வெளியிடப்பட்ட நேரம்: 19:13 (05/10/2015)

கடைசி தொடர்பு:11:18 (06/10/2015)

'பாகுபலி'யை முந்திய 'புலி' பட வசூல்!

சிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி கடந்த வியாழக்கிழமை ( அக்டோபர் 1 ) அன்று விஜய் நடிப்பில் வெளியான புலி படம் குறித்த விமர்சனங்கள் அப்படத்தின் வசூலை பாதித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில், உண்மை நிலவரம் என்ன என்பதை கடந்த வார சென்னை பாக்ஸ் ஆபீஸ் ரிப்போர்ட் படம் பிடிக்கிறது.

வழக்கமாக விஜயின் படத்திற்கு ஓப்பனிங் நன்றாகவே இருக்கும். முதல் 3 நாட்கள் கலெக்சனே தியேட்டர் உரிமையாளர்களை ஓரளவு தெம்பாக்குவதோடு, படத்தின் பல்ஸையும் வெளிப்படுத்திவிடும்.

இந்நிலையில் விஜயின் முந்தைய எந்த படத்திற்கும் இல்லாத வகையில், புலி படத்தை கடுமையாக கிண்டல், கேலி செய்து சமூக வலைத்தளங்களில் வெளியான விமர்சனங்கள், ஏற்கெனவே வருமான வரித்துறையினரின் ரெய்டால் நொந்து போயிருந்த புலிபடக்குழுவினரை அதிர்ச்சியடைய வைத்தது.

ஒருபக்கம் அஜித் ரசிகர்கள் களமிறங்கி மீம்ஸ்களாக போட்டு தாக்க,  வழக்கமாக வாட்ஸ் அப், ஃபேஸ்புக், ட்விட்டர் மற்றும் ப்ளாக்குகளில் பதிவிடப்பட்ட விமர்சனங்களிலும் பெரும்பாலானவை எதிராகவே அமைந்தன. அதே சமயம் புலி படத்திற்கு எதிரான விமர்சனங்கள் வரம்பு மீறி செல்வதாகவும்,  100 கோடிக்கும் அதிகமாக செலவிடப்பட்டு எடுக்கப்படும் படங்களை இப்படி கணினியின் முன் அமர்ந்துகொண்டு, சினிமா குறித்து போகிறபோக்கில் விமர்சிப்பது சரியா என்ற வாதமும் இன்னொரு தரப்பினரால் முன்வைக்கப்பட்டது. 

ஆனால், " 200, 300 என பணம் கொடுத்து டிக்கெட் வாங்கி படம் பார்க்கும் ரசிகன் என்ற முறையில் பார்க்கும் படத்தை நாங்கள் விமர்சிக்காமல் வேறு யார் விமர்சிப்பார்கள்?  அதுவே படம் நன்றாக இருந்தால், படத்துக்கு வரவேற்பு தெரிவிக்கவும் செய்கிறோமே! இந்த விமர்சனங்கள், சுமாராக போய்க்கொண்டிருந்த படத்துக்கும் வசூல் மழையைக் கொட்டவைக்கவில்லையா? 

அதுமட்டுமல்லாது எங்களது விமர்சனங்களால்தான் படத்தின் வசூல் பாதிக்கப்பட்டது என்று தயாரிப்பாளரோ அல்லது இயக்குநரோ கூறுவதில் அர்த்தம் இல்லை. நன்றாக இருக்கிறது என்று நாங்கள் பாராட்டிய படங்களும் வசூல் ரீதியில் தோல்வி அடைந்துள்ளன. இதற்கு என்ன சொல்வார்கள்? இணையம் மற்றும் மொபைல் போன் போன்றவற்றில் பகிரப்படும் விமர்சனங்கள் நகர்ப்புறங்களில் உள்ள மிகக்குறைந்த சதவிகிதத்தினரிடத்தில் மட்டுமே தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. படம் நன்றாக இருந்தால் மட்டுமே பெரும்பான்மையான ரசிகர்கள் வருகிறார்கள். எதிர்மறையான விமர்சனங்கள் சென்று சேருகிற வேகத்துக்கு, பாராட்டப்படும் விமர்சனங்கள் சென்று சேருவதில்லை என்று வேண்டுமானால் சொல்லலாம்" என்கிறார்கள் வாட்ஸ் அப், ட்விட்டர், ஃபேஸ்புக் விமர்சகர்கள். 

இந்த விவகாரங்கள்  இவ்வாறு இருக்க புலி படத்தின் உண்மையான வசூல் நிலவரம்தான் என்ன என்று  பாக்ஸ் ஆபீஸ் ரிப்போர்ட்டை பார்த்தால், ஓப்பனிங் வசூல் அத்தனை மோசமில்லை என்றே தோன்றுகிறது.

படம் ரிலீஸாகி நேற்று வரை ( 4.10.15) 4 நாட்கள் ஆகிவிட்ட நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் ஏறக்குறைய 32 கோடி ரூபாய் வசூலாகி இருப்பதாக கூறப்படுகிறது. இதில் கேளிக்கை வரியை கழித்தால் வசூல் தொகை ரூ. 27 கோடி வரும். இதில் சென்னையில் மட்டும் முதல் 4 நாட்களில் 2.85 கோடி ரூபாய் வசூலாகி உள்ளதாம். அதாவது சென்னையில் மொத்தம் 465 காட்சிகள் திரையிடப்பட்டு, இவற்றில் 90 சதவிகிதத்துக்கும் அதிகமான இருக்கைகள் நிரம்பி உள்ளன.

இது பாகுபலி படத்தின் வசூலை விட அதிகம் என பாக்ஸ் ஆபீஸ் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அதாவது 'பாகுபலி' தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய 2 மொழிகளிலும் சென்னையில் 363 காட்சிகள் திரையிடப்பட்டு, வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களில் 1.66 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்துள்ளது. அதே சமயம் வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நான்கு நாட்களில் புலி 2.84 கோடி ரூபாயை வசூலித்துள்ளது. ஒரு நாள் சராசரி வருமானத்தை கணக்கிட்டு பார்த்தால் பாகுபலியை புலி முந்தியிருப்பது தெரிகிறது. 'இந்த அளவுக்கான வசூலுக்கு காந்தி ஜெயந்தி விடுமுறையும், போட்டிக்கு வேறு எந்த படங்களும் இல்லாததும்தான் காரணம்' என்கிறார்கள் தியேட்டர் உரிமையாளர்கள். 

இந்நிலையில் விஜய்-க்கு இருக்கும் நட்சத்திர அந்தஸ்து மற்றும்  'குழந்தைகளுடன் சென்று பார்க்கலாம்' என்று எழுந்துள்ள பாசிட்டிவான விமர்சனங்கள் போன்றவை வசூலை மேலும் கூட்டலாம் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர் தியேட்டர் உரிமையாளர்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க