அக். 18ல் நடிகர் சங்கத் தேர்தல்: தேர்தல் ஆணையர் அறிவிப்பு

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் அக்டோபர் 18ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் நடத்தும் அலுவலரும், ஓய்வு பெற்ற நீதிபதியுமான பத்பநாபன் அறிவித்துள்ளார்.
 

தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவராக தற்போது உள்ள சரத்குமாருக்கும், நடிகர் விஷால் தரப்புக்கும் இடையே பிரச்னை இருந்து வரும் நிலையில் நடிகர் சங்கத் தேர்தல் தேதியை பொதுச் செயலாளர் ராதாரவி திடீரென அறிவித்தார். இதற்கு விஷால் தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனிடையே, தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலை தள்ளி வைக்க கோரி நடிகர்கள் விஷால், நாசர், கார்த்தி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். அந்த மனுவில், "தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தேர்தல் வரும் ஜூலை 15ஆம் தேதி புதன் கிழமை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. புதன்கிழமை என்பது வேலை நாள் என்பதால், நடிகர்கள் பலர் ஓட்டுப்போட வருவதில் சிக்கல் ஏற்படும்.

எனவே, நடிகர் சங்கத்தின் தேர்தலை ஜூலை மாதம் 2வது ஞாயிற்றுக் கிழமை நடத்தினால், அனைத்து தரப்பினரும் விடுமுறை நாளில் வந்து ஓட்டு போடுவார்கள். எனவே, விடுமுறை நாளில் இந்த தேர்தலை நடத்த உத்தரவிட வேண்டும். இதற்காக ஜூலை 15ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்ற அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும்.

மேலும், நடிகர் சங்கத்தின் தேர்தலை 2 வழக்கறிஞர் கமிஷனர்கள் மூலம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதையும் ரத்து செய்யவேண்டும். இந்த தேர்தலை, உயர் நீதிமன்றத்தின் ஓய்வுப் பெற்ற நீதிபதி தலைமையில் நடத்த உத்தரவிட வேண்டும்.

அதேநேரம், இந்த தேர்தல் எந்த முறைகேடுகள் நடைபெறாமல், நேர்மையாகவும், வெளிப்படையாகவும் நடைபெற, தேர்தல் நடவடிக்கையை இந்த உயர் நீதிமன்றமே கண்காணிக்க வேண்டும்" என்று கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், நடிகர் சங்கத் தேர்தலுக்கு தடை விதிக்க மறுத்ததோடு, இது தொடர்பாக பதில் அளிக்க நடிகர் சங்க பொதுச் செயலாளர் ராதாரவிக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டிருந்தது. அதன்படி, நடிகர் சங்க பொதுச் செயலாளர் ராதாரவி பதில் மனுவை தாக்கல் செய்தார்.

அதில், நடிகர் சங்கத் தேர்தல் நடத்தும் தேதியை செயற்குழுதான் முடிவு செய்துள்ளது. செயற்குழு முடிவின்படி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் தேதியை மாற்ற வேண்டிதில்லை. 3,500 உறுப்பினர்களில் 3 பேர் மட்டுமே தேர்தல் தேதி, இடத்தை மாற்ற கோரிக்கை வைத்துள்ளனர். ஓய்வு பெற்ற நீதிபதியை நியமித்து தேர்தலை நடத்த வேண்டிய அவசியம் இல்லை. இதனால் விஷால் உள்ளிட்டோர் தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்" என்று கூறியிருந்தார்.

இதைத் தொடர்ந்து, நடிகர் சங்கத் தேர்தல் நடத்த இடைக்கால தடை விதித்த உயர் நீதிமன்றம், ஓய்வு பெற்ற நீதிபதி பத்பநாபனை தேர்தல் நடத்தும் அலுவலராக நியமித்து உத்தரவிட்டது.

இதையடுத்து, தேர்தல் நடத்தும் அலுவலரும், ஓய்வு பெற்ற நீதிபதியுமான பத்பநாபன், சரத்குமார் மற்றும் விஷால் தரப்பு அணியினருடன் ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில், நடிகர் சங்கத் தேர்தல் அக்டோபர் 18ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் நடத்தும் அலுவலர் பத்பநாபன் இன்று அறிவித்துள்ளார்.

சென்னை மயிலாப்பூரில் உள்ள செயின்ட்எபாஸ் பள்ளியில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், நடிகர் சங்க தேர்தலில் 3,139 பேருக்கு வாக்கு அளிக்கும் உரிமை அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!