ரசிகர்களின் இணையச் சண்டைகளை விஜய்யும் அஜித்தும் விரும்புகிறார்களா?

சினிமா என்றாலே பரவச நிலையடையும் சினிமா ரசிகர்களின் உச்சபட்ச கொண்டாட்டம் இந்த இரண்டுவாரங்களில் நடந்தேறியிருக்கிறது.

சென்றவாரம் ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் கபாலி பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும், கமல்ஹாசனின் தூங்காவனம் டிரெய்லரும் வெளியானது.

வித்தியாசமான கெட்டப்பில் ரஜினிநடிப்பதால் அதற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்க்கவேண்டும் என்ற ஆர்வத்தில் ரஜினி ரசிகர்கள் ஒரு பக்கம். அதேநாள் கமல்ஹாசனின் தூங்காவனம் படத்தின் டிரெய்லருக்கான எதிர்ப்பார்ப்பில் கமல் ரசிகர்கள் ஒருபக்கம் ட்விட்டரில் மாறி மாறி ட்ரெண்டுகளையும் தங்களது மகிழ்ச்சிகளையும் வெளிப்படுத்திவந்தனர்.

இரண்டும் ஒரே நாளில் அடுத்தசில மணி நேரங்களுக்கு இடையே வெளியானாலும் இரண்டுமே ஹிட் அடித்தது. ட்விட்டரிலும் ட்ரெண்டானது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் இரு தரப்பு ரசிகர்களிடையே எந்தவித சண்டையோ, கலாய்ப்புகளோ, மீம்ஸ்களோ கிடையாது. ரஜினி, கமல் இருவருமே சமத்துவமான வெற்றியை பகிர்ந்துகொண்டனர் சென்ற வாரத்தில்.

நேற்று சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்திற்கான பெயரும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும், விஜய் நடிக்கும் புலி படத்திற்கான டிரெய்லரும்  வெளியானது. வெளியாகும் போதே இரு நடிகர்களின் ரசிகர்களும் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வந்தனர். அதோடு,  மாறி மாறி இணைய தளத்திலேயே சண்டையும் போட்டனர். 

புலி படத்தின் டிரெய்லரில் ஆமை காட்சிக்குப் பதில் அஜித் போட்டோவை வைத்து மீம்ஸ்கள், அஜித் பட டைட்டிலை கலாய்த்து மீம்ஸ்கள் என்று போட்டி போட்டு கலாய்த்துவருகின்றனர். சென்றவாரம் வெளியான ரஜினி - கமல் படங்களுக்கு இவ்வாறான எந்தப் பிரச்னையும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர்களின் பெயரைச் சொல்லி விஜய், அஜித் ரசிகர்கள் மாறிமாறி அடித்துக்கொள்வது ரசிக்கும் விதமாக இல்லையென்றும், தவறான செயல் என்றும் இணையத்தில் ஒரு சாரர் கருத்துகளைத் தெரிவித்துவருகின்றனர்.

நமக்கு பிடித்தமான நடிகரின் டிரெய்லரோ, போஸ்டரோ வெளியானால் இவ்வாறான சண்டைகள் நடப்பதை சம்பந்தப்பட்ட  நடிகர்கள் விரும்பமாட்டார்கள் என்பதை முதலில் ரசிகர்கள் புரிந்துகொண்டாலே இவ்வாறான சண்டைகள் வராது என்பது திண்ணம். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!