கத்தியால் புலி படத்துக்கு சிக்கல்!

என் கதையை திருடி கத்தி படத்தை எடுத்துவிட்டார்கள் எனக்கூறி,  நடிகர் விஜய், இயகுநர் ஏ.ஆர். முருகதாஸ் மீது குறும்பட இயக்குநர் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

'தாக பூமி' என்ற குறும்படத்தை இயக்கிய அன்பு ராஜசேகர் என்பவர் தஞ்சாவூர் குற்றவியல் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், '' 'தாக பூமி' என்ற எனது குறும்படத்தின் கதையை திருடி, நடிகர் விஜய் நடித்த கத்தி படத்தை எடுத்துவிட்டார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ். எனவே அவர் மீதும்  நடிகர் விஜய், படத்தின் கேமராமேன் ஜார்ஜ் வில்லியம்ஸ் என மொத்தம் ஏழு பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' எனக் கூறியுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் வரும் அக்டோபர் 15ஆம் தேதி நடிகர் விஜய், இயக்குநர் முருகதாஸ் உள்ளிட்ட ஏழு பேரையும் நேரில் ஆஜாராக வேண்டும் என்று சம்மன் அனுப்பியுள்ளது.

இது குறித்து குறும்படத்தின் இயக்குநர் அன்பு ராஜசேகரிடம் பேசினோம், ''நான் தஞ்சாவூர் மாவட்டம், இளங்காடு கிராமத்தைச் சேர்ந்தவன். எனது குடும்பம் விவசாய குடும்பம். நான் சினிமா மீது கொண்ட ஆர்வத்தால் 2012ஆம் வருடம் டிசம்பர் 24ஆம் தேதி 'தாக பூமி' என்ற குறும்படத்தை இயக்கி தயாரித்தேன். அதில் விவசாயிகள் படும் அவலத்தையும், அவர்கள் தற்கொலை செய்து கொள்வதையும், கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு விவசாய நிலத்தை விற்க கூடாது என்ற கருவையும் அடிப்படையாக கொண்டு எடுத்தேன். 2013ஆம் ஆண்டு நார்வே நாட்டில் நடந்த தமிழ் திரைப்பட விழாவில் இந்தியா சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டு 'தாக பூமி' திரையிடபட்டது. தமிழகத்தில் மாநில அளவில் நடந்த குறும்பட போட்டியில் கலந்து கொண்டு இயக்குநர் பாலுமகேந்திராவால் விருதும் வாங்கியது. 2013ஆம் வருடம் ஜூன் 14ஆம் தேதி யூடியூபில் பதிவேற்றமும் செஞ்சேன். 

அந்த வருடம் மே 30ஆம் தேதி இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் அவருடைய டுவிட்டரில் உதவி இயக்குநராக தன்னிடம் சேர விரும்புபவர்கள் விவரங்களை மின்னஞ்சலுக்கு அனுப்புமாறு கேட்டிருந்தார். நானும் ஜூன் 14ஆம் தேதி 'தாக பூமி' குறும்படத்தையும், என்னுடைய விவரங்களையும் அனுப்பினேன். ஆனால், அவரிடம் இருந்து எந்த தகவலும் இல்லை.

இந்நிலையில், எனது கதையை வைத்து நடிகர் விஜய் நடிக்க கத்தி படத்தை எடுத்து 2014 அக்டோபர் 22ஆம் தேதி ரிலீஸ் செய்தார் முருகதாஸ். இதனால், எனக்கு வாழ்க்கை இருட்டானது போல் இருந்தது. ஆனால், அவர்கள்  வெற்றியை கொண்டாடினார்கள். நான் மீண்டும் முருகதாஸ் மின்னஞ்சலுக்கு தொடர்பு கொண்டும் எந்த பதிலும் இல்லை. ஒரு நல்ல இயக்குநரிடம் உதவி இயக்குநராக சேர்ந்தால் என் சினிமா வாழ்க்கை நல்லா இருக்கும் என நினைத்தேன்.

என் கதை, உழைப்பு, எனக்கு கிடைக்க வேண்டிய வெற்றி என எல்லாவற்றையும் திருடி விட்டார். முருகதாஸ் இப்படி செய்வார் என கனவிலும் நினைக்கவில்லை. என் கதையை வைத்து படம் எடுத்த அவர் தற்போது, இந்தி படம் ஒன்றை இயக்கி கொண்டிருக்கிறார். நடிகர் விஜய் நடித்த புலி படமும் விரைவில் வெளியாக இருக்கிறது. ஆனால், என் வாழ்க்கை மட்டும் இப்போது கேள்வி குறியாக இருக்கிறது. அதனால்தான் அவர்கள் மீது திருட்டு வழக்கு தொடர்ந்துள்ளேன்'' என்றார்

தாக பூமி குறும்பட தரப்பினர் கூறுகையில்  ''கத்தி படத்தின் பிரச்னையில் இதுவரை எங்களுக்கு எந்தவித தீர்வும் கிடைக்கவில்லை. எனவே, தற்போது விஜய் நடித்துள்ள புலி படத்துக்கும், முருகதாஸ் தயாரித்து, விஜய் மில்டன் இயக்கத்தில், விக்ரம் நடித்துள்ள 'பத்து என்னுறதுகுள்ள' படத்துக்கும் நீதிமன்றத்தின் மூலம் தடை வாங்கும் முயற்சியில் இருக்கிறோம்'' என்றனர்.

கே.குணசீலன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!