வெளியிடப்பட்ட நேரம்: 15:25 (31/10/2015)

கடைசி தொடர்பு:09:56 (02/11/2015)

ஹீரோக்களுக்கு ஆபத்து? கம்பீரமாகக் களம் இறங்கும் நாயகிகள்

மீபகாலமாக ஹீரோயின்கள் தங்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கதைகளைத் தேர்வு செய்யத் துவங்கிவிட்டனர். முன்னொரு காலத்தில் கே.பாலசந்தர், பாரதிராஜா படங்களில் மட்டுமே ஹீரோயின்களுக்கு அதீத முக்கியத்துவம் அளிக்கப்படும். இப்போது ஹீரோயின்களே அவர்களின் கதாபாத்திரங்கள் எந்த அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளன என்பதை உணர்ந்து நடிக்கத் துவங்கிவிட்டனர்.

இதில் நயன்தாரா, த்ரிஷா, அனுஷ்கா ஆகியோர், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களில் கூட ஹீரோக்களை ஓரம் கட்டத் துவங்கிவிட்டனர். அப்படி சமீபத்தில் ஹீரோயின்களுக்காக அதிகம் பேசப்பட்ட, பேசப்படும் படங்கள் பற்றி சின்ன அலசல்..

மாயா, நீ எங்கே என் அன்பே - நயன்தாரா

டாப் ஹீரோக்கள் இல்லாமல், கதையில் தன்னை அழகாகக் காட்டும் பாடல்களோ, அல்லது ரொமான்ஸ் காட்சிகளோ இன்றி கதைக்கும் தனது கதாபாத்திரத்திற்கும் மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் அமைந்த படங்கள். இந்தப் படங்கள் நயன்தாராவுக்கு சினிமா பயணத்தில் முக்கிய மைல்கற்களாக அமைந்தன. அடுத்தடுத்து அவர் எடுத்துக்கொண்ட படங்களும் நானும் ரவுடிதான் பாணியில் அவரது நடிப்பு மிகவும் பாராட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

த்ரிஷா- நாயகி, என்னை அறிந்தால்

என்னை அறிந்தால் படம் அஜித் படம் தான் என்றாலும் த்ரிஷா மிகச்சில காட்சிகளில் அனைவரின் மனதையும் கொள்ளையடித்துவிட்டார். மேலும் தான் ஏற்றுகொண்ட ஹேமானிகா பாத்திரத்திற்கு வேறு யாரும் சரிப்பட்டு வரமாட்டார்கள் என்னும் அளவிற்கு நடிப்பையும் வெளிப்படுத்த இப்போது தெலுங்கு தமிழ் என உருவாகிறது நாயகி ஹாரர் படம். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு ராஜமௌலியே வாழ்த்தும் பாராட்டுகளையும் தெரிவித்தார்.

இஞ்சி இடுப்பழகி, ருத்ரமாதேவி - அனுஷ்கா

அனுஷ்காவைப் பற்றி நாம் சொல்லவே தேவையில்லை அருந்ததி, பஞ்சமுகி, என தன் கேரக்டரின் முக்கியத்துவத்தைப் பல படங்களில் வெளிப்படுத்தியவர். இப்போது மீண்டும் களம் இறங்கிவிட்டார். ருத்ரமாதேவி வசூல் அளவில் பெரிதாகப் போகவில்லை என்றாலும் அனுஷ்காவின் நடிப்பு பாராட்டப்பட்டது. அதே போல் தற்போது இஞ்சி இடுப்பழகி படம். ஒரு நாயகி படத்திற்காக உடல் எடையை அதிகரித்து நடித்தது என்றால் அனுஷ்காவுக்குத் தான் முதல் பெயர் இருக்கும். போஸ்டர்களில் கூட படத்தின் நாயகன் சாக்லேட் பாய் ஆர்யா ஓரமாகத்தான் நிற்கிறார்.

36 வயதினிலே - ஜோதிகா

ரீஎண்ட்ரி கொடுத்து பேக் டு ஃபார்ம் ஆன ஜோதிகாவின் நடிப்பு வெகுவாகப் பாரட்டப்பட்ட படம். இன்னும் மலையாளத்தின் ஒரிஜினல் வெர்ஷனைக் காட்டிலும் டாப்பில் சென்ற படம் எனலாம். ஜோதிகா வருகிற முதல் காட்சியில் தியேட்டரில் பெண்கள் கைதட்டிய தருணங்களும் அரங்கேறின.

அரண்மனை - ஆண்ட்ரியா, ஹன்சிகா

படத்தின் நாயகன்கள் சுந்தர் சி, வினய் இவர்கள் படங்கள் கூட போஸ்டர்களில் இடம்பெறாமல் ஆண்ட்ரியா, ஹன்சிகாவின் படங்களே போஸ்டர்களில் இடம்பிடித்தன. மேலும் படத்திலும் இருவருக்கும் மிக முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரம் எனலாம்.

கயல் - ஆனந்தி

படத்தின் தலைப்பே ஹீரோயின் கதாபாத்திரம் தான். குண்டு குண்டு கண்கள், முக பாவனைகள் என இளைஞர்கள் மத்தியில் ஆனந்திக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறார்கள்.

சமந்தா - 10 எண்றதுக்குள்ள

வட இந்தியப்பெண்  கேரக்டரில் சுருட்டுப் பிடித்துகொண்டு வில்லியாக யாருமே எதிர்பாராத கேரக்டர் என்றே சொல்ல வேண்டும். ஒரு சமந்தா வெகுளியாக, கிறுக்குத் தனமாக இன்னொரு சமந்தா முற்றிலுமாக பயங்கரப் பார்வை, வில்லி தோரணை என நல்ல வித்தியாசம் காட்டியிருப்பார். இதுகுறித்து விக்ரமே பேட்டிகளில் சமந்தாவை பாராட்டிப் பேசியது குறிப்பிடத்தக்கது. 

சரபம் - சலோனி லூத்ரா

10 எண்றதுக்குள்ள பாணியில் இதிலும் ஒரு நாயகி நல்ல கேரக்டர், மற்றொரு கேரக்டர் வில்லி. கஞ்சா அடித்துகொண்டு வீட்டில் சலோனி அமர்ந்து பேசுவதும், கடைசியில் அப்பாவையே கொன்று விட்டு பெட்ரோல் ஊற்றி எரிப்பதுமாக படம் பெரிதாக போகவில்லை என்றாலும் சலோனியின் பாத்திரம் பேசப்பட்டது. 

 இன்னும் காக்கா முட்டை, ரம்மி, ஐஸ்வர்யா ராஜேஷ், நானும் ரவுடிதான் நயன்தாரா, டார்லிங் நிக்கி கல்ராணி, என சொல்லிகொண்டே போகலாம்.

 விஜயசாந்தி என்ற ஒரு நாயகி மட்டுமே முன்பெல்லாம் ஹீரோயின் முக்கியத்துவம் வாய்ந்த கதைகளில் நடித்தார் இப்போது புதிதாக வரும் நாயகிகள் கூட தனக்கான பாத்திரங்களில் கொஞ்சம் ஈடுபாடு காட்டி படங்களைத் தேர்வு செய்யத் துவங்கி விட்டனர்.

மறைந்த மாபெரும் இயக்குநர் கே.பி படங்களில் மட்டுமே , அவள் ஒரு தொடர்கதை, அவர்கள், சிந்து பைரவி, என பெண்களின் பாத்திரங்கள் ஹீரோக்களை விட வலிமையாக இருக்கும். மீண்டும் அந்த கலாச்சாரம் தொடர்கிறது என்றே சொல்ல வெண்டும். இன்னும் நாயகிகள் இதுபோன்ற பாத்திரங்களை அதிகமாகத் தேர்வு செய்தால் அவர்களுக்கும் ஹீரோக்களுக்கு நிகரான ரசிகர்களும், மாஸ் ஓப்பனிங்குகளும் முக்கியமாக ஹீரோக்கள் வாங்கும் சம்பளம் அளவிற்கு வாங்கும் காலம் வரலாம். 

- ஷாலினி நியூட்டன் - 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்