வெளியிடப்பட்ட நேரம்: 11:27 (18/09/2015)

கடைசி தொடர்பு:18:15 (18/09/2015)

மாயா - படம் எப்படி?

  சென்னைக்குப் பக்கத்தில் உள்ள மாயவனம் என்கிற காட்டுக்குள் நடக்கிற மர்மமான நிகழ்வுகளை மையமாக வைத்து ஒரு திரைப்படம் எடுக்கப்படுகிறது.

அதேநேரத்தில், காதல் கணவரை விட்டுப்பிரிந்து ஒருவயதுக் குழந்தையுடன் தோழியின் வீட்டில் தஞ்சம் புகுந்திருக்கும் நயன்தாராவின் வாழ்க்கைப் போராட்டமும் நடக்கிறது. இவ்விரண்டும் சந்திக்கும் புள்ளிதான் மாயா.

பேய்ப்படங்களுக்கே உரிய சகல அம்சங்களும் இந்தப்படத்திலும் நீக்கமற நிறைந்திருக்கிறது. கூடுதலாக எல்லாக்காட்சிகளுமே மிக மெதுவாக நகர்கின்றன. கணவனைப் பிரிந்து குழந்தையை வைத்துக்கொண்டு வேலையும் இல்லாமல் கஷ்டப்படுகிற வேடம் நயன்தாராவுக்கு.

தன்னுடைய கண்களிலும் நடிப்பிலும் அந்த சோகத்தை அவர் வெளிப்படுத்தியிருக்கிறார். புதுப்படத்தில் நடிக்கும் வாய்ப்புக்கேட்டுப் போன இடத்தில், அவருக்குச் சொல்லப்படும் சூழலும் அதற்கு அவருடைய நடிப்பும் சிறப்பு. வசதியான சூழலில் வசிப்பதால் அவர் கடன்தொல்லையால் கஷ்டப்படுகிறார் என்பதை நம்பமுடியவில்லை.

படத்துக்குள் வருகிற படத்தில் ஆரி ஓவியராக நடித்திருக்கிறார். மாயாவின் கதைக்கு ஓவியங்கள் வரைகிறார். கதையை எழுதுகிற எழுத்தாளர் அந்தக்காட்டுக்குள் சென்று மரணமடைவதைத் தொடர்ந்து ஆரியின் நண்பரும் இறந்துபோகிறார்.

அதற்கடுத்து அந்தக்காட்டுக்குள் செல்லும் ஆரியுடன், அந்தப்படத்தை வெளியில் இருந்து பார்த்துக்கொண்டிருக்கும் நயன்தாராவும் சேர்ந்துகொள்கிறார் என்பது எதிர்பார்ப்புக்குரிய திருப்பம். தனக்குக் கொடுக்கப்பட்ட வேடத்தை நன்றாகச் செய்திருக்கிறார் ஆரி.

நயன்தாராவின் தோழியாக நடித்திருக்கும் லட்சுமிபிரியா, திரைப்படஇயக்குநராக நடித்திருக்கும் மைம்கோபி, ஓரிரு காட்சிகளில் மட்டும் வந்துபோகும் ரேஷ்மிமேனன், அவருடைய கணவராக நடித்திருக்கும் அம்சத்கான் ஆகிய அனைவருக்கும் திரைக்கதையில் சரியான பங்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

பேய்ப்படங்களுக்குப் பின்னணிஇசை மிகவும் அவசியம் என்பதை உணர்ந்து செய்திருக்கிறார் இசையமைப்பாளர் யோகன். கதையில் உள்ள சோகத்தை முழுமையாக உணர்த்தும் அளவுக்குப் பாடல்வரிகள் அமைந்திருக்கின்றன.  

சத்யன்சூரியனின் ஒளிப்பதிவு படத்துக்குத் துணையாக இருக்கிறது. இருள்சூழ்ந்த படம் என்பதற்காக நயன்தாராவையும் இருளில் தள்ளிவிடாமல் காட்சிக்குத் தேவையான அழகுடன் காட்ட முயன்றிருக்கிறார். நயனின் வறுமையை முழுமையாக உணரமுடியாமல் போவதைத் தவிர மற்றபடி பொருத்தமாக இருக்கின்றன.

இரண்டு வெவ்வேறு கதைகள் அவற்றை ஓரிடத்தில் இணைப்பது என்கிற கதைக்குப் படத்தொகுப்பில் கவனம் மிகமுக்கியம். மிகஅழகாக இரண்டையும் இணைத்திருக்கிறார் படத்தொகுப்பாளர் டி.எஸ்.சுரேஷ்.

இந்த விஞ்ஞானயுகத்திலும், பேய் இருக்கிறது என்று உறுதியாகச் சொல்லுகிற கதைகளின் வரிசையில் இந்தப்படமும் சேர்ந்துவிட்டது. பாதிக்கப்பட்ட பெண் பேயாக வந்து எல்லாக்காரியங்களையும் செய்கிறார் என்று சொல்கிறார்கள்.

ஒருவர் இறந்தவுடனே பேயாகிவிடுவார், பழி வாங்கப் பல ஆண்டுகள் காத்திருப்பது எதனால்? என்கிற கேள்வி எழுகிறது.

படம் பார்த்துக்கொண்டிருக்கும் நயன்தாரா படத்துக்குள் போனது எப்படி? என்பதில்தான் மொத்தக்கதையும் இருக்கிறது. இரண்டையும் இணைக்கிற இடத்தை புத்திசாலித்தனமாகக் கையாண்டிருக்கிறார் இயக்குநர் அஸ்வின்சரவணன்.

பெரும்பாலான பேய்க்கதைகளுக்கு அடிப்படையாக இருப்பது பாசம்தான். இந்தப்படமும் அதற்கு விதிவிலக்கல்ல. யார் மீது யார் வைத்திருக்கும் பாசம் என்கிற ரகசியத்தைக் கடைசிவரை உடைக்காமல் வைத்திருக்கிறார்கள். கடைசிக்காட்சியில் உள்ள சுவாரசியம் ரசிக்கத்தக்கது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க