அட...இறுதிச்சுற்று ஹீரோயின் நிஜத்திலேயே பாக்சரா?

        மாதவன் நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்தி, தமிழ் என இரு மொழிகளிலும் நடித்திருக்கும் படம் இறுதிச்சுற்று. இந்தியில் சால காதூஸ் என்ற பெயரில் வெளியாகவிருக்கிறது. இந்தியின் மெகா ஹிட் படமான பிகே படத்தின் இயக்குநரான ராஜ்குமார் ஹிரானி இந்தப் படத்தின் நான்கு தயாரிப்பாளர்களில் ஒருவர். இப்படத்தின் நாயகியான ரித்திகா சிங்... டிரெய்லர், மற்றும் வா மச்சானே பாடல்களில் அற்புதமான பெர்ஃபார்மன்ஸ் காட்ட, ’யார் இந்தப் பொண்ணு... பளிச்னு பன்ச் அடிக்குதே’ என எதிர்பார்ப்பை எகிறச் செய்திருக்கிறது.

      ரித்திகா சிங் உண்மையில் ஒரு தடகள வீராங்கனை. படத்தின் கதைக்கருவே ஒரு குத்துச்சண்டை மாஸ்டர், அவரின் மாணவிதான் என்பதால் படக்குழுவின் மிகப்பெரிய சவால் கதையின் நாயகியைத் தேர்ந்தெடுப்பதுதான். இப்படத்தின் நாயகி வேட்டையில் தேசிய அளவில் சுமார் 100 பெண்கள் போட்டியிட, அவர்களில் இருந்து தேர்வாகியிருக்கிறார் ரித்திகா. 100 வீராங்கனைகள் 700 போட்டிகளில் கலந்துகொண்ட பெண்களுக்கு மத்தியில் தேர்வான ரித்திகா நிஜத்திலேயே ஒரு பாக்ஸர். அதுவும் தேசிய குத்துச் சண்டை வீராங்கனை. மற்றும் கராத்தேவில் பிளாக் பெல்ட் வாங்கியவர்!

      ரித்திகா குறித்து மாதவன், ”டிரெய்லரிலேயே பலரின் மனதைக் கவர்ந்த ரித்திகா சிங் உண்மையான வீராங்கனை என்பதாலேயே எதார்த்தமாக காட்சிகள் அமைந்தன. மேலும் ரித்திகாவிடம் குத்துச் சண்டை படமென்றோ, அல்லது காட்சிகள் குறித்தோ ஒருமுறை கூட சொல்லவில்லை. அதனால் தான் காட்சிகளில் புதுமையும், புத்துணர்ச்சியும் கொடுக்க முடிந்தது!” என்கிறார் மாதவன்.

      இது சம்மந்தமாக ராஜ் குமார் ஹிரானி, ‘’உண்மையில் ஒரு குத்துச் சண்டை வீராங்கனையை ஹீரோயினாக தேர்வு செய்ததில் பயமாகவே இருந்தது. ஆனால் ரித்திகாவின் ஆடிஷன் டேப்பைப் பார்த்தவுடன் நம்பிக்கை வந்தது. ரித்திகா படத்தில் கொஞ்சம் கூட மேக்கப் இல்லாமல் நடித்திருக்கிறார்!’ என்று சிலாகிக்கிறார்.

      மேக்கப் இல்லாத ரியல் முகம், நடிப்பு இல்லாத ரியல் பாக்ஸிங் என கிட்டத்தட்ட படத்தில் வாழ்ந்திருக்கிறாராம் ரித்திகா. “பாக்சராக நடிப்பதில் என்ன சவால் என்று கேட்டபோது, ” உண்மையான போட்டிகளில் நிஜமாகவே பன்ச் கொடுப்போம், அப்படித்தான் படப்பிடிப்புகள் ஆரம்பித்த வேலையில் நானும் உண்மையாக அடித்தேன். பிறகுதான் மெல்ல மெல்லக் கற்றுக்கொண்டேன். உண்மையான மேட்ச் போன்றும் கடினமாக அடிப்பது போன்றும் நடித்தால் போதும் என்பதை!’

        ’சில காட்சிகளில் கொஞ்சம் சோர்வாக இருக்கும்படி நடிக்கச் சொன்னார்கள். நான் இதுவரை சோர்வாக இருந்ததே இல்லை. அந்தக் காட்சிகளில் நடிக்கத்தான் மிகவும் சிரமப்பட்டு விட்டேன்!’.

 அதானே... ரித்திகாகிட்ட பன்ச் வாங்குனவங்கதான் டயர்ட் ஆகியிருப்பாங்க!

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!