Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'காக்கா முட்டை திரைப்படம் இயக்குநர்களுக்கு பயம் தருகிறது...!'

சென்னையில் 'பனுவல்' புத்தக நிலையத்தினர் நடத்திய 'காக்கா முட்டை' திரைப்படம் குறித்த கலந்துரையாடல் கூட்டத்தில் பெற்றோர்கள், குழந்தைகள், முதியோர்கள், மாணவர்கள் என்று பலர் கலந்து கொண்டனர்.

திரைப்படத்தின் கதை, வசனங்கள், கதாபாத்திர தேர்வுகள், படத்தில் உள்ள அரசியல் என்று 'காக்கா முட்டையை' பற்றி விரிவாக படத்தின் இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான மணிகண்டனிடம் இவர்கள் கலந்துரையாடினர். 

இதில் மூடர்கூடம் பட இயக்குநர் நவீன், எழுத்தாளர் ஷாஜி, நாடகவியலாளர்கள் பிரளயன் மற்றும் ஜெனி ஆகியோரும்  கலந்து கொண்டு பேசினர்.

" 'புகைப்பிடித்தல் புற்றுநோயை உண்டாக்கும்' என்ற வாசகத்தை சின்ன காக்கா முட்டையும், பெரிய காக்கா முட்டையும் மாத்தி மாத்தி சண்டைப் போட்டுக் கொண்டு வாசித்த நிமிடத்தில் இருந்தே படம் மிகவும் பிடித்து விட்டது. வரும் காலத்தில் தயாரிப்பாளர்களிடம் 'காக்கா முட்டை' படத்தை உதாரணமாக சொல்லி, இது போன்ற பல தரமான மாற்று திரைப்படங்களை எடுக்க முடியும் என்ற நம்பிக்கை வந்துள்ளது. 

இனிமேல், நாம் எப்படியான படத்தை எடுக்கப் போகிறோமென 'காக்கா முட்டை' படம் என்னைப் போன்ற வளரும்  பல இயக்குநர்களுக்கு பயத்தை தருகிறது" என்றார் மூடர்கூடம் இயக்குநர் நவீன்.

"கதாபாத்திரங்களுக்கு குறிப்பிட்ட பெயரே இல்லாமல் போனாலும் கூட அந்த கதாபாத்திரங்களை மறக்க முடியாத அளவிற்கு சித்தரித்துள்ளார் மணிகண்டன்" என பிரளயன் கூற "கணவன் சிறையில் இருக்கும் பொழுது, இறுதி வரை அந்த பெண்தான் குடும்பத்தை கண்ணியமாக காப்பாற்றி வருகிறாள்" என பெண்ணியம் சார்ந்து காக்கா முட்டையை ஜெனி பார்க்க, "இந்த படம் சமூகத்தில் பெரிய மாற்றங்களை கொண்டுவராவிட்டாலும் பரவாயில்லை, தமிழ் சினிமாவில் மிகப் பெரிய தாக்கத்தை உண்டாக்கி விட்டது. இம்மாதிரியான படங்களில் சின்ன கதாபாத்திரத்தில் வந்து போனால் கூட மிகவும்  சந்தோஷமாகவும், பெருமையாகவும் இருப்பேன்" என எழுத்தாளரும், நடிகருமான ஷாஜி பேசினார்.

பார்வையாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்துப் பேசிய இயக்குநர் மணிகண்டன், "உசிலம்பட்டிதான் எனக்கு  சொந்த ஊர். அப்பா காவல் துறையில் பணி புரிந்தவர். நான் பள்ளி படிக்கும் பொழுதே அவர் இறந்து விட்டார். கலைத் துறைக்கும் எங்கள் குடும்பத்திற்கும் துளி கூட சம்பந்தம் இல்லை. எங்கள் உறவினர்கள் கூட காவல் துறை, ராணுவம் போன்ற துறைகளில்தான் இருக்காங்க. அப்பா போன பின்னாடி, அம்மா தான் எங்களை படிக்க வச்சு காப்பாத்துனாங்க. 

டிப்ளோமா படிப்பு, ஆர்டிஸ்ட் வேலை, திருமண போட்டோகிராபி என  பயணித்த எனக்கு, 'விண்ட்'  குறும் படம் தான் விருதுகளையும், கவனிப்பையும் வாங்கி தந்துச்சு. இந்த குறும்படத்துக்கு முன்னாடி வரைக்கும் இயக்குநர் ஆகணும்னு நினைக்க கூட இல்லை. 

என் மகனுக்கு பீட்சானா ரொம்ப பிடிக்கும்.ஒரு சமயம் அவன் பீட்சா கேட்கும் பொழுது என் கையில காசில்லை. ஒரு வழியா வாங்கி தந்துட்டேன். அப்போ யோசிச்சேன் இல்லாதவங்க இந்த பீட்சாவை எப்படி பாக்குறாங்கன்னு. அப்போ இருந்து வளர்ந்ததுதான் காக்கா முட்டை. படத்துல வரக்கூடிய அப்பா, அம்மா, காக்கா முட்டைகள், பழரசம் என்று அனைத்து கதாபாத்திரங்களும் என்னோட வாழ்கையில இருந்து எடுத்ததுதான்.

'எனக்கு அப்பா வேணாம். பீட்சாதா வேணும்' 'புது சட்டை போட்டவன்கிட்ட பணம் இருக்கும்' 'இது யாரு உன்னோட தம்பியா' 'இல்லாதவுங்க எடத்துல வந்து இருக்குறவுங்க கடையை போடுறது' என படத்தோட பல அரசியலான, கூர்மையான, உள்ளீடான வசனங்கள் என நீங்கள் குறிப்பிட்டவை எல்லாம் என் நண்பர்களோட வாழ்வியல்கள், அனுபவங்கள், இந்த சமூகத்துல இருந்து எடுத்ததுதான்.

அதுக்கு பின்னாடி ரெண்டு, மூணு தயாரிப்பாளர்களிடம் காக்கா முட்டை கதை ஒப்புதல் ஆகி அட்வான்ஸ் வரைக்கும் போய், கதையில மாறுதல் சொன்னதுனால பணத்தை திரும்ப கொடுத்துட்டேன். மூணு வருஷம் எந்த வாய்ப்பும் கிடைக்கல. இதுக்கு நடுவுல குடும்ப பிரச்னைகள், பண பிரச்னைகள் வேற.

என்னோட குறும்படத்தைப் பார்த்த வெற்றிமாறன், தனுஷ் ரெண்டு பேரும் காக்கா முட்டை கதையைக் கேட்டு தயாரிக்கிறதா சொல்லிட் டாங்க. முழு சுதந்திரமும் கொடுத்தாங்க. இந்த படம் எடுக்குறதுக்கு முன்னாடி வரை, கூவ நதியோர மக்களை நானும் தப்பான நோக்கத்துலதான் பார்த்தேன். ஆனால், அவுங்க கூட பேசி பழகி, தங்கி ,'காக்கா முட்டை' எடுத்தது எல்லாம் என் தப்பான எண்ணத்தை சுத்தமா மாத்திடுச்சு. அவுங்களோட நிலைமைக்கு நாமளும் ஒரு காரணம்தான், ஏழ்மையை காசாக்க கூடாதுன்னு தோணுச்சு. 

காக்க முட்டைகளா நடிச்ச பசங்களோட படிப்பு செலவு, குடும்ப செலவ எங்க தயாரிப்பு நிறுவனமே செஞ்சு தரப் போறாங்க. அவுங்கள மாதிரி இன்னும் நிறைய மக்கள் இருக்காங்க, அவுங்களுக்கு இருக்கறவுங்க உதவலாம். ஒருத்தனோட வெளித்தோற்றத்தை வச்சு அவன மதிப்பிட கூடாதுன்னு காக்க முட்டை எனக்கு சொல்லி தந்துருச்சு" என அனுபவங்களை பகிர்ந்து கொண்டார் காக்கா முட்டைகளை பொறித்த மணிகண்டன்.      

விருதுகள் வாங்கிய படம், வெற்றி பெற்ற படம் என்று தொலைகாட்சிகளில் பண்டிகை தினங்களில் மட்டும், ஒளிபரப்பப்படும் படத்தை பற்றிய விஷயங்கள், இயக்குநரின் நேர்காணல்கள் என ஒருவித சினிமா பிரமிப்பைத் தாண்டி, இப்படி எளிமையாக பொது மக்களிடம் நேரடியாக அமர்ந்து, மக்கள் படத்தை பார்த்த விதங்கள், அவர்களின் ரசனைகள், விமர்சனங்ளைக் கேட்டு அதற்கு இயக்குநர் பதில் அளித்தது, கலைத் துறையைச் சார்ந்தவர்களும் படத்தை எப்படி பார்த்தார்கள் என்று பொதுமக்களோடு சேர்ந்து அவர்கள் பேசியது என மிக வித்தியாசமாக இந்த கூட்டம் நடந்தது. 

சினிமாவை பொழுதுபோக்கு என்று பாராமல் அதில் உள்ள அரசியல்கள், சமூக பிரச்னைகள், மக்களின் வாழ்வியல்கள், அதற்கான தீர்வுகள் என மக்களும், திரைத்துறையினரும் ஒரே இடத்தில் இப்படி நேரடியாக உட்கார்ந்து பேசி ஆலோசிப்பது மிகவும் அரிதான, ஆக்கபூர்வமான நிகழ்வாகும்.   

- கு.முத்துராஜா

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்