வெளியிடப்பட்ட நேரம்: 13:16 (19/01/2016)

கடைசி தொடர்பு:13:19 (19/01/2016)

சர்ச்சையில் சிக்கிய 'பிச்சைக்காரன்': இட ஒதுக்கீட்டை இழிவுபடுத்துவதாக டாக்டர்கள் புகார்!

இசைஅமைப்பாளர் விஜய் ஆன்டனி ஹீரோவாக நடிப்பில் உருவாகி வரும் பிச்சைக்காரன் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள " கோட்டாவுல சீட்டு வாங்கி டாக்டர் ஆவுறான்... தப்பு தப்பா ஊசி போட்டு சாகடிக்கிறான் ‘’ என்ற பாடலுக்கு சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அச்சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், " திரைப்பட இயக்குநர் அரிகரன் இயக்கத்தில் பிச்சைக்காரன் என்ற திரைப்படம் தயாராகி வருகிறது.

இப்படத்திற்கான விளம்பரப் பாடல் ஒன்று லாகன் எழுதி, விஜய் ஆன்டனி இசை அமைப்பில் யூ டியூபில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பாடல் காட்சிகள் மிகவும் ஆபாசமாக இருக்கிறது. இப்பாடலில் இட ஒதுக்கீடு மூலம் மருத்துவக் கல்வியை பயின்ற தாழ்த்தப்பட்ட , பழங்குடி இன, பிற்படுத்தப்பட்ட , மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த டாக்டர்களை இழிவு படுத்தும் வகையில் பாடல் வரிகள் அமைந்துள்ளன. ``கோட்டாவுல சீட்டு வாங்கி டாக்டர் ஆவுறான் தப்பு தப்பா ஊசி போட்டு சாகடிக்கிறான் ‘’ என்ற பாடல் வரிகள், இட ஒதுக்கீடு மூலம் படித்த டாக்டர்களை மிகவும் மோசமாக சித்தரிக்கிறது.

அந்த டாக்டர்கள் தப்பு தப்பா ஊசிப்போட்டு நோயாளிகளை கொல்லுகிறார்கள் என்பது உண்மைக்கு புறம்பானது மட்டுமல்ல, விஷமத்தனமானது. இட ஒதுக்கீட்டிற்கும், சமூக நீதிக்கும் எதிரானது. இட ஒதுக்கீடு , தகுதி – திறமையை பாதித்து விடுகிறது என்ற தவறான உளுத்துப்போன வாதத்தை மீண்டும் மீண்டும் முன் வைக்கும் முயற்சியாகும். தமிழகத்தில் நீண்ட காலமாக இட ஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது. தற்பொழுது 69 விழுக்காடு இட ஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது. தமிழகம் மருத்துவத் துறையில் முன்னேறி உள்ளது. இந்தியாவின் மருத்துவத் தலைநகரமாக சென்னை உள்ளது.

உலகம் முழுவதிலுமிருந்து ஏராளமான நோயாளிகள் சிகிச்சைக்காக சென்னைக்கு படை எடுக்கின்றனர். சென்னையிலும், தமிழகத்திலும் தலைசிறந்து விளங்கும் மருத்துவர்கள் பெரும்பாலும்,இட ஒதுக்கீட்டின் மூலம் பயின்றவர்கள்தான். அவர்களது திறமையை உலகமே போற்றுகிறது, பாராட்டுகிறது. உண்மை நிலை இவ்வாறு இருக்க, இட ஒதுக்கீட்டின் மூலம் டாக்டர்கள் ஆனவர்களால், நோயாளிகள் இறப்பதாகக் கூறுவது இத்திரைப்படக் குழுவினரின் வக்கிரமான சாதி மேலாதிக்க உணர்வைத்தான் பிரதிபலிக்கிறது. அதுவும , "கோட்டாவில் சீட்டு வாங்கி டாக்டர் ஆவுறான்" எனவும், "சாகடிக்கிறான்" என்றும் ஒருமையில் கூறுவது சாதி மேலாதிக்க வெறியை வெளிப்படுத்துகிறது. இது கண்டிக்கத்தக்கது.

இந்தியா முழுவதும் 406 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இதில் சரிபாதிக்கு மேல் தனியார் மற்றும் தனியார் நிகர் நிலைப் பல்கைலக்கழகத்தை சார்ந்த மருத்துவக்கல்லூரிகள்தான். எனவே, உண்மைக்கு மாறாக திட்டமிட்டு உள்நோக்கத்தோடு, சாதிய மேலாதிக்க வக்கிர உணர்வோடு, ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சார்ந்த மருத்துவர்களை இழிவுப்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது கடும் கண்டனத்திற்குரியது. இந்தப் பாடலுக்கு உடனடியாக தடை விதிப்பதோடு, இந்தத் திரைப்படக் குழுவினர் மீது, குறிப்பாக பாடல் ஆசிரியர், இசை அமைப்பாளர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் மீது சாதிய ரீதியிலான வெறுப்பை தூண்டுவதற்காகவும், ஒடுக்கப்பட்டோரை இழிவுப்படுத்துவதற்காகவும் சட்ட ரீதியான நட வடிக்கைகளை எடுக்க வேண்டும் என சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் தமிழக அரசை கேட்டுக்கொள்கிறது." என்று கூறியுள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க