ரீமேக் சினிமாக்களில் எது ஹிட்... எது அவுட்..?!

வழக்கமாக ரீமேக் படங்கள் எடுக்கக்கூடிய ராஜாவே, சொந்தமாக கதை எழுதி தனிஒருவன் ராஜாவான வருடம் 2015. ஆனால், சென்ற வருடத்திலும் பல ரீமேக் படங்கள் வெளியாகின. அவற்றில் எந்தப் படம் ஹிட் எந்த படம் அவுட்? எது பெஸ்ட்? பார்க்கலாம்.

பாபநாசம்:

மலையாளத்தில் வெளியான 'த்ரிஷ்யம்' படத்தின் தமிழ் வெர்ஷன். கன்னடம், தெலுங்கில் ரீமேக் ஆகி பின் தமிழிலும் ரீமேக்க கொஞ்சம் லேட்டானது. ஆனால், சென்ற வருடத்தின் சிறந்த ரீமேக் என பாபநாசத்தைச் சொல்லலாம். ஒரிஜினலை இயக்கிய ஜீத்து ஜோசப்பே இதை இயக்கியதும்  ஒரு காரணம். இன்னொன்று தமிழில் செய்யப்பட்ட சின்னச்சின்ன சுவாரஸ்யமான மாற்றங்கள். மோகன்லாலா? கமலா? என விவாதங்கள் எழுந்ததும். இருவருமே அந்ததந்த மொழியில் சிறப்பு என பேசப்பட்டதும் என படத்தின் ரீச்சும் வேற லெவல்.

ஓரிஜினல் நோட்:

படம்: த்ரிஷ்யம் (மலையாளம், 2013)
இயக்கம்: ஜீத்து ஜோசப்
நடிப்பு: மோகன்லால், மீனா

டார்லிங்:

தெலுங்கில் வெளியான 'பிரேம கத சித்ரம்' வெளியாகி ஹிட்டானது சாதாரண விஷயம் தான். ஆனால் அதன் ரீமேகான 'டார்லிங்' ஹிட்டானது குறிப்பிட வேண்டிய விஷயம். முதல் காரணம் ஐ, ஆம்பள என இரண்டு பெரிய படங்களுடன் வெளியானது, நடிகராக ஜி.வி.பிரகாஷ், இயக்குநராக சாம் ஆண்டன் இருவரும் அறிமுகமாகும் படம் என்ற இரண்டு பெரிய சவால்கள். இரண்டையும் சமாளித்து பாக்ஸ் ஆபீஸில் வசூலை அள்ளியது. காமெடி, திகில் என விருந்து வைத்து ஜீ.விக்கும் ஒரு சேஃபான அறிமுகத்தைக் கொடுத்தது.

ஒரிஜினல் நோட்:

படம்: பிரேம கத சித்ரம் (தெலுங்கு, 2013)
இயக்கம்: மாருதி
நடிப்பு: சுதீர்பாபு, நந்திதா

தூங்காவனம்

ஃப்ரெடிரிக் ஜார்டின் இயக்கிய 'ஸ்லீப்லெஸ் நைட்' ஃப்ரென்ச் படத்தின் தமிழ் உருவாக்கம் தான் தூங்காவனம். ஒரு நாளில் துவங்கி முடியும் கதை, அதை கோலிவுட் ஃபார்மட்டுக்கு ஏற்றது போல கமலின் அக்மார்க் டச்சுடன் வெளிவந்தது. இப்படத்தை கமலின் உதவியாளர் ராஜேஷ் மா செல்வா இயக்கி இயக்குநராக அறிமுகமானார். படத்தில் பாடல்களே இல்லை. ஆனால், ஜிப்ரானின் 'க்ளிட்ச்' இசைநுட்பம் பப்பின் துல்லித்தை அப்படியே பார்வையாளர்களுக்குக் கடத்தியிருந்தது. பாக்ஸ் ஆபிஸ் பொருத்தவரை எதிர்பார்த்த வசூல் இல்லை என்றாலும் தரமான மேக்கிங் இந்த தூங்காவனம். படம் பக்கா பர்ஃபெக்ட். இருந்தாலும், ஒரிஜினல் படத்தின் போஸ்டர் முதற்கொண்டு அப்படியே எடுக்குமளவுக்கு கமலுக்கு என்ன அவசியம்? கமல் இருக்கும் ரேஞ்சிற்கு ரீமேக் படங்களில் ஏன் நடிக்க வேண்டும்? என்ற கேள்விகளையும் எழுப்பியது.

ஒரிஜினல் நோட்:

படம்: ஸ்லீப்லெஸ் நைட் (ஃப்ரென்ச், 2011)
இயக்கம்: ஃப்ரெடிரிக் ஜார்டின்
நடிப்பு: டோமினிக் பெட்டன்ஃபில்ட், அடேல் பென்ச்சரிஃப்

36 வயதினிலே

மலையாளத்தில் மஞ்சுவாரியரின் கம்பேக் மூவி 'ஹவ் ஓல்ட் ஆர் யூ', தமிழில் ஜோதிகாவுக்கு கம்பேக் ஆனது ஒரு ஸ்பெஷல். 'மொழி' படத்திற்குப் பிறகு எட்டு ஆண்டுகள் கழித்து ஜோதிகாவை ஸ்க்ரீனில் பார்க்கும் ஆவலே படத்திற்கு தனி ஈர்ப்பைக் கூட்டியது. அந்த மேஜிக் திரையில் நிகழ்ந்தது படத்தின் வெற்றிக்கு ஒரு காரணமும் கூட. பெண்களின் மதிப்பு, அவர்களின் கனவுகள் போன்ற விஷயங்களைப் பற்றி விஜி எழுதிய வசனங்களும் படத்திற்குக் கூடுதல் பலம் சேர்த்தது.

ஒரிஜினல் நோட்:

படம்: ஹவ் ஓல்ட் ஆர் யூ (மலையாளம், 2014)
இயக்கம்: ரோஷன் ஆண்ட்ரூஸ்
நடிப்பு: மஞ்சுவாரியர், குஞ்சாகோ போபன்

எனக்குள் ஒருவன்

க்ரவுடு ஃபண்டிங் மூலம் மிகக் குறைந்த பட்ஜெட்டில் தயாரான படம் லூசியா. அதுவரை கன்னட சினிமாவை கவனிக்காத எல்லோரையும் கைதட்டி ஆச்சர்யப்பட வைத்த படம். இயக்குநர் பவன் குமார் படத்தின் திரைக்கதை அமைத்தவிதம் தான் படத்தின் மிகப் பெரிய பலமும் கூட. இந்த டொரண்ட் யுகத்தில் கிட்டத்தட்ட எல்லோரும் லூசியாவைப் பார்த்து முடித்த பின் ரீமேக் செய்யப்பட்ட படம் 'எனக்குள் ஒருவன்'. ஒரிஜினலில் நடித்திருந்த ஹீரோவை அழுக்காக பரட்டையாக இருந்த போது அதை நம்மால் ஏற்றுக் கொள்ளும் படியாக இருந்தது. அதுவே அந்த இடத்தில் சித்தார்த்தை பொறுத்திப் பார்த்த போது, ஹேண்சம் சித்தார்த் ஏன் முகத்தில் இருக்கும் கரியை துடைக்காமல் நடித்துக் கொண்டிருக்கிறார்? என்கிற நினைப்பே ஒரு உறுத்தலாக மாறியதால் படத்துடன் ஒன்ற முடியாமல் இருந்தது. படம் எதிர்பார்த்த வெற்றி பெறாததற்கு இதுவும் ஒரு காரணம்.

ஒரிஜினல் நோட்:

படம்: லூசியா (கன்னடம், 2013)
இயக்கம்: பவன் குமார்
நடிப்பு: சதீஷ் நினாசம், ஸ்ருதி ஹரிஹரன்

ஒரு நாள் இரவில்

ஜாய் மேதிவ்ஸ் மலையாளத்தில் எல்லோருக்கும் நன்றாகத் தெரிந்த நடிகர். அவருக்குள்ளும் இருந்த இயக்குநர் வெளியே வந்தது ஷட்டர் எனும் ஒரு படம் மூலம். அதுவரை வேறு ஏதேதோ சினிமாக்களை முயற்சி செய்துகொண்டிருந்த இயக்குநர்களுக்கு மத்தியில் நியூ வேவ் சினிமாவை முயற்சி செய்தார் மேதிவ்ஸ். படமும் ரசிகர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டது, விமர்சனங்களிலும் கொண்டாடப்பட்டது. ஆனால், இதை தமிழில் ரீமேக் செய்த பொழுது, ஒரிஜினலில் இருந்த உணர்வுகளைக் கொடுக்க முடியாமல் தடுமாறியது படம். எடிட்டர் ஆண்டனிக்கு இயக்குநராக இன்னும் அனுபவம் தேவை என உணர்த்தியது.

ஒரிஜினல் நோட்:

படம்: ஷட்டர் (மலையாளம், 2012)
இயக்கம்: ஜாய் மேத்திவ்ஸ்
நடிப்பு: லால், ஸ்ரீனிவாசன்

பா.ஜான்ஸன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!