வெளியிடப்பட்ட நேரம்: 16:36 (11/09/2015)

கடைசி தொடர்பு:16:41 (11/09/2015)

எம்.ஜி.ஆருக்கு துரோகம் செய்கிறாரா ரஜினி! தொடங்கியது அடுத்த பஞ்சாயத்து!

திப்பு சுல்தான் கதையில் ரஜினி நடிக்கக்கூடாது என்று இந்து முன்னணி தலைவர் இராம கோபாலன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

கன்னட தயாரிப்பாளர் எடுக்கும் திப்பு சுல்தான் படத்தில் தமிழ் திரைப்பட நடிகர் ரஜினிகாந்த்தை நடிக்க வைக்க பேசி வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இது தமிழர்களுக்கு செய்யும் அப்பட்டமான அவமானமாகும்.

தமிழ்நாட்டில் மதவெறி தாக்குதல் நடத்தியவர் திப்புசுல்தான். அதற்கு ஏராளமான ஆதாரங்களை திரட்டி புத்தகமாகவும் வெளியிட்டுள்ளோம். இஸ்லாமிய மதவெறியால் தமிழர்களை வேட்டையாடியவரை, சுதந்திர போராட்ட வீரராக சித்தரிக்க நடக்கும் மேலும் ஒரு முயற்சி தான் இது.

தமிழக மக்கள் இன்றும் என்றும் நினைவில் வைத்துப் போற்றும் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்கள் தனது சுயசரிதையான `நான் ஏன் பிறந்தேன்?’ என்ற நூலில், திப்புசுல்தானின் மதவெறி ஆட்சியால் தங்கள் சுயமரியாதையை காப்பாற்றி கொண்டு வாழ  எங்கள் பூர்விகமான கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இருந்த எங்கள் குடும்பம் கேரளா மாநிலம் பாலக்காடு சென்றதை விரிவாக குறிப்பிட்டுள்ளார். 

திப்புசுல்தானை நல்லவனாக சித்தரிக்க நடக்கும் முயற்சி எம்.ஜி.ஆர். அவர்களுக்கு செய்யும் துரோகம். தமிழகத்திற்கு திப்புசுல்தான் செய்த கொடுமைகள் குறித்து ஏராளமான தகவல்களை திப்புசுல்தானே குறிப்பிட்டுள்ளார்.

எனவே, தமிழர்களையும், தமிழ்நாட்டையும் நேசிக்கும் திரைப்படத்துறையினரிடம் ஒரு வேண்டுகோள், திப்புசுல்தானை போன்ற மதவெறி ஆட்சியாளர் பற்றிய திரைப்படத்தில் நடிக்க மாட்டோம் என்பதையும், அப்படியே மாற்று மொழியில் தயாரிக்கப்பட்டாலும் அந்த திரைப்படங்களை தமிழகத்தில் திரையிட மாட்டோம் என்பதையும் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என்று இந்து முன்னணி திரைப்படத்துறையினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க