ஒழுக்கமற்றவர்களின் ஓலக்குரல்- சிம்பு பாட்டுக்கு கவிஞர்கள் கடும்கண்டனம்

இணையத்தில் வெளியான ஆபாச ‘பீப்’ பாடலால் பொதுஅமைப்புகள் மட்டுமின்றி திரைத்துறையினரர் பலரும் கோபத்தையும், கண்டனத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர். இந்நிலையில் திரைப்படப் பாடலாசிரியர்கள் கூட்டறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது அதில் பாடலுக்கு வலுவான எதிர்ப்பு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,

மதிப்பிற்குரிய பத்திரிகை - தொலைக்காட்சி மற்றும் அனைத்து ஊடக நண்பர்களுக்கும் வணக்கம். சமீபத்தில் திரு.அனிருத் இசையில் திரு.சிலம்பரசன் பாடியதாக வெளிவந்த பாடல் குறித்த கருத்துப் பதிவு. தமிழ்த்திரைப்படத் துறை என்ற மிகப்பெரிய ஊடகத்தில் இருந்து வெளியாகும் படைப்புகளை பெரிதும் ரசிக்கும் ரசிகர்கள் கோடிக்கணக்கான பேர்.

வெகுஜனங்கள் மத்தியில் விரைந்து சேர்ந்து அனைவர் இல்லங்களையும் உள்ளங்களையும் அடைந்து விடும் இப்படைப்புகள் சமூக அக்கறையோடும் பொறுப்போடும் இருக்க வேண்டும். அந்த எல்லை மீறப்படும் போது அது பலர் மனதைப் புண்படுத்துவதாக அமைந்து விடுகிறது. குறிப்பாக சச்சைக்குரிய பாடல் பெண்களை இழிவுபடுத்தும் நோக்கிலும் ஒழுக்கமற்றவர்களின் ஓலக்குரலாகவும் ஒலிக்கிறது. மக்கள் இன்னும் மழை பாதிப்பில் இருந்து மீளாத சூழ்நிலையில் அவர்களின் மனநிலை புரியாமல் பொறுப்பற்ற வன்செயலாகவே இதைப் பார்க்க வேண்டியுள்ளது.

இப்படிப்பட்ட பாடல் சிறு பிள்ளைகள் மத்தியில் பரவிவிட்டால் ஒரு நாகரீகம் இழந்த தொற்று நோய் அவர்கள் மனதில் பதிந்துவிடும். குறிப்பிட்ட பீப் சத்தம் ஏன் என்று கேட்டு மனம் அசுத்தம் அடைவார்கள். இப்பாடல் குறித்து மாணவர் அமைப்புகள், மாதர் சங்கங்கள் பல எழுத்தாளர்கள் தங்கள் எதிர்ப்புக் குரலை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் சூழலில், இந்தக் கூட்டறிக்கை வாயிலாக எங்களது கண்டனத்தையும் பதிவு செய்யக் கடமைப்பட்டுள்ளோம் மக்கள் அங்கீகரிக்கப்பட்டு மிகப்பிரபலமாக இருக்கும் படைப்பாளிகள் - கலைஞர்கள் இப்பொறுப்பினை உணர்ந்து செயல்பட வேண்டும்.

ஒருவேளை திரு.சிலம்பரசன் திரு.அனிருத் தரப்பில் நேற்று கூறப்பட்டது போல் அந்த சர்ச்சைக்குரிய பாடல் அவர்களது படைப்பாக இல்லாது இருக்குமாயின் இந்த கொடும் செயலைச் செய்தவர்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோல் சமூகத்தைச் சீரழிக்கும் பாட்டுகள் படைப்புகள் வெளிவராது செய்ய அனைத்து படைப்பாளிகளும், ஊடகங்களும் ஒன்று பட வேண்டும்

இப்படிக்கு:

 

இந்தக் கூட்டறிக்கையில் புலமைப்பித்தன், முத்துலிங்கம், சினேகன், யுகபாரதி, பா.விஜய், கவிஞர்.யோசி உள்ளிட்ட பலரும் கையெழுத்திட்டுள்ளனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!