மீண்டும் ஃபேஷன் படம்...ஹீரோயின் யார்?

மதூர் பந்தர்கர் இயக்கத்தில், பிரியங்கா சோப்ரா நடிப்பில் 2008 இல் வெளிவந்த "ஃபேஷன்" படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாக உள்ளது. பாலிவுட்டின் வர்த்தக நிபுணர் தரன் ஆதர்ஷ் இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.

சாந்தினி பார், சட்டா, பேஜ் 3 போன்ற படங்களை தந்த மதூர் பந்தர்கர்க்கு "ஃபேஷன்" சிறந்த இயக்குநர் என்ற பெயரையும் விருதையும் வாங்கித் தந்தது, மேலும் இப்படம் பிரியங்காவிற்கு, அந்த ஆண்டின் சிறந்த நடிகைக்கான தேசிய விருதினை பெற்று தந்தது குறிப்பிடத்தக்கது. ஃபேஷன் துறையில் பெண்களின் பலம் மற்றும் பெண்ணியம் பற்றி பேசிய இப்படம் 54 வது ஃபிலிம் ஃபேர் விருதில் 7 விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டதை நாம் மறக்க முடியாது.

கங்கனா ரணாவத் இந்தப் படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருது பெற்றார். தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் 2016ன் மத்தியில் தொடங்கவுள்ளது. இப்படம் முக்கோண காதல் கதையாக எடுக்கப்பட உள்ளதாகவும், இதில் டாப் கதாநாயகிகளில் யாரேனும் ஒருவர் நடிப்பார் என்றும் தரன் ஆதர்ஷ் கூறியுள்ளார்.

பிரியங்காவும், கங்கனாவும் மீண்டும் இப்படத்தில் இணைந்து நடிப்பார்களா, இல்லையெனில் அந்த டாப் நடிகை யார், இம்முறை "ஃபேஷன்" எப்படி உருவாகப் போகிறது என்பது போன்ற ஏராளமான கேள்விகள் ரசிகர்களிடம் ஆவலை ஏற்படுத்தியுள்ளது.

-பிரியாவாசு- 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!