'பீப்' பாடல் விவகாரம், சிம்புவை வம்பில் மாட்டிவிடுகிறாரா சரத்?

சிம்பு ஆபாசப் பாடல் விவகாரத்தில் நடிகர் சங்கத் தலைவர்கள் ஏன் கேள்வி கேட்கவில்லை என முன்னாள் நடிகர் சங்கத் தலைவரும், எம்.எல்.ஏ.வுமான சரத்குமார் காட்டமாகக் கேட்டுள்ளார். இசையமைப்பாளர் அனிருத் இசையில், நடிகர் சிம்பு எழுதி, பாடியதாகச் கூறப்படும் பீப் சாங் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சரத்குமார், "பெண்ணையோ, பெண் இனத்தையோ தவறாக சித்தரிக்கின்ற, அது படமாக இருந்தாலும் சரி, பாடலாக இருந்தாலும் சரி... அது வரவேற்கத்தக்கது அல்ல என்பது என்னுடைய கருத்து.

அதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. இந்த பிரச்னை நீண்டு கொண்டிருக்கும்போது, தாமரையின் அறிக்கையை இன்று படித்துப் பார்த்தேன். அவர் என்ன கேட்டு இருக்கிறார் என்றால், சிம்பு இந்தப் பாடலை எழுதியிருந்தாலும், இதைத்தான் நான் இருபது வருடங்களாக, பாடலாசிரியராக வந்தது முதல் சொல்லிக் கொண்டு இருக்கிறேன் என்று சொல்லியிருக்கிறார்கள். ஆக, அவர்கள் சொல்வதைப் பார்க்கும்போது நாம் இதையெல்லாம் ஒப்புக்கொண்டு விட்டோமா? அன்று எழுதியிருக்கிற பாடல் வேறு, இன்று எழுதுகின்ற பாடல் வேறு.

ஏதாவது ஒரு பாடலை நான் சுட்டிக்காட்டினால், அது தவறான பாடலை நான் சொல்கிறேன் என்று வந்துவிடும். தாமரை அறிக்கையை இன்று பார்த்தேன். தரக்குறைவான பாடலை எழுதியது கிடையாது. என் பேனாவும் எழுதவும் செய்யாது என்று அவங்க சொல்லியிருக்காங்க. என்னைப் பொறுத்தவரைக்கும் தவறு என்பது தவறுதான். சிம்பு நான் கோர்ட்டிலேயே சந்தித்து விடுகிறேன் என்று சொல்லியிருக்கிறார். இதுவரைக்கும் நடிகர் சங்கத் தலைவர்கள் கேள்வி கேட்காமல் இருப்பதுதான் எனக்கு வருத்தமாக இருக்கிறது" என்று கூறினார்.

நடிகர்சங்கத் தேர்தலின் போது சிம்பு, சரத்குமார் அணியில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர்சங்கம் சிம்புவுக்கு ஆதரவாகப் பேசவேண்டுமா? எதிராகப் பேச வேண்டுமா? என்பது தெளிவாக இல்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!