மனோபாலாவுக்கு ஜெயலலிதா போட்ட உத்தரவு!

தன்னை திட்டியவர்களையும், அதிமுகவை விமர்சிப்பவர்களை மட்டுமே கட்சிக்கூட்டங்களில் விமர்சித்து பேச சொல்லி, ஜெயலலிதா தனக்கு உத்தரவு போட்டிருப்பதாக அதிமுக பேச்சாளரும் இயக்குநருமான மனோபாலா தெரிவித்துள்ளார். அதிமுகவின் நிறுவனரும் முன்னாள் முதல்வருமான எம்ஜிஆரின் 99-வது பிறந்த நாள் பொதுக்கூட்டம், தஞ்சாவூரில் நடந்தது. அமைச்சர் வைத்திலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், சிறப்பு பேச்சாளராக இயக்குநரும் நகைச்சுவை நடிகருமான மனோபாலா கலந்து கொண்டார்.

கூட்டத்தில் அமைச்சர் வைத்திலிங்கம் அதிமுக மற்றும் முதல்வர் ஜெயலலிதா குறித்து பேசினார். அவரைத்தொடர்ந்து மனோபாலா பேசும்போது, “எம்ஜிஆர் முதல்வராக இருக்கும்போது தான் வாழ்ந்த கும்பகோணத்துக்கு வந்தார். அங்கு ஒரு குறிப்பிட்ட வீட்டில் தங்க வேண்டும் என்றார். அவருடன் வந்த உதவியாளர், 'நமக்கு எவ்வளவோ இடம் இருக்கும் போது நீங்க ஏன் அந்த வீட்டில் தங்குறீங்க?' என கேட்டார். 'நான் இரண்டாம் வகுப்பு படிக்கும்போது இந்த வீட்டினர்தான் உதவினாங்க. அதனால்தான்' என்றாராம்” என்று சொல்லிக் கொண்டே போக, அப்போது தொண்டர் ஒருவர் அவர் காதில், 'கருணாநியையும், ஸ்டாலினையும் திட்டி பேசுங்க' என்றார்.

“ஏம்பா, இது புரட்சி தலைவரோட பிறந்தநாள் கூட்டம். அவரை பற்றிப்பேசறேன். இப்பதான அமைச்சர் அவங்களை திட்டிட்டு கிளம்பினார். தன்னை திட்டுபவர்களையும், அதிமுகவை விமர்சிப்பவர்களையும் நீங்க விமர்சித்து பேச வேண்டும் என்றுதான் அம்மா எனக்கு உத்தரவு போட்டிருக்கிறார். திட்டங்கள், சாதனைகள் பத்தி பேச அமைச்சர்கள் இருக்காங்க” எனக் கூறி விட்டு, சம்பிரதாயமாக விஜயகாந்தையும், திமுகவையும் விமர்சித்துவிட்டு கிளம்பியுள்ளார்.

 - கே.குணசீலன்-

Do you like the story?

Please Appreciate the Author by clapping!