Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பேய்களைத் தொடர்ந்து தமிழ்சினிமாவைப் பிடித்தாட்டும் புதிய விசயம்.

மிழ் சினிமாவைப் பொறுத்தவரை தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் 'பின்பற்றுதல்' என்பதை இறுக்கிப் பிடித்துக்கொள்வார்கள். காமெடிப் பின்னணியில் ஒரு படம் வெற்றி பெற்று விட்டால் தொடர்ந்து காமெடிப் படங்களையே பின்தொடர்வதும், கிராமியப் பின்னணியில் ஒரு படம் வெற்றி பெற்றால் அதே மண்வாசனைப் படங்களைப் பின்தொடர்வதும் தொடர்ந்து நடந்து வந்தன. இடையில் இந்த முயற்சிகளுக்குப் பிரேக் போட்டது பேய்.

பிறகென்ன? தமிழ் சினிமாவுக்குப் பேய் பிடித்தது. யாரும் கண்டிராத காதல் பேய், காமப்பேய், பணப்பேய், பாசப்பேய்... என அத்தனை ரக பேய்க்கதைகளையும் அடித்துத் துவைத்தார்கள்.

இனி... 'இரண்டாம் பாகம்' என்ற அஸ்திரத்தைக் கையிலெடுத்திருக்கிறது தமிழ் சினிமா. 'நான் அவன் இல்லை', 'அமைதிப்படை', 'பில்லா', 'சிங்கம்', 'காஞ்சனா' என அவ்வப்போது வெளிவந்துகொண்டிருந்த 'பார்ட் 2' படங்களின் மோகம் சமீபகாலமாக அதிகமாகிவிட்டது.

சர்ச்சைகளையும், பல்வேறு பிரச்னைகளையும் சந்தித்த கமல்ஹாசனின் 'விஸ்வரூபம்' படத்தின் இரண்டாம் பாகம் ரெடியாகி, ரிலீஸுக்குக் காத்துக்கொண்டிருக்கிறது. தனுஷ் நடிப்பில் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இயக்கிய 'வேலையில்லா பட்டதாரி' படம் வெற்றிபெற்ற சூட்டோடு, இரண்டாம் பாகத்தினையும் ஆரம்பித்துவிட்டார்கள். அதே டீம், அதே வேகத்துடன் கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை நெருங்கியிருக்கிறது.

காமெடி கொஞ்சம், திகில் கொஞ்சமுமாய் கலந்துகட்டி அடித்த 'அரண்மனை' படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பும் இறுதிக்கட்டத்தில். சுந்தர் சி இயக்கும் இந்தப் படத்தில் சித்தார்த், த்ரிஷா, ஹன்சிகா, பூனம் பஜ்வா, சூரி என நட்சத்திரப் பட்டாளம் பெரிது.

விஷாலுக்கு 'திமிரு', சிம்புவுக்கு 'காளை' என இரு ஆக்‌ஷன் பேக்கேஜ் படங்களைக் கொடுத்த இயக்குநர் தருண்கோபி பிறகு நடிகராகி விட்டார். இப்போது அவரே நடித்து, இயக்கும் 'வெறி' படம், இதற்கு முன்பு இயக்கிய 'திமிரு' படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகிறதாம். 2011-ல் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் 'கோ'. ஜீவா, அஜ்மல், கார்த்திகா ஆகியோர் நடித்த இந்தப் படத்தின் இரண்டாம் பாகமும் இப்போது தயாராகிக்கொண்டிருக்கிறது. ஆனால், இரண்டாம் பாகத்தில் நாயகனாக நடிப்பவர் சமீபத்தில் 'தேசிய விருது' பெற்ற பாபி சிம்ஹா. 'ஜித்தன்' படத்தின் இரண்டாம் பாகமும் ஆன் தி வே!. 

இது தவிர, ஷங்கரின் இயக்கத்தில் 'எந்திரன் 2' , லிங்குசாமி இயக்கத்தில் அடுத்தடுத்து வளரவிருக்கிறது 'சண்டக்கோழி 2' மற்றும் 'பையா 2'.  'டார்லிங் 2' படத்தின் கதை விவாதம் நடந்து கொண்டிருக்கிறது போன்ற செய்தியும், உருவாக்கும் முடிவில் இருப்பதாக 'இந்தியன் 2', 'பருத்திவீரன் 2', 'மங்காத்தா 2' என  பட்டியல் தொடர்கிறது.

சமீபத்தில் வெளிவந்த படங்களின் இரண்டாம் பாகத்தையே எடுக்கும்போது, அந்தக் காலத்திலேயே ஹிட் அடித்த படங்களின் இரண்டாம் பாகம் வராமல் இருக்குமா? கார்த்திக் நடிப்பில் மிகப்பெரிய வெற்றிபெற்ற கேங்ஸ்டர் மூவியான 'அமரன்' படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிறது. முதல் பாகத்தை இயக்கிய ராஜேஷ்வரே இந்தப் படத்தையும் இயக்குகிறார். நடிகர் கார்த்திக்கை 'வெத்தல போட்ட ஷோக்குல...' பாடல் மூலமாகப் பின்னணிப் பாடகராகவும் அறிமுகப்படுத்தியவர், 'அமரன் 2' படத்திலும் கார்த்திக்கைப் பாடவைக்கப் போகிறாராம்.

ராஜ்கிரண் மற்றும் மீனா நடிப்பில் 1991-ல் வெளிவந்த 'என் ராசாவின் மனசிலே' படத்தின் இரண்டாம் பாகம் தயாராகவிருக்கிறது. தயாரிப்பாளராக இருந்த ராஜ்கிரண் ஹீரோவாகவும், 'வைகைப்புயல்' வடிவேலு காமெடியனாகவும் அறிமுகமான படம் இது. வெள்ளி விழா கொண்டாடிய இந்தப் படம் 24 வருடங்களுக்குப் பிறகு 'என் ராசாவின் மனசிலே' என்ற பெயரிலேயே இரண்டாம் பாகமாக உருவாகிறது.

முதல் பாகத்தில் மாயாண்டியும், சோலையம்மாவும் இறந்து விடுவது மாதிரி கதை கையாளப்பட்டிருக்கும். ஒருவேளை அவர்கள் இறந்து போகாமல் இருந்திருந்தால் எப்படி இருக்கும்? என்பதுதான் படத்தின் கதையாம். இரண்டாம் பாகத்திற்கும் இளையராஜாவே இசையமைக்க, முதல் பாகத்தில் நடித்த மீனாவையே நாயகியாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடக்கிறதாம்.

இதுதவிர, விசு எழுதி இயக்கிய 'மணல் கயிறு' படத்தின் இரண்டாம் பாகமும் உருவாகிறது. முதல் பாகத்தில் நடித்த எஸ்.வி.சேகர் தயாரிக்கவிருக்கும் இப்படத்தின் நடிகர், நடிகைகள் தேர்வு தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கிறதாம். 

இப்படி இரண்டாம் பாகத்தோடு நிற்காமல், 'காஞ்சனா 3', 'சிங்கம் 3' படங்களின் மூலமாக மூன்றாம் பாகத்திற்கும் நகர்ந்துகொண்டிருக்கிறது தமிழ் சினிமா!

- கே.ஜி.மணிகண்டன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்