தமிழக ஆட்டோ டிரைவர் எழுதிய கதைக்கு வெனிஸ் உலகத்திரைப்பட விழாவில் அங்கீகாரம்!

வெனிஸ் திரைப்பட விழாவில் தமிழ்ப் படமான விசாரணைக்கு மனித உரிமைகளை வலியுறுத்தும் படத்துக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் மூலக் கதையை எழுதியவர் கோவையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சந்திரகுமார்.

வெற்றி மாறன் இயக்கத்தில் இன்னும் வெளிவராத தமிழ்த் திரைப்படமான 'விசாரணை' 72வது வெனிஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. இந்த விழாவில்  மனித உரிமையை வலியுறுத்தும் சிறந்த படத்திற்கான விருது விசாரணை படத்திற்குக் கிடைத்தது.

இந்தியச் சிறைகளில் கைதிகள் சந்திக்கும் இன்னல்களை மையமாகக் கொண்டு கதை உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் மூலக்கதையை எழுதியவர் சந்திரகுமார் என்ற ஆட்டோ டிரைவர். கோவையைச் சேர்ந்த சந்திரகுமார் எழுதிய 'லாக்அப்' என்ற நாவலை தழுவித்தான் விசாரணை படம் உருவாக்கப்பட்டுள்ளது.

வெனிஸ் திரைப்பட விழாவில் நேற்று விசாரணை திரைப்படக் குழுவினரின் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் போது ஆட்டோ டிரைவர் சந்திரகுமாரும் கலந்து கொண்டார். அவருடன் வெற்றி மாறன், சமுத்திரக்கனி ஆகியோரும் பங்கேற்றனர்.

இந்த நிகழ்வில் பேசிய வெற்றி மாறன், '' இது ஒரு தனிமனிதரின் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம்தான் என்றாலும் உலகம் முழுக்க  முகமற்றவர்களாகத் திரியும் அனைத்து மக்களுக்குமான படம் '' என்றார். 

ஆட்டோ ஓட்டுநரான சந்திரகுமாருக்கு அஜிதா என்ற மனைவியும் ஜீவா என்ற மகளும் உள்ளனர். சாதாரண ஆட்டோ ஓட்டுநரின் கதைக்கு வெனிஸ் திரைப்பட விழாவில் அங்கீகாரம் கிடைத்ததை அறிந்து சந்திரகுமாரின் நண்பர்கள் மிகுந்த உற்சாகமடைந்துள்ளனர்.

முன்னதாக கடந்த 6ஆம்தேதி அவர் வெனிஸ் திரைப்பட விழாவிற்கு செல்வதற்கு முன், சந்திரகுமாருக்கு பாராட்டு விழா நடத்தி அனுப்பி வைத்தனர். தற்போது விசாரணை படத்துக்கு மனித உரிமையை வலியுறுத்தும் படத்திற்கான விருது கிடைத்ததை அறிந்து அவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!