வியந்து, நெகிழ்ந்து, மகிழ்ந்து- ரஜினி சந்திப்புப் பற்றி கபிலன்

கபாலி படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்துகொண்டிருக்கிறது. படப்பிடிப்பின்போது அப்படத்தில் பாடல்கள் எழுதும் கபிலன் அவரைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். அவரைச் சந்தித்த அனுபவங்களைக் கபிலனிடம் கேட்டபோது, நீண்டஇடைவெளிக்குப் பிறகு அவரைச் சந்தித்தேன். பார்த்தவுடனே மிக சந்தோசமாய் வரவேற்றார்.

சந்திரமுகி படத்தில் நான் எழுதிய பாடல்வரிகளைப் பற்றிச் சொன்னபோது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இந்தப்படத்தில் எழுதும் பாடல்களைப் பற்றிக் கேட்டார். அதன்பின்னர், பல விசயங்களைப் பேசிவிட்டு என்னுடைய குடும்பம் பற்றியும் பேச்சு வந்தது, என் பையன் பெயர் பௌத்தன் என்று சொன்னதும், பௌத்தம் பற்றிப் பேசத் தொடங்கிவிட்டார்.

பௌத்தம் பற்றி மிகவிரிவாகப் பேசத் தொடங்கி சித்தர் பாடல்கள் மற்றும் மகாபாரதக்கதைகள் பற்றியெல்லாம் அவர் பேசியதைக் கேட்டு வியந்துபோனேன். செவிக்கு விருந்து கொடுத்தது போக சாப்பிட்டுவிட்டுப் போகலாம் என்றார்.

அவருடன் அமர்ந்து சாப்பிடத் தயங்கி, நான் இயக்குநருடன் சாப்பிடுகிறேன் என்றேன். உடனே என்னையும் அழைத்துக்கொண்டு இயக்குநர் ரஞ்சித்திடம் போய், கபிலன் என்னுடன் சாப்பிடட்டும் என்றார், நான் நெகிழ்ந்து போனேன்.

எனக்கு என்ன பிடிக்கும் என்று கேட்டு அவற்றைச் சாப்பிடக்கொடுத்தார். என் வாழ்க்கையில் அவரைச் சந்தித்த அந்தநாள் மறக்கமுடியாத நாளாக அமைந்துவிட்டது என்கிறார் கபிலன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!