Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

புலி இசை விழா சுவாரஸ்யங்களின் முழு தொகுப்பும் கலங்கிய விஜய்யும்!

புலி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மகாபலிபுரத்தில் நடந்தது.இந்த விழாவில் நடிகர் விஜய், நடிகைகள் ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, ஸ்ரீதேவி கபூர், அட்டக்கத்தி நந்திதா, இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத், இயக்குனர் சிம்பு தேவன் உள்ளிட்ட படக்குழுவினரும், சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர்கள்  எஸ்.ஏ.சந்திரசேகரன், டி.ராஜேந்தர், தரணி, எஸ்.ஜே.சூர்யா, நடிகர்கள் ஜீவா, தம்பி ராமையா, விஜய் சேதுபதி தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

விழாவிற்கு விஜய் முதல் ஆளாக வந்திருந்து, தன்னுடைய தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் முதல் அனைவரையும் அன்புடன் வரவேற்றார். ஆடியோ வெளியீட்டு விழாவில் புலி படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்களுக்கு நடனக்கலைஞர்கள் நடனம் ஆடி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினர். பின்னர் விழாவுக்கு வந்திருந்த சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் மேடையில் ஏறி படத்தை வாழ்த்திப் பேசினார்கள். 

 டி.ராஜேந்தர் பேசும்போது,
‘‘ விஜய் ஒரு உண்மையான ரசிகன். அவரைப் பிடிக்கும், அவரின் ராசிப்படி, நட்சத்திரப்படி அதனால் தான் இருக்கிறார் நட்சத்திரமாக, அதனால் பிடிக்கும். தலைக்கனம் இல்லா இலக்கணம் தான் விஜய்.

விஜய் ஒரு உண்மையான தமிழன். என்னுடைய மகன் சிம்பு வேறொரு நடிகரின் ரசிகன் என்று தெரிந்தும் தனது சகோதரனாக நினைத்து அவனுடைய படம் வெளிவர உதவி செய்துள்ளார். அவரது உதவியை நான் எப்போதும் மறக்கமாட்டேன். நீ பேசமாட்ட வசனங்கள் கத்தி, நீ நடிச்ச படம் பேரு கத்தி, இதுக்குத்தான் ரசிகர்கள் இருக்காங்க உன்ன சுத்தி தொடர்ந்து, யுக்தி, சக்தி, பக்தி என்று தனது  பஞ்ச் டயலாக்குகளை வரிசையாகக்கொட்டி வாழ்த்தினார்.

அவர் பேசிய வசனங்களையெல்லாம்  மேடைக்கு கீழே அமர்ந்து இருந்த விஜய் பொறுமையுடன் கேட்டுக் கொண்டிருந்தார். ஒருகட்டத்தில் டி.ராஜேந்தரின் வசனங்களில் அனல் பறக்கவே, விஜய் உட்கார முடியாமல் உற்சாகத்தில்  நேராக மேடையேறிச் சென்று டி.ராஜேந்தரை கட்டி அணைத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். பின்னர் அவருக்கு சால்வை போட்டு மரியாதை செலுத்தினார்.

இருப்பினும், டி.ராஜேந்தர் தொடர்ந்து விஜய்யை பற்றி புகழ்ந்து பேசிக்கொண்டே இருந்தார். அவரது பேச்சு சுமார் 15 நிமிடங்கள் வரை நீடித்தது. அவரின் ஒவ்வொரு  பஞ்ச் வசனங்களுக்கும் ரசிகர்கள் விசில் அடித்தும், ஆரவாரம் செய்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.இதனால் விழா களைகட்டியது.

எஸ்.ஜே.சூர்யா பேசும்போது, “ புலிக்கு அடைமொழியெல்லாம் தேவையில்லை. இப்படி புலி , அப்படி புலியெல்லாம் இல்லை. புலி அவ்வளவு தான். நன்றி என்ற வார்த்தையின் மறுபெயர் விஜய் மட்டும் தான். விரைவில் குஷி 2 பார்க்கலாம்.

தம்பிராமையா, “ புலி படம் வரலாற்றுப் படமே, புராணப்படமோ இல்லை. புலி, சூப்பர்மேன் போன்ற ஒரு கதை.

பேரரசு, வாலு படத்திற்கு உதவியவர் இந்த புலி. புலி வாலைப் பிடித்த கதை தான். ஆனால் இந்தப் புலி வாலுக்கு மட்டுமில்லை தலைக்கும் நல்லது தான் நினைக்கும். அப்துல் கலாம் மாதிரி இவருக்கு பதவி தேவையில்லை. பதவியில்லாமலே இளைஞர்களை வழிநடத்துவார். 

அடுத்தடுத்துப் பேசிய தரணி என் எல்லா வெற்றிக்கும் விஜய் தான் காரணம் என்று பேச, தொடர்ந்து பேசிய ஜீவா என் நண்பன் விஜய். ரசிகர்கள் அனைவரும் சமுக வளைதளங்களில் சண்டைப் போட்டுக்கொள்ள வேண்டாம். என்று பேசினார்.

அரங்கம் நிறைந்த அதிர்வு! காரணம் விஜய்!


புலி படத்தின் பாடல்கள் வெளியீட்டுவிழாவில் பேசிய விஜய், அந்தப்படத்தில் பணியாற்றிய எல்லோரையும் அதிகமாகப் புகழ்ந்து பேசினார். கதாநாயகிகளைப் பற்றிப்பேசும்போது, இந்தப்படத்தில் என்னோடு இரண்டுபெண்புலிகளும் நடித்திருக்கிறார்கள்.

ஒன்று புலிக்குப் பிறந்தது பூனையாகாது என்பதை நிருபித்துக்கொண்டிருக்கும் உலகநாயகன் கமல் மகள் ஸ்ருதிஹாசன். இன்னொன்று மும்பை நமக்கு வழங்கிய இன்னொருகுஷ்பு ஹன்சிகா. இவர்களோடு நந்திதாவும் நடித்திருக்கிறார்.

அவருடைய கேரியரின் முக்கியமான கட்டத்தில் இப்படி ஒரு சின்னவேடத்தை ஏற்று நடித்ததற்கு அவருக்கு நன்றி என்று சொன்னவர் அடுத்து ஸ்ரீதேவி பற்றிச் சொல்லும்போது,  இந்தப்படத்தில் முக்கியவேடத்தில் நடித்திருப்பவர், தமிழ்த்திரையிலகிலிருந்து மும்பைக்கும் சென்று கொடிநாட்டியிருக்கும் சிவகாசிமத்தாப்பூ ஸ்ரீதேவி என்றார், அதற்கடுத்து பிரபுவைப் பற்றிப்பேசும்போது, சின்னதம்பியாக நடித்து இப்போது எல்லோரிடமும் அண்ணன்தம்பியாகப் பழகிக்கொண்டிருக்கும் பிரபு என்றார்.

அதற்கடுத்து கன்னடநடிகர் சுதீப்பைப் பற்றி, ஹீரோவா நடிக்கிறவங்க வில்லனா நடிக்க ஒத்துக்கமாட்டாங்க, ஆனால், கன்னடத்தில் சூப்பர்ஸ்டாராக இருக்கும் சுதீப் இந்தப்படத்தில் நெகட்டிவ்ரோலில் நடிக்க ஒப்புக்கொண்டார் என்றார். இதைத் தொடர்ந்து தொழில்நுட்பக்கலைஞர்களைப் பற்றிச் சொல்லத்தொடங்கினார், ஹீரோவாக சதுரங்கவேட்டையாடிய ஒளிப்பதிவாளர் நட்டி, இந்தப்படத்தில் ஒளிப்பதிவில் புலிவேட்டையாடியிருக்கிறார்.

இந்தப்படத்தில் மேலும் இரண்டு ஹீரோக்கள் இருக்கிறார்கள், அவர்கள் கிராபிக்ஸ் செய்த கமலக்கண்ணன் மற்றும் எடிட்டர் ஸ்ரீகர்பிரசாத் ஆகியோர்தாம் என்று பேசினார். இசைமையப்பாளர் பாடலாசிரியர், இயக்குநர் உட்பட எல்லோரையும் தனித்தனியாகச் சொல்லி அவர் பேசியது சம்பந்தப்பட்டவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

உறுமிய விஜய்யும் ரசிகர்களின் ஆரவாரமும்!

விஜய் ரசிகர்களை தன்னுடைய பேச்சால் ஆரவாரப்படுத்தினார். அப்போது அவர் பேசியதாவது, “ ரொம்ப நாளாவே ஒரு சரித்திரப் படத்தில் நடிக்கனும், ஆனா அதே நேரம் கமர்சியல் காட்சிகளோட நடிகனும் என்று நினைத்திருந்தேன்.

பொதுவா பரீட்சை எழுதுறவங்க அதிகமாகவும், மார்க் போடுறவங்க குறைவாகவும் தான் இருப்பாங்க. இங்க பரீட்சை எழுதுறவங்க குறைவாகவும், மார்க் போடுற நீங்க அதிகமாவும் இருக்கீங்க. புலிக்கு எத்தனை மார்க்குனு பரிட்சை எழுதுன நாங்க சொல்ல கூடாது. மார்க் போடுற நீங்க தான் சொல்லனும்.

ஒரு தயாரிப்பாளர் கடன் வாங்கி  பணத்தை போடுறார். எத்தனையோ நபர்கள் உழைக்கிறாங்க. எந்த உழைப்புமே போடாம திருட்டுத் தனமா போனில் எடுத்து இணையத்தில் பரப்பி எங்க எல்லோரையும் குழப்பி, மண்ணை போட்டுப் போய்டுவாங்க.

எனக்காக மட்டும் பேசவில்லை. எல்லா ஹீரோக்களுக்கும் சேர்த்து தான் பேசுறேன். திருட்டுத் தனமா வெளியிடுவது, வயிற்றில் ஆரோக்கியமா வளர்ந்திட்டு வர குழந்தையை சுகப்பிரசவம் ஏற்படுறதுக்கு முன்னாடியே சிசேரியன் பண்ணி சாகடிக்கிற மாதிரி இருக்கு. 

எனக்கு உண்மையா ஒருத்தரை வெறுக்கத் தெரியும். பொய்யா ஒருத்தரை நேசிக்கவே தெரியாது. நமக்குப் பின்னாடி பேசுறத நினைத்து கவலைப் படக்கூடாது. அடுத்த நிமிஷம் நிச்சயமில்லாதது நமது வாழ்க்கை. இருக்குற வரைக்கும் எல்லாரையும் சந்தோஷப் படுத்தனும். எனக்கும் என் ரசிகர்களுக்கும் மத்தவங்களை வாழ வச்சிதான் பழக்கம்.

பொதுவா வெற்றிக்குப் பின்னாடி ஒரு பெண்ணோ ஆணோ தான் இருப்பாங்க. ஆனா என் வெற்றிக்கு பின்னாடி நிறைய அவமானங்கள்தான் இருக்கிறது. அதான் உங்க எல்லாருக்கும் தெரியுமே. பின்னாடி பேசறவங்களை பத்தி எனக்கு கவலை இல்லை. நான் என்னுடைய தோல்வியில் இருந்து நிறைய பாடங்கள் கற்றுக்கொண்டேன்

பில்கேட்ஸ் வாழ்க்கையில் அவரை சுற்றி இருக்குறவங்க அவரை குறை சொல்லிக்கொண்டும், திட்டிக்கொண்டுமே இருப்பார்களாம். அவரும் அந்த குறைகளையெல்லாம் சரிபண்ணிட்டே இருப்பாராம். இன்று உலகத்திலேயே பெரிய தொழிலதிபரா பில்கேட்ஸ் இருக்காரு. அவரை குறை சொன்னவங்க எல்லோரும் அவரின் கம்பெனியில் ஊழியரா இருக்காங்க. நீ என்ன பெரிய பில்கேட்ஸானு தான கேக்குறீங்க. எப்போவோ படிச்சது. ஏன் இதையெல்லாம் உங்களிடம் பேசுகிறேன் என்று தெரியவில்லை.
நியாபகத்துக்கு வர உங்களுடன் பகிர்ந்துகொண்டேன் அவ்வளவுதான்.

கடவுள் முன்னாடி மண்டிப்போட்டா யார் முன்னாலும் எழுந்து நிற்கலாம். நமக்கு தான் எல்லாம் தெரியும். மற்றவர்களுக்கு ஏதும் தெரியாதுனு மட்டும் நினைச்சிடாதீங்க. நமக்கு சொல்லித் தருவதே மற்றவர்கள் தான் என்று பேசினார் விஜய்.

புலி பட இசை வெளியீட்டு விழா ஆல்பத்திற்கு: https://www.vikatan.com/cinema/album.php?&a_id=4565

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!