தீவிர ரசிகரின் இறுதிஆசையை நிறைவேற்றிய இளையராஜா- கண்ணீர் நிமிடங்கள்

சென்னை அம்பத்தூரை சேர்ந்த ஆர்.எஸ். ரவிச்சந்திரன். 44 வயதாகும் இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. தொடர் புகைப்பழக்கம் கொண்ட இவர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் தொடர்ந்து இருமல் வந்ததால் மருத்துவரிடம் பரிசோதனைக்கு சென்றிருக்கிறார்.

அவரைப் பரிசோதித்ததில் புற்றுநோய் முற்றிய நிலையில் இருப்பதைக் கண்டுபிடித்தனர். ரவிச்சந்திரன் மரணத்தின் வாசலில் இருப்பதை அவரது உறவினர்களிடம் சொன்ன மருத்துவர்கள் அவர் ஆசைப்பட்டதை நிறைவேற்றி வையுங்கள் என்று சொல்லியிருக்கிறார்கள்.

அப்போது ரவிச்சந்திரனிடம் உறவினர்கள் அவரது ஆசையை கேட்க, தீவிர இளையராஜா ரசிகரான ரவிச்சந்திரன் ஒரே ஒரு முறை இளையராஜாவை சந்திக்க வேண்டும் என்று கூறிருக்கிறார். இந்த தகவல் இசைஞானி இளையராஜாவிடம் சொல்லப்பட, அவரும் உடனே வரச்சொல்லுங்கள் என்று கூறியிருக்கிறார்.

அதன்படி உறவினர்கள் அவரை இளையாராஜா இசையமைக்கும்  இசைக்கூடத்திற்கு ரவிச்சந்திரனை அழைத்து வந்தனர். அங்கு இளையராஜா ரவிச்சந்திரனுக்கு ஆறுதல் கூறி பாசத்தோடு விசாரித்தார்.

அப்போது ரவிச்சந்திரன் “ஐயா எண்பதாம் ஆண்டிலிருந்து உங்களின் தீவிர ரசிகன் சோகம் சந்தோஷம் எதுவானாலும் எனக்கு உங்கள் பாட்டுதான். எனக்கு சாமியே நீங்கதான் , உங்க பாடலைக்கேட்காமல் நான் ஒரு நாளும் இருந்ததில்லை ,எனக்கு இது போதும்,  கவலை மறந்து இருப்பேன்யா” என்று கூற நெகிழ்ந்து போன இளையராஜா ரவிச்சந்திரனை முதுகில் தட்டிக்கொடுத்தார். அந்த நிமிடங்களில் ரவிச்சந்திரன் உட்பட  அவரது குடும்பத்தினர் கண்கலங்கினார்கள். உணர்ச்சிவயப்பட்ட நிலையில் இருந்த இளையராஜாவின் கண்களும் கலங்கியிருந்தன. கொஞ்ச நேரம் எதுவும் பேச முடியாதவராகிவிட்டார்.

கடைசியாக ரவிச்சந்திரன் சொன்னது “நான் சொல்லுவதை கேட்டாலும் கேட்காவிட்டாலும் நான் சொல்லுகிறேன் "யாரும் புகைப்பிடிக்காதீர்கள்” என்றார் கண்களில் கண்ணீருடன்..

Do you like the story?

Please Appreciate the Author by clapping!