Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்திய இணையதளங்களில் முதல்முறையாக... ’லாந்தர் டி.வி.’ தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள் - தோட்டா ஜெகன்


அன்பான 'லாந்தர்' டிவி நேயர்களே, இந்த தீபாவளியை கொண்டாட, உங்கள் லாந்தர் டிவி வழங்கும் அருமையான தீபாவளி திருநாள் சிறப்பு நிகழ்ச்சிகள் உங்களுக்காக. 
 
அதிகாலை 6.00 மணிக்கு, தாதா ரவியாக இருந்து  இப்ப சாதா ரவியாக இருக்கும், முன்னாள் நடிகர் சங்க செயலாளர் அண்ணன் ராதாரவி வழங்கும் மங்கள இசை. காது கொடுத்து கேட்க முடியாத கடுகடுக்கும் கல்கண்டு தூய தமிழ் வார்த்தைகளால் அண்ணன் ராதாரவி, 180 டிகிரியில் தலை சாய்த்து விட்டத்தை பார்த்து வார்த்தைகள் கோர்த்து, சொந்தமாக இயற்றிய மங்களகரமான பாடல்களை, காதுக்குள் கால்லிட்டர் கடலெண்ணெயை ஊற்றி, கையளவு குரூடாயில் கலந்து, கொஞ்சம் கடுகும் கறிவேப்பிலையும் போட்டு, கரண்டி விட்டு கிண்டி தாளித்தது போல கலகலவென  பாடும் வசை இசை நிகழ்ச்சி. அதிலும், பழைய லவ் பேர்ட்ஸ் லவ் பேர்ட்ஸ் பாடலை, 'bad வேர்ட்ஸ் bad வேர்ட்ஸ், தக்கதிமிதா, நீ “கா கே கு பி பு” என்ற எழுத்தில் வா'வென கிளாசிக் ரீமிக்ஸ் பாடல்களை பாடி அசத்துகிறார் அண்ணன் ராதாரவி.

காலை 8.00 மணிக்கு, அரசியல் கட்சிகள், ஜாதி சங்கங்கள், இன்னபிற 61 வகை அமைப்புகள், தாளத்தோட அப்பாக்கள், தாளத்தோட அம்மாக்கள், கதை என்னுதுன்னு கடைசி நேரத்தில் கேஸ் போடுபவர்களையும் மீறி தீபாவளிக்கு வெளியாவதாக சொன்ன பாதாளம் மற்றும் பூங்காவனம் படங்கள் வெளியானால், அதனை பற்றிய சிறப்பு பார்வை. ஒருவேளை படங்கள் வெளியாகாவிட்டால், ஏற்கனவே நாங்கள் எடுத்து வைத்திருக்கும் 'நான் நடிக்க வராட்டி டாக்டராயிருப்பேன், என்னை எட்டி உதைச்சீங்கன்னா ஸ்கூட்டர் ஆயிடுவேன், எனக்கு 17 வயசு ஆனா எங்கம்மாவுக்கு கல்யாணமாகல' ரக பேட்டி ஒன்று ஒளிப்பரப்பாவும்.
 
காலை 9.00 மணிக்கு, இந்த வருடம் தமிழக மக்கள் பெரிதும் அவதிப்பட்டது அடி வயிற்று வலியாலா? இல்லை அசத்துற புலியாலா? டாக்டர் 'திண்டுக்கல்' பிரியாணி தலைமையில் தீபாவளி சிறப்பு பட்டிமன்றம். அடி வயிற்றுவலியே அணிக்கு வாதிடுகிறார்கள் முனைவர் பாலமோன் ஆப்பையா  மற்றும்  பேராசிரியை டாரத்தி பாக்ஸர்.  அசத்துற புலியே அணிக்கு வாதிடுகிறார்கள் டாக்டர் குட்டிப்புலி மற்றும் முனைவர் கொடுக்காப்புளி.
 
காலை 11.00 மணிக்கு நடிகை தாரா... தாரா...நயன்தாரா! லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா, தான் டிபன்பாக்சில் சோறு எடுத்துக்கொண்டு அப்பாவோடு எல்.கே.ஜி படிக்க போன அந்நாளிலிருந்து, 'ராஜா ராணி', 'நானும் ரவுடி தான்' என தான் நடிக்கும் படங்களில்லெல்லாம் டாஸ்மாக்கில் அப்பாவுக்கு பீரு வாங்கி தருகின்ற இந்நாள் வரை, தன்னோடு பழகிய முஸ்தபா, அப்துல்லா, முகமது, அகமது, இஸ்மாயில், இன்ஜமாம் உல் ஹக், வாசிக் அக்ரம், வக்கார் யூனிஸ், அஜ்மல் கசாப், பர்வேஷ் முஷாரப் என இதுவரை தன்னோடு பாசத்தோடு பழகி ரம்ஜானுக்கும் பக்ரீத்துக்கும் பிரியாணி போட்ட தனது பாசமிகு நண்பர்கள்  பற்றிய பழைய நினைவுகளில் மூழ்கி மூச்சடைக்கி முத்தெடுக்கும் பாச நிகழ்ச்சி.

பிற்பகல் 2.00 மணிக்கு, 'நாட்டாமையும் ஆட்டுக்குட்டியும்'. இயக்குனர் மிஷ்கின், தான் நாட்டாமை படத்தை எடுத்திருந்தால் எப்படி எடுத்திருப்பார் என விளக்கும் பட்டாசு புரோகிராம். பஞ்சாயத்தை ஆலமரத்தடில தான் வைக்கணுமா? ஏன் மவுண்ட் ரோடு சப்வேல வைக்கக்கூடாதா? அது ஏன் சார் பஞ்சயாத்து பண்ற நாட்டாமை கைல சொம்பு தரீங்க? அவரு பஞ்சாயத்துக்கு போறாரா இல்ல பாத்ரூமுக்கு போறாரா? சார், கொரியாக்காரன் பஞ்சயாத்த அடுத்த லெவல்ல பண்ணிக்கிட்டு இருக்காங்க,, நாம இன்னமும் என்னம்மா இப்படி பண்றீங்களேம்மாலயே இருக்கோங்க. விஜயகுமார் மாருல மஞ்சள பூசமாட்டேன் சார், மஞ்சள் புடிக்கல சார்,  நான் சிமென்ட் கான்கரீட்டையோ சிவப்பு குங்குமத்த பூசிவிடுவேன் சார்’ என செயல்புயலாய் விளக்குகிறார் இயக்குனர் மிஷ்கின்.

பிற்பகல் 3.00 மணிக்கு, நரசிம்மாராவ் ஆட்சியில் இருக்கும் போது ஷூட்டிங் ஆரம்பிக்கப்பட்ட 'இது நம்ம ஆளு' திரைப்படம், வாலு படத்தையும் விட நீளமாகி, இப்போ நரேந்திரமோடி ஆட்சியிலும் முடியாமல் இருக்கும் சந்தோஷ சங்கதிகளை,  இயக்குனர் 'பசங்க' பாண்டிராஜ்  சுவைபட சொல்லும் 'இது நம்ம வாலு' சிறப்பு நிகழ்ச்சி. சிம்புவை வைத்து ஒரு படத்தை இயக்கும் டைரக்டர், படத்தை எடுக்க ஆரம்பித்து முதல் காப்பி முடிப்பதற்குள் எப்படியும் பத்து ஹேப்பி பர்த்டே கொண்டாடிடுவார் என தான் வெட்டிய பர்த்டே கேக்குகளை பேப்பரில் ஒட்டி காட்டுகிறார் பாண்டிராஜ். ஒரு கட்டு சீட்டிலிருந்து ஒன்பது குயின்களை கூட எடுத்திடலாம் என்றும், படத்தின் இசையமைப்பாளர் குறளரசனிடம் இருந்து ஒரு டியூனை எடுப்பது தான் சிரமம் என்று கூறும் பாண்டிராஜ், இசையமைப்பாளர்  போட்டுக்கொடுக்கும் டியூன்கள் உலக பாடல்கள் லெவலில் இருக்கிறதென்றும், சில சமயம் உன்னித்துக் கேட்கையில் அது உலக பாடலாகவே தெரிகிறதென்றும் லங்கர் கட்டை உருட்டுகிறார்.
 
பிற்பகல் 4.00 மணிக்கு, குழந்தைகளுக்கு காம்ப்ளான் கொடுத்து வளர்ப்பவர்கள் மத்தியில் தன் பசங்களுக்கு கம்பராமாயணம் கொடுத்து வளர்த்த எவர்கிரீன் அப்பா அய்யா சிவக்குமார் பங்குபெறும் கம்பராமாயணமும் கால்மணி நேரமும். பார்லியை பிழிந்து பீரெடுப்பதை போல, சொற்களை பிழிந்து சாறெடுத்து, மூன்றே நிமிஷத்தில் முன்னூறு திருக்குறளை மூச்சு விடாமல் ஒப்பிப்பார். பின்னர்  டயர் தேய டாப் கியருக்கு மாறி, கால்மணி நேரத்தில் மொத்த கம்பராமாயணத்தையும் தன் கைகளால் கரைத்து, கிளாசில் ஊத்தி, நம்மை குடிக்க வைத்து, பொறையேறினாலும், 'பிடிச்சவங்க நினைக்கிறாங்க'வென நம் தலையில் தட்டி தெளிய வைக்கும் கலக்கலான இலக்கிய நிகழ்ச்சி.
 
நிகழ்ச்சியின் முடிவில், இது செம்பருத்திப்பூ, இது செவ்வாய்கிரகப்பூ, இது குங்குமப்பூ, இது குஷ்பூ, இது மல்லிகை பூ, இது மத்தாப்பூ, இது அல்லி பூ, இது அரக்கோணம் சந்திப்பு, இது சாமந்திப்பூ, இது செருப்பு, இது பிச்சி பூ, இது பிரபு என அஞ்சே நிமிஷத்தில் ஐநூறு பூக்களின் பெயர் சொல்லி அசத்துகிறார் அய்யா சிவக்குமார்.
 
பிற்பகல் 5.00 மணிக்கு, அவசரஸ்டார் அன்புமணி நடித்த 'நானும் கூட ரவுடி தான்' புத்தம் புதிய மெகா ப்ளாப் திரைப்படம். ஒரு நடுநிலை பள்ளிக்கு முதல்வராய் இருக்கும் கதாநாயகன், தன்னை இந்த நாட்டுக்கே முதல்வராய் எண்ணிக்கொண்டு பட்ஜெட் தயாரிப்பது, முதல் கையெழுத்து போடுவது, மணல் லாரிக்கு பின்னால் எழுதி வைக்கும் வாசகங்களான 'நாம் இருவர் நமக்கு ஒருவர், ஹாரன் அடிக்காதீர், மழை நீர் உயிர் நீர், மாற்றம் முன்னேற்றம், எய்ட்ஸ் ஒரு உயிர் கொல்லி நோய்' போன்ற வார்த்தைகளை எடுத்து போஸ்டர் அடித்து தன்னை வருங்கால அமெரிக்க ஜனாதிபதி முருகேசனாய் நினைத்துக்கொண்டு வாழும் காமெடி கதை. இளைஞர்களின் இதயத்துடிப்பான அனிருத் இசையமைப்பில், ராமதாஸ், அன்புமணியை நினைத்து 'அவர் மீசை அடடடடடா, முதல்வர் ஆசை அப்பப்பப்பப்பா,  மொத்தத்துல அய்யய்யய்யோ'ன்னு பாடும் பாடல் அல்ரெடி திண்டிவனம் தைலாபுரம் ஏரியாவில் அதிரிபுதிரி ஹிட்.
 
மாலை 8.00 மணிக்கு நமது பாரத பிரதமர் பங்குபெறும் 'நான் போகாத டூரும் இல்ல, பார்க்காத ஊரும் இல்ல'. சென்னை தமிழ், கோவைத்தமிழ், மதுரை தமிழ், நெல்லை தமிழ் என ஆரம்பித்து ஜூனுன் தமிழ், டப்பிங் தமிழ் என போகும் தமிழ்களில் தற்பொழுது பேமஸாக இருக்கும் டிஸ்கவரி சேனல் தமிழில், 'இந்த அருவி ரொம்ப உயரமானது, அதனால ஆபத்தானது, இதுல பயணம் செய்யறது பயங்கரமானது, என்னை மாதிரி பல மலைகளுக்கு டூர் போனவங்களால கூட ஏற முடியாதளவு கடினமானது. இதோ இங்க ஒரு காலி ஷாம்பூ பாக்கெட் கிடக்கு, அதை எடுத்துக்குவோம், இந்த மாதிரி பயணங்களில் எல்லாமே நமக்கு உதவும். தண்ணி நம்ம மேல விழும் போது நம்ம கவனம் நாம இடுப்புல கட்டியிருக்கிற துண்டு மேல இருக்கணும். ஓ மை காட், இது நான் நினைச்சதை விட கடினமா இருக்கு' என சுற்றுலா பயணிகளுக்கு குற்றால அருவியை சுற்றிக்காட்டுகிறார் பிரதமர்.
 
இரவு 9.00மணிக்கு அருகம்புல் ஜுஸ் வித் அருக்காணி அக்கா நிகழ்ச்சியில், தாங்கள் காங்கிரசில் கற்றுக்கொண்ட காந்திய கொள்கைகள், கலந்துகொண்ட கொடும்பாவி எரிப்புகள், கோஷ்டி பூசலை மறைக்க தாங்கள் பயன்படுத்தும் கதர் துணி வகைகள் மற்றும் பல விஷயங்களை, நோயில் படுத்திருந்தாலும் வாய் ஓயாமல் பேசி, எதிர்ல இருக்கிறவன் மூச்சை நிறுத்தினாத்தான் தனது பேச்சை நிறுத்தும் நமது அன்பு அருக்காணி அக்காவிடம் பேச வருகிறார்கள் குஷ்பூ, நக்மா மற்றும் விஜயதாரிணி.
 
இரவு பத்து 10மணிக்கு சிறப்பு 'நீயா நைனா?'. ஏசி ஷோரூமில் செருப்பு விற்கும் விலைக்கு இன்று அண்ணாச்சி கடையில் பருப்பு விற்கப்படும் நிலை ஏன் வந்தது? இன்றைய தமிழ் சூழலில், துவரம் பருப்பு துயரம் பருப்பாக மாறியதன் காரணம் என்ன? எதிர்காலத்தில் பருப்பு சாம்பார் வைக்க பேங்க் லோன் கிடைக்குமா? மேலும் பேசுவோம் நமது 'நீயா நைனா?' நிகழ்ச்சியில், மைக்க அவங்கக்கிட்ட கொடுங்களுடன் உங்கள் கோபி.

உங்கள் லாந்தர் டிவியில் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சியை கண்டுக்களியுங்கள், தீபாவளியை கொண்டாடுங்கள்..!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்