ஒரு எழுத்தாளர் என்பது இப்போது இருக்கும் இளைய சமுதாயத்திற்கு அவ்வளவாக தெரிய வாய்ப்பில்லை. சங்கீதக் கனவுகள், வெட்ட வெளிதனில் கொட்டிக் கிடக்குது, வழித்துணை, துளி கடல், ஞான கங்கா, பால் நிலாப்பாதை உண்மைக்குத் திரை ஏது?, யாருக்கு யார் எழுதுவது?, என் நரம்பு வீணை, மேலும் நாத வெளியினிலே என்னும் புத்தகத்தில், வெட்ட வெளிதனில் கொட்டிக் கிடக்குது, சங்கீதக் கனவுகள், வழித்துணை, இளையராஜாவின் சிந்தனைகள், துளி கடல் ஆகிய புத்தகங்களின் தொகுப்பாக இது அமைந்தது, பள்ளி எழுச்சி பாவைப் பாடல்கள் மற்றும் இளையராஜாவின் சிந்தனைகள் உள்ளிட்ட புத்தகங்களை எழுதியுள்ளார்.

கலைமாமணி விருது, லதா மங்கேஷ்கர் விருது, கேரள அரசின் விருது, டாக்டர் பட்டம், பத்ம பூஷன் விருது, என பல விருதுகளை பெற்றவர். லண்டன் ராயல் ஃபில்ஹார்மானிக் ஆர்க்கெஸ்ட்ராவில் சிம்பொனிக்கு இசையமைத்து ஆசிய கண்டத்தின் முதல் இசையமைப்பாளர் என்ற சிறப்பை 1993 ஆம் ஆண்டு பெற்றார். ’பஞ்சமுகி’ என்ற கருநாடக இசை ராகம் இளையராஜாவால் உருவாக்காப்பட்டது.

இளையராஜா பாடல்கள் என்றாலே ஆர்மோனியம் துவங்கி ஐபோன் வரை இல்லாமல் இருக்கவே முடியாது. அதில் ‘அந்திமழை பொழிகிறது ஒவ்வொரு துளியிலும் உன்முகம் தெரிகிறது’ என்ற பாடலில் பார்வையில்லாதவருக்கு எப்படி ஐயா ஒவ்வொரு துளியிலும் முகம் தெரியும் என சின்ன சர்ச்சைகள் எழுந்தது கூட ராஜாவின் பாடல்களுக்கே . ஆமாம் எப்படி தெரியும். அதை சொன்னவன் மூடன் என்றால். அதை ஏற்றுக்கொண்டு இசையமைத்தவன் நான் என்றும் கவிதைக்கு ஏது உண்மை, பொய் என்றாகிப் போய் பாடல் இப்போது வரை ஹிட் ரகமாக மாறியது வேறு கதை.

இளையராஜாவின் சிறப்பே அவரது பாடல்களில் ஆலாபனை சேர்ப்பதுதான். அதிலும் ஆலாபனைக்கு யாரை வேண்டுமானாலும் பயன் படுத்தாமல் குறிப்பிட்ட ஒரு சிலரை மட்டுமே பயன்படுத்துவார். எடுத்துக்காட்டு: ராஜபார்வை படத்தின் இந்த அந்திமழை பொழிகிறது பாடலை கூட பார்க்கலாமே, எஸ்.பி.பி , எஸ்.ஜானகியின் குரல்களுடன் ஒலிக்கும் ஒரு இனிய ஆலாபனை இளையராஜாவின் கர்நாடக சங்கீத குரு திரு டி.வி.கோபாலகிருஷ்ணனுடையது என்பதுதான் சிறப்பு. ராஜா மேல் கொண்ட அன்பினால் சில பாடல்களில் மட்டும் இவர் ஆலாபனை செய்திருப்பார்.

பெண் குரல்கள் ஒரு படத்திற்கு ஒரு பாடலே அரிதாக இருக்கும் 80களில் தைரியமாக ஒரு படத்தில் மூன்று பெண் குரல்களில் பாடல்கள் வைத்திருப்பார். 1988ம் ஆண்டு வெளியான ’அக்னி நட்சத்திரம்’ படத்தில் ஒரு பூங்காவனம், நின்னுக்கோரி, ரோஜாப்பூ என இம்மூன்றும் பெண் குரல்களில் மட்டுமே அமைந்தவை. கோடைகாலத்தில் நடந்த இந்த படத்தின் பாடல் பதிவின் போது ’தூங்காத விழிகள் ரெண்டு’ பாடல் பாடிய கே.ஜே.ஏசுதாசும், ஜானகியும் கேலியே செய்துள்ளனர். சுட்டெரிக்கும் வெயிலில் அமிர்தவர்ஷினி ராகமா, மழை வரவில்லை என்றால் நாங்கள் பொறுப்பல்ல என கூறிவிட்டு பாடல் பதிவு முடிந்து வெளியேறிய போது இன்ப அதிர்ச்சியாக மழை கொட்டியுள்ளது. இதை எஸ்.ஜானகி ஒரு சந்திப்பில் கூறினார்.

ஏதார்த்தமாக மழை பெய்தாலும் கூட ஏன் கோடை காலத்தில் எதிர்பாரா விதமாக இப்படி கொட்ட வேண்டும் என அனைவரும் வியந்தது வேறு கதை. முதன்முதலில் தமிழில் கணினி முறை இசையை ‘புன்னகை மன்னன்’ படம் மூலம் கொண்டு வந்தவர் இளையராஜாவே. இளையராஜாவின் பாடலான முதல் மரியாதை பட பாடல் சீனாவின் ரேடியோ ஒன்றில் சிறந்த பாடலாக தேர்வானது. இன்னமும் இசையை பயிலும் மாணவர்கள் கூட இசை ஆய்விற்காக ராஜாவின் பாடல்களை எடுக்க சற்றே தயக்கம் காட்டி வருகின்றனர். காரணம் அவரது பாடல்கள் இன்னமும் இசை ஜாம்பான்களுக்கே புரியாத ரகமாய் உள்ளது.

அவருடைய இசை வலிமைக்கு சான்றாக சமீபத்தில் துவங்கப்பட்ட அவரது முகநூல் பக்கத்திற்கு 12 லட்சத்திற்கும் மேலான லைக்குகள் குவிந்துவருகின்றன. இத்தனை வருடங்கள் கழித்துதான் தனது இசைக்கு உரிமை கோரியுள்ளார். எனினும் இசைஞானியின் பாடல்களை நிராகரித்து விட்டு எந்த டிவிக்களோ, ரேடியோக்களோ தொடர்ந்து நடத்துவது என்பது மிக அரிது என்பதே இளையராவிற்கு கிடைத்திற்கும் மிகப்பெரிய வெற்றி எனலாம்.

இசைஞானிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.

- ஷாலினி நியூட்டன் -

 

 இளையராஜா பிறந்த தின சிறப்பு ஆல்பத்திற்கு:  http://bit.ly/1KAh0T4

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்