ஜெயம்ரவிக்குத் தடைபோட்ட தயாரிப்பாளர்கள்சங்கம், அடுத்த சர்ச்சை ஆரம்பமாகிவிட்டதா?

  ஜெயம்ரவி நடித்திருக்கும் தனிஒருவன் படம் நாளை வெளியாகவிருக்கிறது. இந்நிலையில் அந்தப்படம் பற்றிப் பேச பத்திரிகையாளர்சந்திப்புக்கு அழைப்பு விடுத்திருந்தார் ஜெயம்ரவி. மாலை 3 மணிக்கு என்று அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இரண்டுமணியளவில் அந்தச் சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டது. என்ன காரணம்? அண்மையில் தயாரிப்பாளர்கள்சங்கம், ஊடகங்கள் தொடர்பாக ஒரு முடிவெடுத்து தங்களுடைய சங்க உறுபிப்பினர்களுக்குச் சொல்லியிருப்பதாகத் தெரிகிறது.

அதன்படி, பொதிகை, ஜெயா மேக்ஸ் மற்றும் தந்தி ஆகிய தொலைக்காட்சிகளை பட நிகழ்ச்சிகளுக்குக் கூப்பிட்டால் போதும் என்று சொல்லியிருக்கிறார்களாம். இதனால் சன், விஜய் உள்ளிட்ட முன்னணிதொலைக்காட்சிகள் எதையும் நிகழ்ச்சிகளுக்கு அழைக்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாம். ஜெயம்ரவி நடத்தும் பத்திரிகையாளர்சந்திப்புக்கு எல்லாத் தொலைக்காட்சிகளையும் அழைத்திருந்தார்களாம். அப்படிச் செய்யக்கூடாது என்று தயாரிப்பாளர்கள்சங்கத்திலிருந்து அழுத்தம் வந்த காரணத்தினாலேயே இந்தச்சந்திப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.

இதனால், ஒரு படத்தின் கதாநாயகன் தன்னுடைய படம் வெளியாகிற நேரத்தில், அதற்கு விளம்பரம் கொடுக்கும் நோக்கத்தில் ஊடகங்களிடம் பேசுவதை தயாரிப்பாளர்சங்கம் எப்படித் தடுக்கலாம்? என்கிற கேள்வி எழுந்திருக்கிறதாம். ஊடகங்கள் இல்லாமல் படத்தை எப்படி மக்களிடம் கொண்டு சேர்ப்பது? என்கிற கேள்வியும் எழுந்திருக்கிறது.

தயாரிப்பாளர்கள் சங்கத்தின் ஊடகங்கள் பற்றிய இந்த முடிவையொட்டி, உதயநிதி தன்னுடைய டிவிட்டரில், என்னுடைய 'கெத்து' படத்துக்கு விளம்ரபம் செய்ய ஜெயாமேக்ஸ் டிவியில் நேரம் வாங்கித்தருவார்களா? என்று கேட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது. ஜெயம்ரவியின் பத்திரிகையாளர்சந்திப்பு தள்ளிப்போனதையொட்டி, தயாரிப்பாளர்கள்சங்கம் தங்களுடைய உறுப்பினர்களைத் தாண்டி நடிகர்கள் மீதும் கட்டுப்பாடு செலுத்துகிறதா? என்கிற கேள்வி எழுந்திருக்கிறதாம். ஆக அடுத்த சர்ச்சைக்குத் திரையுலகம் தயாராகிவிட்டதுபோல் தெரிகிறது.  

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!