டம்மியாக உருவான 'பீப்' பாடல்... சிம்பு, அனிருத்துக்கே தெரியாமல் வெளியானதா?!

நேற்றிலிருந்து அனிருத் இசையில் சிம்பு பாடியதாகச் சொல்லப்படுகிற ஒரு பாடல் இணையதளங்கள் எங்கும் உலவிக்கொண்டிருக்கின்றன. இழிவான ஒரு வார்த்தையை  பீப் ஒலி கொண்டு மறைத்து உருவாக்கப்பட்டிருந்தாலும் திட்டமிட்டே அது என்ன சொல் என்று தெரிகிற மாதிரியும் வைத்திருக்கிறார்கள்.

நல்லவிசயங்கள் பரவ நாளாகும் கெட்டவிசயங்கள் விநாடிக்குள் பரவிவிடும் என்பதற்கேற்ப அந்தப்பாடல் இணைப்புகள் ஒரேநாளில் இணையவெளியெங்கும் பரவிவிட்டன. அந்தப்பாடலில் உள்ள குரல் சிம்புவுடையது போலவே இருக்கிறது.

காதல் குறித்து கருத்துகள் அவருடைய முந்தைய படங்களில் பிரதிபலித்த தொனியில் இருப்பதால் பாடியிருப்பது அவர்தான் என்று ஒரு தரப்பு உறுதியாக நம்புகிறது. அதன் காரணமாக அவருக்கு ஏகமாக எதிர்ப்பும் கிளம்புகிறது. கடுங்கோபம் கலந்த விமரிசனங்களும் சமுகவலைதளங்களில் பரவிக்கொண்டிருக்கிறது. மக்கள உணர்ச்சிமேலிட்டால் சில தகாதசொற்களைச் சொல்வதை ஏற்றுக்கொள்ளமுடியாது என்றாலும் அவ்வளவு கோபத்தை ஏற்படுத்தக்கூடிய பாடல்தான் அது என்பதை மறுப்பதற்கில்லை. இந்தப்பாடலை யார் எழுதி பாடியிருந்தாலும் அவர்கள் சட்டப்படி நடவடிக்கை எடுத்தால் அவர்கள் சிறைக்குச் செல்வது நிச்சயம். அதுவும் சென்னையே பெருவெள்ளப் பாதிப்பில் சிக்கி திக்கி திண்டாடிக் கொண்டிருக்கும்போது, இந்த விபரீத சேட்டை தேவையா என்ற ஆதங்கம் பலருக்கும் ஆவேசத்தை உண்டாக்குகிறது.

சினிமா வட்டாரங்களில் விசாரித்தால் அதிர்ச்சிகரமாக ஒரு தகவல் சொல்கிறார்கள். அதாவது சிம்புவும் அனிருத்தும் பாடல் கம்போஸிங்கின்போது விளையாட்டாக இந்தப் பாடலை பதிவு செய்தார்களாம். சும்மா ஜாலிக்காக அவர்கள் பதிவு செய்த இந்தப் பாடலை, அவர்களுக்கே தெரியாமல் யாரோ ரிலீஸ் செய்துவிட்டார்களாம். இது எந்தளவுக்கு உண்மை என்று தெரியாவிட்டாலும், இதை முழுக்கவும் மறுப்பதற்குமில்லை. ஏனெனில், பாடலில் ஒலிக்கும் குரல் அச்சு அசலாக சிம்புவின் குரலாகவே இருக்கிறது.
இவ்வளவு கடுமையான ஒரு நிகழ்வு இணையவெளிகளில் இருக்கிற நேரத்தில் இதில் சம்பந்தப்பட்டதாகச் சொல்லப்படும் சிம்பு, அனிருத் ஆகிய இருவர் தரப்பிலிருந்தும் பேரமைதி நிலவுவது ஏன் என்று புரியவில்லை. அனிருத் இசைநிகழ்ச்சிக்காக வெளிநாடு சென்றிருக்கிறார் என்று சொல்லி ஏமாற்றிவிடமுடியாது. உலகையே ஒற்றைவிரலால் இணைக்கக்கூடிய கைபேசிகளை வைத்துக்கொண்டிருப்பவர், எனக்குத் தெரியாது என்று சொல்லிவிடமுடியாது.

சிம்பு வழக்கம்போல தகவல் எல்லைக்கு வெளியே  இருக்கிறார் என்கிறார்கள். ஆனால், எங்கிருந்தாலும் தகவல்தொடர்பு சாதனங்களைச் சுயமாகவே கையாளும் திறன்படைத்தவர் அவர் என்பதில் சந்தேகமில்லை. அவரும் அமைதியாக இருப்பது எதனால்? இது என்னுடைய பாடல் இல்லை என்றாவது அவர் சொல்லலாமே. ஒருவேளை இதை அவர் பாடவில்லை என்று வைத்துக்கொண்டாலும் செய்யாத செயலுக்கு விளக்கம் கொடுக்கத் தேவையில்லை என்று சொல்லவும் முடியாது.

ஏனெனில் அவருடைய குரலாகவே ஒலிக்கிறது அந்தப் பாடல். யாராவது மிமிக்ரி செய்திருந்தாலும் உலகம் அவர்தான் பாடியிருக்கிறார் என்று எண்ணும்போது அதற்கு விளக்கம் சொல்லியே ஆகவேண்டும். இல்லையென்றால் அவருடைய மௌனம் சம்மதம் என்றே பொருள் கொள்ளப்படும், இதை எடுத்துக்கொண்டு யாராவது பொதுநலவழக்கு என்று போனால் நிலைமை சிக்கலாகும் என்பதில் மாற்றமில்லை.

அதற்குள் சிம்பு, அனிருத் தரப்பில் விளக்கம் அளிக்கப்படுமா?!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!