பீப் சாங் எதிரொலி: சிம்பு வீட்டை முற்றுகையிட்டு மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!

சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நடிகர் சிம்பு-அனிருத் பாடலுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் சிம்பு வீட்டை முற்றுகையிட்டு மாதர் சங்கத்தினர் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது நடிகர் சிம்புவை கைது செய்ய வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சமூக வலைத் தளங்களில் நடிகர் சிம்பு குரலில், இசையமைப்பாளர் அனிருத் இசையில் வெளியானதாகக் கூறப்படும் 'பீப்' பாடல் தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெண்களை இழிவுப்படுத்தும் நோக்கில் இந்தப் பாடல் உள்ளது என்று சிம்புவுக்கும்,அனிருத்துக்கும் கண்டனம் தெரிவித்து,கோவை,தூத்துக்குடி,சேலம்,கோவில்பட்டி என்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், மாதர் சங்கத்தினரும், மகளிர் அமைப்பினரும் கண்டன ஆர்ப்பாட்டமும், உருவப்பட எரிப்பும் நடத்தி வருகின்றனர். மேலும் கோவை போலீசாரிடம் மாதர் சங்கத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் நடிகர் சிம்புவிற்கும், அனிருத்திற்கும் வரும் 19ம் தேதி நேரில் ஆஜராக சம்மனும் அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை தி.நகரில் உள்ள நடிகர் சிம்புவின் வீட்டு முன்பு இன்று (செவ்வாய்) காலை மாதர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தை சேர்ந்த 100 க்கும் மேற்பட்டோர் திரண்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கையில், சிம்புவை கைது செய்ய வலியுறுத்தும் பதாகைகளை ஏந்தியபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் மற்றும் பெண்கள், சிம்புவின் படத்தை கிழித்தும், கொளுத்தியும் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். மேலும், சிம்புவையும், அனிருத்தையும் விரைவில் கைது செய்ய, தமிழக அரசை வலியுறுத்தியும், பெண்களை கொச்சைப்படுத்தும் வகையில் உருவாகும் பாடல்களை தடை செய்ய வேண்டும் என்று கூறியும் கோஷங்களை எழுப்பினர்.

இதுகுறித்து, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தென் சென்னை மாவட்ட செயலாளர் மரியாள் கூறுகையில், "நடிகர் சிம்பு, பெண்களை ஆபாசப்படுத்தி ஒரு பாடலை எழுதி, இணையத்தில் வெளியிட்டுள்ளார். அனிருத் இசையமைத்துள்ள இந்த பாடல், பெண்கள் மத்தியில் மிகப்பெரிய கொந்தளிப்பையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த பாடலை தடை செய்து, சிம்பு மற்றும் அனிருத் எங்கிருந்தாலும், உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி இந்த ஆர்பாட்டத்தை நடத்தியுள்ளோம். சிம்பு தலைமறைவாக உள்ளதாக கேள்விப்பட்டோம்.

அவர் எங்கு இருந்தாலும் உடனடியாக தமிழக காவல் துறையினர், அவரை கைது செய்ய வேண்டும். அதுவரை, பல்வேறு வடிவங்களில் எங்களுடைய போராட்டம் தொடரும். சில தினங்களுக்கு முன், சிம்பு தன் பெட்ரூமை யாரும் எட்டிப்பார்க்கக் கூடாது எனக் கூறியுள்ளார். ஆனால், அவர் பெட்ரூமில் படுக்கவில்லை. நடுரோட்டில் படுத்துக் கொண்டிருக்கிறார். நடுரோட்டில் இருந்து அவர் எழுந்து கொள்ள வேண்டும். நாங்கள் எழுந்து கொள்ள வைப்போம். மேலும் கானா பாடல்கள் சிலவும் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் உள்ளது. இதுபோன்ற பாடல்களுக்கு, சென்சார் போர்டு அமைக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்துகிறோம்." என்றார்.

செய்தி, படங்கள்: ஜெ. விக்னேஷ் (மாணவ பத்திரிகையாளர்)

Do you like the story?

Please Appreciate the Author by clapping!