திரிஷா இல்லனா நயன்தாரா படம் வெளியாவதில் சிக்கல்!

'த்ரிஷா இல்லனா நயன்தாரா' படத்தின் தயாரிப்பாளர் சி.ஜெ.ஜெயக்குமார், ஆனந்த விகடன் தயாரிப்பு நிறுவனத்திற்கு ரூ.75 லட்சம் வரை பாக்கி தர வேண்டியிருக்கிறது. ஆனால் சி.ஜெ.ஜெயக்குமார் தந்த காசோலைகளும் வங்கியில் பணம் இல்லாமல் திரும்பிவிட்டது.

இந்நிலையில், பணம் வேண்டியும், தன் பணத்தை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட 'த்ரிஷா இல்லனா நயன்தாரா' படத்தை வெளியிடவோ, விற்கவோ கூடாது எனவும், ஆனந்த விகடன் தயாரிப்பு நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், 4.6.2015-க்குள் கடன் தொகை செலுத்த சி.ஜெ.ஜெயக்குமார் உறுதியளிக்க வேண்டும் எனவும் இல்லையெனில் 'த்ரிஷா இல்லனா நயன்தாரா' படம் ஜப்தி செய்யப்படும் எனவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

பின்னர் 4.6.2015 ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தது.  கடன் தொகைக்கு சி.ஜெ.ஜெயக்குமார் உரிய உறுதியளிக்கவில்லை. எனவே, இரண்டு வாரத்திற்குள் ரூ.75 லட்சம் பாக்கிக்கு ஈடாக சொத்து தரவேண்டும் என்றும், 'த்ரிஷா இல்லனா நயன்தாரா' படத்தை வெளியிட தடைவிதித்தும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்றம் விதித்த தடை உத்தரவை மீறி இப்படம் செப்டம்பர் 17ம் தேதி வெளியாகும் என்று விளம்பரங்கள்  வெளியாகிவருகின்றன. மேலும் படத்திற்கான புக்கிங்கும் தொடங்கப்பட்டுள்ளது. இவ்வாறு செய்வதால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் அடிப்படையில் பட தயாரிப்பாளர் சி.ஜெ.ஜெயக்குமார் நாளை நீதிமன்றத்தில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

தயாரிப்பாளர் நாளை ஆஜராகி தரும் விளக்கம் மற்றும் நீதிமன்றத்தின் உத்தரவை பொருத்தே படம் வெளியாகுமா என்பது தெரியவரும். இந்த வழக்கில் ஆனந்த விகடன் தயாரிப்பு நிறுவனம் சார்பாக வழக்கறிஞர் என்.ரமேஷ் வாதிட்டார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!