Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மெர்சல் கலைஞனும் மென்டல் ரசிகனும்! - லவ் யூ ரகுமான்

1995. தேனியின் சுமாரான ஒரு இருட்டுக் கூடத்திற்கு என்னை தூக்கிச் சென்றார்கள். பெருங்கூட்டம், மூட்டைபூச்சிக்கடி என நான் மிரள அங்கே நிறைய விஷயங்கள் இருந்தன. திரையில் தோன்றினார் ரஜினி. குழந்தைகளின் சூப்பர் ஹீரோவை எனக்கும் பார்த்தவுடன் பிடித்துப் போனது. அவரின் 'ஒருவன் ஒருவன் முதலாளி' பாட்டை கற்பனையாய் காற்றில் கால் உதைத்து பாடித் திரிந்தேன். எனக்கே தெரியாமல் ரகுமான் என் முதலாளியானார்.

* அதே காட்சி தேஜாவூவாய் மீண்டும் நடந்தது. படையப்பாவில் வெற்றி கொடி கட்டு பாடலில் ரஜினியின் மேனரிசமும், பின்னணி இசையும் சேர்ந்து அதுவரை இல்லாத உற்சாகத்தை அளித்தது. என் ஐந்தாம் வகுப்புத் தேர்வுகளை அந்த தருணத்தில் வைத்திருந்தால் முதல் ரேங்க் நான்தான். அப்படியொரு உற்சாகம். யாரு மியூஸிக் இது என விவரம் தெரிய குழந்தைகளின் கூகுளான அப்பாவிடம் சரணடைந்தேன். பின் தெரிந்தது, ரோஜா, ஜென்டில்மேன், திருடா திருடா, காதலன், கருத்தம்மா என என்னை அப்போது ஆட்கொண்டிருந்த இசை எல்லாம் அவருடையது என. ரகுமான் எனக்குத் தலைவரானார். அவரின் கேசட்கள் நான் அடம் பிடித்து வாங்கும் பொருட்களாயின.

* என் பள்ளிக்கால தேவதை பச்சைநிற யூனிபார்மில் வருவதையும், இவர் 'பச்சை நிறமே பச்சை நிறமே' எனப் பாடல் அமைத்ததையும் என்னால் இப்போது வரை தற்செயல் என ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ரகுமான் என் மனமறிந்த மந்திரக்காரர் ஆனார்.

* பள்ளிக் காலம் முடிந்து பிரிகையில் கண்ணோரம் வியர்ப்பதை, 'அட முஸ்தபா, இதெல்லாம் சகஜமப்பா' என துடைத்தெறிந்த தருணங்களில் அவர் என் அண்ணனானார்.

* ஆஸ்கர் மேடையில் தமிழ்குரல் ஒலித்தபோது குதூகலித்துக் குதித்தவர்களில் நானும் ஒருவன். 'எல்லாப் புகழும் இறைவனுக்கே'- நாத்திகனான நான் கடவுள் மேல் காதலில் விழுந்த மிகச்சில தருணங்களில் அதுவும் ஒன்று.

* பிரேமம் பித்தாய் தலைக்கேறி இருந்த காலங்களில் ரகுமான் எனக்கு நிறையவே கடனும், கையும் கொடுத்திருக்கிறார், நம் எல்லாருக்கும் ஐடியாக்களை அள்ளித்தரும் ஒரு ரகளையான மாமா இருப்பாரே, அவர் போல. என் பெருங்காதலில் ஒளிந்திருந்தது அவரின் மெல்லிய இசை. 

* பின் காதல் கசந்து, காயம் பட்ட காலங்களில், 'வா மச்சி சரக்கடிச்சிட்டு அவளை பத்தி அசிங்கமா பாடலாம்' என ஐடியா தராமல், கடந்து போன காதலைக் கொண்டாட 'எவனோ ஒருவன்' பாடலின் வருடல் இசையால் கற்றுக்கொடுத்த நல்ல 'நண்பன்' அவர்.  

* 127 hours, Million Dollar Arm படங்களின் டைட்டில் கார்டில் அவர் பெயரைப் பார்க்கும்போதெல்லாம் பெயர் தெரியா தேசத்தில் நம்மூர்க்காரர்களை பார்க்கும் பரவசம் தொற்றிக்கொள்கிறது.

* மெர்சலாயிட்டேன், மென்டல் மனதில் என பல்ஸ் பிடித்து துள்ளலாய் இசையமைத்து, 'எப்பவும் நான் யூத் ப்ரோ' என தோள் தட்டி 'ட்யூடாய்' வாட்ஸப் க்ரூப்பில் இணைகிறார்.

* இதோ இப்போது, 'கண்ணெல்லாம் நீயேதான் நிற்கின்றாய்' என என்னை அடுத்த காதலுக்கு தயார் செய்வதில் மும்முரம் காட்டுகிறார் ஒரு 'மெச்சூர்ட் குரு’வாய்!

* டேப் ரிக்கார்டரிலிருந்து வாக்மேனுக்கு, வாக்மேனிலிருந்து சிடி பிளேயருக்கு, அதிலிருந்து எம்.பி.3 பிளேயருக்கு, அதிலிருந்து இந்த ஸ்மார்ட்போன் யுகத்திற்கு என மீடியங்கள் பல மாறினாலும் ப்ளேலிஸ்ட்டில் அவரின் முகம் மாறவில்லை. இந்த யுக மாறுதல்கள் அனைத்திலும் ஆளுமை செலுத்துவதில் இருக்கிறது ரஹ்மானின் வெற்றியும் ரசனையும்!

* அது ஏன் ரஹ்மான் மேல் அப்படியொரு காதல்? நான் வளர வளர அவரும் வளர்ந்தார். அவர் வளர வளர நானும் வளர்ந்தேன். எனவே, அது காதல் மட்டுமல்ல.... அதற்கும் மேலே!

- நித்திஷ்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்